Thursday, February 20, 2014

ஜோதிடம் புரியாத புதிர்

நடிகர் ராஜேஷ் - பலவற்றைக் கற்றுத் தெளிந்தவர். நிறைகுடம் நீர் தளும்பாது என்பதற்கான உதாரணம் இவர். பகுத்தறிவாளரான இவர் ஜோதிடத்தைப் பகுத்துப் பார்த்ததில் ஜோதிடம் மெய் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். பின்னர் எதற்காக "ஜோதிடம் புரியாத புதிர்" என்று தலைப்பு வைக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலோ அச்சவுணர்வின் அடிப்படையிலோ ஜோதிடத்தை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை, தானாகக் களமிறங்கி மரத்தடி ஜோதிடர் முதல் மாளிகையில் இருக்கும் ஜோதிடர் வரை அனைவரிடமும் ஆய்வு செய்து ஜோதிடத்தை உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்.


ராணி வார இதழில் வெளியான தொடரின் தொகுப்பை 336 பக்க நூலாக்கி இருநூறு ரூபாய்க்கு நமக்குத் தந்தவர்கள் கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை.
நூலுக்கு வாழ்த்துரை எழுதிய தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் கொஞ்சமாகவும் கவிஞர் பிறைசூடன் அவர்கள் மிகுதியாகவும் சிலாகித்திருக்கிறார்கள். அது அவர்கள் ஆசிரியரின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கூட இருக்கலாம்.

"நம் நாட்டில் பலர் வெளியே இப்படிப் பகுத்தறிவு வேஷம் போட்டுக்கொண்டு திரைமறைவில் ஜோதிடம் பார்த்து பரிகாரம், பூஜை, யாகம் என்றெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப் போலியான பகுத்தறிவு முகமூடியை அணிவதற்கு விருப்பமில்லை. என் பகுத்தறிவுக்கு ஜோதிடம் உண்மையென்று விளங்குகிறது. எனவே அதன் சார்பாக நான் பேசுகிறேன்" என்ற வரிகளில் ஆசிரியர் தான் தேர்ந்த பகுத்தறிவாளர் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறார். மேலும் அவர் பல புத்தகங்களைப் படித்தவர் என்பதை உணர்த்துவதற்கு சர்ச்சில், ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்றவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டுகிறார்.

முதலாவது கட்டுரையில் நட்சத்திரக் குறியிட்டு ஆசிரியர் கேட்டுள்ள கேள்விகள் உண்மையிலேயே நம்மையும் ஆழ்ந்து யோசிக்கவைக்கின்றன. உதாரணத்துக்கு

* ஒருவேளை இறைவன் நம்மைவிட கோடிக்கணக்கான சக்திகளைப் படைத்துள்ளாரா? அந்த சக்தியும் இந்த பிரபஞ்ச சக்திக்குள் அடக்கம் தானா?

* ஹிட்லர் கொலை செய்தது ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர்கள். இவ்வளவு போரையும் கொலை செய்த ஹிட்லருக்கு தண்டனை அவர் செய்துகொண்ட தற்கொலை மட்டும்தானா?

நாடி ஜோதிடம் ஜப்பானில் எப்படி பிரபலம் ஆனது என்பதற்கு சரியான காரணங்களை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து நமக்கு சொல்கிறார் ஆசிரியர். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த தியாக குறிஞ்சி செல்வன் என்பவர் தலைநகர் டோக்கியோவில் நாடி ஜோதிட நிலையம் ஒன்றை ஆரம்பித்துவைத்திருக்கிறார் என்ற தகவலையும் தருகிறார்.

வெங்கட்ராம ஐயர் என்னும் ஜோதிடர் நூலாசிரியரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு 1990ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று முப்பதுக்குள் அவரது வீட்டில் தீ விபத்து நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே பெரிய அளவில் தீ விபத்தும் நடக்க உடனடியாக தீயை அணைத்திருக்கிறார்கள். இதுபற்றி ஜோதிடரிடம் ஆசிரியர் கேட்டபோது அந்த நேரத்தில் சனி வக்கிரமாகிறது, பெரிய பிரச்சனை ஒன்றைக் கொடுக்கும் என்றிருக்கிறார். ஆசிரியரும் அடுத்த நாளே பிர்லா கொலரங்கத்துக்குச் சென்று சனி கிரகம் வக்கிரமாவதைக் கண்டு வியந்திருக்கிறார்.

