Sunday, February 23, 2014

லா.ச.ரா.வின் ‘அபிதா'

எழுத்தாக்கம் : பிரியா

ல்ல புத்தகங்களின் அறிமுகத்திற்காகவே துவங்கப்பட்ட வாசகர் கூடம் பக்கத்தில் என்னுடைய சிறு பங்களிப்பாக  நான்  இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்புதமான காலங்கள் கடந்து நிற்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா.ச.ராமாமிருதம்.


காதல் கொண்ட ஒரு மனதின் பல்வேறு கால கட்ட துடிப்புகளே இந்த நாவல். உடனே இதை ஒரு சாதாரண காதல் கதை என்று நினைக்க வேண்டாம். கதையின் நாயகன் தான் காதலித்த நாயகியை ஒரு கட்டத்தில் பிரிந்து ஊரினையும் பிரிந்து, வெளியூர்  சென்று அங்கே வேறொருவரையும் மணம் புரிந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார், தன்  மனைவியையும் அழைத்துக்கொண்டு!.

ஊருக்கு வந்து தன்னை வளர்த்த தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார். பின் தன காதலியின் வீட்டிற்கு சென்ற பார்க்க அந்த வீட்டில் ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார், அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே. ஒரு கணம் தடுமாறிப் போகிறார். மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்து போகிறார். பின்னர் தான் தெரிய வருகிறது அவருடைய காதலியும், அவருடைய தந்தையும் இறந்து விட்ட செய்தி, அத்துடன் அப்பெண் அவள் காதலியின் மகளென்றும். அந்த வீட்டில் இப்பொழுது அவர் காதலியின் கணவர் தனது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும்.

மனிதர் வேறு எதைப்பற்றியும் கூறாமல் அந்த குடும்பத்தின் பால்ய கால குடும்ப நண்பனாக அங்குள்ளவர்களுடன் பேசி விட்டுச் செல்கிறார். அதன் பின் நிதமும் அந்த வீட்டிற்கு வருவதும் அவர்களுடன்  பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மனைவியும் அவருடன் வந்து அந்த குடும்பத்தில் கலந்து விடுகிறார்.

அவர்கள் அதன் பின் அந்த வீட்டிலேயே தங்குகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் அவர் செய்வது அந்த பெண்ணை (காதலியின் மகளை) பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த இரகசியம். தாயிடத்தில் தொடங்கிய காதல் சேயினிடத்தில் வந்து தேங்கி நிற்கிறது.  இதனை தொடர்ந்து கதை ஒரு வித்தியாசமான பாணியில் பயணிக்கிறது, எதிர்பாராத பல திருப்பங்களுடன், எதிர்பாராத முடிவுடனும்.


நான் படித்த லா.ச.ரா வின் முதல் புத்தகம் இது. முதல் புத்தகத்திலேயே தன் கவித்துவமிக்க எழுத்தினால் கட்டிப் போட்டு விட்டார். பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா  என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாளல். இதை உண்மையில் படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வை வார்த்தைகளாய் விவரிக்க இயலாது. உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா? அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள். உயிர்மை காலச்சுவடு உள்ளிட்ட பல முன்னணி பதிப்பகங்களில் கிடைகிறது.

இணையத்தில் அழியாச்சுடர் பக்கத்தில் இந்நாவலின் ஒரு பகுதி மட்டும் வாசிக்கக் கிடைக்கிறது

குறிப்பு : 
  நான் நாவலின் பலமாய் இங்கே குறிப்பிட்ட அவரின் வார்த்தை நடை அமைப்பையே சிலர் குறையாய் சொல்வதும் உண்டு. லா.ச.ரா வின் எழுத்துக்களை முதலில் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை அவரைப் படித்து உங்களுக்குப் பிடித்து விட்டால் அவரை விட்டு வெளி வருவது மிகவும் கடினம்.


லா.ச.ரா. என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் 1916ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் பிறந்தார். அவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். மனைவி பெயர் ஹேமாவதி. மணிக்கொடி இதழில் எழுத ஆரம்பித்த லா.ச.ரா.வின் பிரசுரமான முதல் கதை ஆங்கிலக் கதை. தலைப்பு: ‘தி எலிபெண்ட்’.
 இவர் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இதுவரை லா.ச.ரா.வின் 6 புதினங்களும், 6 கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற லா.ச.ரா.2007ம் ஆண்டு தனது 92வது பிறந்தநாளில் காலமானார். ‘சிந்தா நதி’ என்ற அவரின் நூலுக்கு 1989ம் வருடம் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

15 comments:

  1. ரகசியத்துடன்... படிக்கத் தூண்டும் சுருக்கமான விமர்சனம்...

    பிரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. // பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாளல்//

    இதுக்காகவே படிக்கணும் போல இருக்கே.. இப்ப இருக்கிற புக்ஸ் எல்லாம் முடிச்சுட்டு வாங்கிக்கறேன்.. :)

    ReplyDelete
  3. "//உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா? அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள்.//" -
    கட்டாயம் படிக்க வேண்டும்.

    ரத்தினச் சுருக்கமான விமர்சனம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சிறப்பான விமர்சனம். படிக்கத்தூண்டியது உங்கள் பகிர்வு....

    விரைவில் படிக்க முயல்கிறேன்.....

    ReplyDelete
  5. விமர்சனமே படிக்க ஆவலை மேலும் ஏற்படுத்திவிட்டது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அழகி படம் பார்த்த ஃபீலிங்க் இருக்கும் போல.

    ReplyDelete
    Replies
    1. இல்லை சகோ ... இக்கதையின் பாதை வேறு...

      Delete
  7. இந்தப் புத்தகத் திருவிழாவில் அவரின் சிறுகதைத் தொகுப்பு இரண்டு பாகம் வங்கி வந்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. புத்தகம் பற்றி முதல் முறை அறிந்து கொள்கிறேன் ... அறிமுகம் அட்டகாசம் ....
    உங்களின் தொடர்ச்சியான உழைப்பு கண்டு வியக்கிறேன் சார் .. என் நன்றிகள்

    ReplyDelete
  9. இராமமிருதத்தின் அபிதா.

    நாவல் வாசிப்பானுபவம், இலக்கியம் தேடுவோர் ஆரம்ப காலகட்டத்தில் படிக்கக்கூடாத நாவலாக எனக்குச் சொல்லியிருந்தார்கள்.

    :-)

    ReplyDelete
    Replies
    1. புதிதாக படிக்கத் துவங்குபவர்களுக்கு லா.சா.ராவின் எழுத்து நடை சற்றே கடினமாக இருக்கும். அதற்காக கூறி இருக்கலாம்.

      Delete
  10. படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்றாக குறித்து வைத்துக்கொள்கிறேன் சார்

    ReplyDelete
  11. கதையின் சுருக்கத்தை படித்ததும், வாங்கி வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது தங்களது விமர்சனம்.

    ReplyDelete
  12. நல்ல விமர்சனம்.....படிக்கத் தூண்டியது!

    ReplyDelete
  13. ஒவ்வொரு நூல்களையும் பற்றி சிறப்பான விமர்சனம் கொடுக்கிறீர்கள் ... படிக்கத்தூண்டுகிறது உங்கள் பகிர்வு.... வாழ்த்துக்கள் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!