நண்பன் கொலை பற்றிய கட்டுரையில் நடந்ததை ஆசிரியர் விவரிக்கும் விதத்தில் நமக்கு முதுகுத்தண்டு ஜிலீர் என்கிறது.  வடபழஞ்சி சாமியார் பற்றிய கட்டுரையிலும்  நடிகர் சிவகுமார் அவர்களது தந்தை பற்றிய கட்டுரையிலும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லும் அதே நேரத்தில் பல இடங்களில் வளவளவென்று வார்த்தைகளை இழுத்து நம்மைக் கொட்டாவி விடவைக்கிறார்.

நல்லவேளையாக இது தொடர்கதை இல்லை, இருந்திருந்தால் தொய்வான சில கட்டுரைகளையும் படித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்போம். சில கட்டுரைகளை அதன் தலைப்புகளே சுமாராகவே இருக்கும் என்று உணர்த்துகின்றன. சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் ஒரு கோர்வை இல்லை. 1983-ஆம் ஆண்டு நடந்த அனுபவங்களை சொல்கிறார். அடுத்த கட்டுரையில் தனது பால்ய காலத்தில் நடந்த நிகழ்வுகளை சொல்கிறார். அடுத்த கட்டுரையில் தான் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். நாடி ஜோதிடத்தைப் பற்றி சொல்லும்போது அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வரிசையாக வருவதுபோல் கொண்டுவந்திருக்கலாம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள். 

எழுதப்பட்ட கட்டுரைகள் பலவற்றில் நூலாசிரியரின் சொந்த அனுபவங்களே நிறைந்திருக்கின்றன. அவரது தாத்தா, மாமா, தாய், தந்தை, மகன், மகள் மற்றும் உறவினர்கள், திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள்  பலரது வாழ்வில் ஜோதிடம் குறுக்கிட்டதை நேரில் கண்ட சாட்சியாக நமக்கு விவரிக்கிறார். ஊமை ஜோதிடன், குட்டி ஜோதிடன், சிங்கப்பல் குழந்தை, புகைப்பட ஆரூடம், வெற்றிலை ஜோதிடம் முதல் ஒரு ஜோதிடரிடம் தன்னுடையது என்று தனது நண்பரது ஜாதகத்தைக் காட்டி பல்பு வாங்கிய இடங்கள் என்று அனைத்து கட்டுரைகளும் அனுபவங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கோ ஜோதிடம் பற்றித் தெரிந்துகொள்வதற்கோ ஓரிரு விஷயங்கள் தவிர இந்த நூலில் எதுவும் இல்லை. தனது வாழ்வில் ஜோதிடத்துடனான உறவுமுறை எப்படித் தோன்றியது, தான் எப்படியெல்லாம் ஆய்வு செய்திருக்கிறார், என்னென்ன மாதிரியான ஜோதிடர்கள் இருக்கிறார்கள் என்று பல கட்டுரைகளில் சுவாரஸ்யமாகவும் சில கட்டுரைகளில் தொய்வாகவும் எழுதியிருக்கிறார். ஒரு பகுத்தறிவாளருக்கு எப்படி ஜாதகம், ஜோதிடம், ஆரூடம் போன்றவற்றில் நம்பிக்கை வந்தது என அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் படிக்கலாம்.

30 comments:

 1. சாதாரணமாக பகுத்தறிவாளர்கள் என்று அறியப்படுபவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்காது. ஆனால் இவர் நட்சத்திரக் குறியிட்டு கடவுள் பற்றி கேள்வி கேட்கிறார்.

  ஜோதிடம் ஆவியுலக நம்பிக்கைகள் போன்றவற்றில் பல சொந்த அனுபவங்களாகவே இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. "ஆவி" யுலக நம்பிக்கைகளா? அது என்ன சார்?

   Delete
  2. ஹா...ஹா..ஹா... இந்த ஆவி பேய்,பிசாசு சம்பந்தப்பட்டது ஆவி!!!!

   Delete
  3. இந்த ஆவியும் அப்படிப்பட்ட அமானுஷ்யங்கள் சம்மந்தபட்டது தான்

   Delete
  4. நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் கடவுள் பற்றி மட்டுமல்ல, பல விஷயங்களையும் கேட்டிருக்கிறார். ஆசிரியர் ஒரு பகுத்தறிவாளர் என்பதால் கடவுள் பற்றிய கேள்விகளை குறிப்பிட்டிருக்கிறேன்....

   Delete
 2. சொந்த அனுபவங்களே நிறைந்திருந்தால் சரி தான்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் டிடி அண்ணே, முழுக்க முழுக்க சொந்த அனுபவங்களில் கண்டவற்றை மட்டுமே எழுதியிருக்கிறார்...

   Delete
 3. ஜோசியம், ஆரூடம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ‘ஜோதிடம் என்பது ஒரு கணிதம் மாதிரி. அதை முறையாகக் கற்றவர்களால் சரியாககக் கணித்துச் சொல்லிவிட முடியும். இந்த வகையில் ஏராளமான அரைகுறைகள் பெருகிவிட்டதால் ஜோதிட சாஸ்திரத்துக்கே கெட்ட பெயர்’ என்று இ.சௌ.ராஜன் ஒருமுறை என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. இதுமாதிரி புத்தகங்களில் சுவாரஸ்யம், விறுவிறுப்பை எதிர்பார்த்துப் படிக்கக் கூடாது. அதுசரி... ‘சனி வக்கிரமாவதால் பெரிய பிரச்னை ஒன்றைத் தரும்’ என்பது ஜோதிடமாக இருக்கலாம். அதெப்படி சரியாக ‘தீ விபத்து ஏற்படும்’ என்று கெஸ் பண்ணினார் ஜோதிடர்? &இதுவும் புதிர்தானோ?

  ReplyDelete
  Replies
  1. "பத்த வச்சிட்டியே பரட்டை"

   Delete
  2. நானும் இதே கேள்வியை நினைத்தேன்...

   Delete
  3. தீ, பட்டாசு, மின்சாரம் போன்றவற்றில் விபத்து ஏற்படுவதற்கு ஜாதகருக்கு செவ்வாய் நல்ல நிலையில் இல்லை எனக் கொள்ளலாம்.

   Delete
 4. டைட்டிலை வைத்து சோதிடத்தை நன்கு "உணர்ந்து" கொள்ள வேண்டி ஓடோடி வந்த என்னை இந்த புக் இப்படி ஏமாத்திடுச்சே..

  பகுத்தறிவாளரை வச்சு இந்த விஷயத்த சொல்ல வச்சதுனால தானே இந்த புத்தகத்தை வாங்கனீங்க.. எல்லாம் பிசினஸ் டெக்னிக் பாஸு..

  ReplyDelete
  Replies
  1. ஸ்பைய பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்களே இது உங்களுக்கே அடுக்குமா

   Delete
  2. நிறைய விஷயங்கள் அறிந்த ஒருவர் என்னுடைய விருப்பப் பாடமான ஜோதிடத்தைப் பற்றி எழுதியிருப்பதால் வாங்கினேன்...

   Delete
 5. உங்ககிட்ட வாங்கி படிக்கலாம்னு நினைச்சேன், ஆனா திரும்பவும் முன்னூத்தி சொச்சம் பக்கங்கள்ன்னு நினைக்கும் போது கொஞ்சம் டரியல் ஆகுது, இருந்தாலும் ஒன்றுகொன்று சம்மந்தமில்லாத கட்டுரைகள்ன்னு சொல்றீங்க, இந்த பாடப்புத்தகத்துல ஒரு X போட்டு வட்டம் போட்டு தருவாங்களே, முக்கியமான கட்டுரைகளுக்கு அப்படி போட்டுத்தாங்க படிக்கிறேன் :-)))))))

  ReplyDelete
  Replies
  1. சில முக்கியமான கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கலாம்... குறித்துத் தருகிறேன்...

   Delete
 6. நூல் அறிமுகம் நல்லா எழுதியிருக்கீங்க...ஜோதிடம் உண்மைங்கிறது அவங்கவங்க நம்பிக்கை. என் ஜாதகத்தில் எனக்கு காதல் திருமணம் நடக்கும் என்று ஜோதிடம் சொன்னதால் நான் காலேஜ் போகும்போதெல்லாம் எங்க வீட்ல என்னை பத்தி கொஞ்சம் பயந்துதான் இருந்தாங்க...ஆனா அப்படி எதுவும் நடக்கலை. அறிவு என்பது நம்மிடத்தில்தான்! என் திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணமாத்தான் நடந்தது. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை... ஆனா இறை நம்பிக்கை உண்டு!

  ஜோதிடம் பிஸினஸ் பண்றவங்கள்ல சில பேரு அதுல நல்லா பொழைச்சி பெரிய ஆள் ஆயிடறாங்க... எங்க ஊர்ல எனக்கு தெரிஞ்ச நல்லா ஜோதிடம் சொல்றவங்க கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்காங்க... ஏன் அவங்க எதாவது பரிகாரம் பண்ணிக்கிட்டு ஓஹோன்னு ஆக வேண்டியதுதானே? வாழ்க்கை நம் எண்ணங்களில்தான் உள்ளது. நல்ல நேரம் என்பது கூட நல்ல நேரத்தில் பண்றோம் நல்லா நடக்கும் என்கிற நம் பாஸிட்டிவ் அப்ரோச் தான்........... நடப்பது நடந்து கொண்டுதானே இருக்கும்...... நாம் நல்ல படியா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்...! எண்ணம், செயல் போதும் ...!

  ReplyDelete
  Replies
  1. ஜோதிடம் பொய்யில்லை, ஜோதிடர் தவறாக கணித்திருக்கலாம் உஷா மேடம்... என்னதான் ஜோதிடத்தை முழுக்க முழுக்க நம்பினாலும் நாமாக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடாதவரை எதுவுமே நடக்காது என்பது என் கருத்து...

   Delete
 7. நல்லா விமர்சனம் பண்ணிருக்கீங்க..ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை..இருந்தாலும் அறிவியலாலும் கணிதத்தாலும் சரியாகக் கணித்த சிலவற்றைப் பார்த்து வியப்பாக இருக்கும்..புரியாத புதிர் தான் சகோ!

  ReplyDelete
  Replies
  1. நான் இதுவரை ஜோதிடத்தை கணிதமாகவே பாவித்துவருகிறேன் கிரேஸ் மேடம்... இருந்தாலும் விதி என்ற ஒன்று இருக்கிறது. விதித்ததே நடக்கும்....

   Delete
 8. நல்லதொரு புத்தக விமர்சனம்! ஜோதிடம் கணிதம் சம்பந்தப்பட்டது! எண்கள் இதில் முக்கியம்! இதை சரியாக கணிக்கும் போது பலன்கள் சரியாக இருக்கும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நாம் பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தின் மீது மட்டுமே எனக்கு நம்பிக்கை உண்டு.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா..

   Delete
 9. நூல் விமர்சனம் நல்லா பண்ணியிருக்கீங்க ஸ்பை. சரி, உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கு போல, அதான் இந்த தலைப்பை பார்த்தவுடனே வாங்கிட்டீங்க போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஜோதிடத்தில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை உண்டு சார்... என்னிடம் ஏகப்பட்ட ஜோதிட நூல்கள் இருக்கின்றன.. அனைத்தும் ஒருமுறை படிப்பதற்கு அல்ல, ஆராய்ச்சி செய்வதற்காக reference....

   Delete
 10. நமக்கும் ஜோசியத்துக்கும் நான்கு கிலோமீட்டர் தூரம்ங்கோ !

  ReplyDelete
  Replies
  1. நான்கு கிலோமீட்டரா? பரவாயில்லையே அண்ணே.... நிறைய பேர் ஜோசியம்னா என்னன்னு கேக்கிறாங்க....

   Delete
 11. வித்தியாசமாக தலைப்பாத் தான் இருக்கு.. விமர்சனம் அருமை.

  ReplyDelete
 12. நல்ல விமர்சனம்! சோதிடம் என்பது ஒவ்வொருவர் நம்பிக்கையைப் பொருத்தது! பொதுவாக மிகுந்த நம்பிக்கை இல்லாவிடினும், சோதிடம் என்பது கணக்கு அடிப்படையிலானது! கணக்கு சரியாக இருந்தால் சோதிட கணிப்பும் சரியாகத்தான் இருக்கும்! ஆனால், அதைச் சரியாக கணிக்கும் சோதிடர்கள் இருக்கின்றார்களா என்பது கேள்விக் குறியே! ஆனால் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதாகத் தாங்கள் சொல்லியிருக்கும் அந்த தீ விபத்து உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 13. நல்ல விமர்சனம்.

  படிக்க முயல்கிறேன் ஸ்.பை......

  ReplyDelete
 14. என் உறவினர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்த்தார் பலன்களை CD யிலும் பதித்து கொடுத்துள்ளார் சோதிடர் .. அதை இப்போது கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது ... ஏனெனில் பலவருடங்கள் கழித்து அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அப்படியே நடந்தது ... உண்மையேல் இது ஆச்சரியமே !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!