Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts
Friday, November 7, 2014
குங்குமத்தில் தொடராக இந்த நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிறது, இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்திற்கும் கச்சிதமாக பொருந்திப் போவது தான் ஆச்சர்யம். நாவலின் மையக்கரு போல், தமிழக அரசியலும், அதன் காட்சிகளும் இன்றளவும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பார்த்தாலும் காட்சி மாறாமல் அப்படியே இருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
சுஜாதா அவர்கள் எந்த அரசியல்வாதியையும் பார்த்து எழுதி இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன், ஒரு கணிப்பில் எழுதியிருக்க வேண்டும், அவரது கணிப்பை பொய்த்துப் போகாமல் போற்றிப் பாதுகாத்து வரும் அரசியல் வாதிகளையும், அவர்களை தாங்கிப் பிடித்து வரும் மக்களையும் கண்டு மனம் கொதிக்கத்தான் செய்கிறது. சரி விடுங்கள் இதற்கு மேல் இன்னும் உள்ளே சென்றால் பல சங்கடங்களை சொல்ல வேண்டி வருமென்பதால் இத்தோடு இதற்கு (.)
கதைச்சுருக்கம்:
அரசியல்வாதி சின்னப்பனை எதிர்த்து இடைத்தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகிறார் தன்ராஜ். அதற்கு அணிலாக உதவி புரிகிறான் உதவியாளர் நாகு.
சுயேச்சையாக ஜெயித்த உறுப்பினரை தத்தமது பக்கமிழுக்க முதல்வர் தரப்பும், அதிருப்தி தரப்பும் போட்டி போடுகின்றன. முதல்வர் ஆறுமுகத்தை எதிர்த்துக் கொண்டு அதிருப்தி தரப்பான அரங்கனார் பக்கம் சென்று ஆட்சியை கலைக்க டெல்லி வரை சென்று உதவுகிறார் தன்ராஜ். படித்தவன், அதுவும் சாதூர்யமான பேச்சிருப்பதால் அரங்கரா இவனை விடாமல் இழுத்துக்கொண்டு செல்கிறார்.
இன்னொருபக்கம் ஜமுனா, அவளுடைய கணவன் கோவிந்தராவ் பற்றி செல்கிறது கதை . ஜமுனா விற்கும் , தன்ராஜ்க்கும் இடையே இருக்கும் காதல் என்கிற காம விளையாட்டை நெருடலின்றி எழுதி இருக்கிறார். கோவிந்தராவ் போன்றதொரு அப்பாவியை எங்கேயும் பார்த்திராத அளவிற்கு புனைந்திருப்பது அவ்வளவு சுவாரசியம்.
இன்னொன்று கவர்னர் வர்மா பற்றி சுருக்கமாக சொன்னதே தலை சுற்றவைக்கிறது. குழப்படி வேலை செய்வதும் அதை பாதுகாக்க கோர்த்து விடுவதுமாக கவர்னரின் வேலையை கச்சிதமாக சொல்லியிருப்பது சிறப்பு.
ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்னன்ன வேலைகளை செய்ய முடியுமோ அம்புட்டு வேலைகளையும் செய்வது அட்டகாசம். முதல்வருக்கும், முதல்வராக ஆசைப்படும் அதே கட்சியின் சீனியருக்கும் இடையே நடைபெறும் மோதல்களும் தில்லாலங்கடி வேலைகளையும் எழுத்தில் வெகு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.
தன்ராஜ் தெரிந்தே ஜமுனாவின் வாழ்க்கையை சீரழிப்பதும், அதை தெரிந்துகொண்ட தன்ராஜின் மனைவி திலகவதி பேசும் பேச்சுக்கள் இயல்பு. ஜமுனாவின் வயிற்றில் தன்னோட கருதான் வளர்கிறது என்று அதை உரிமை கொண்டாடும் தன்ராஜ் பண்ணும் வேலைகள் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தாலும் உறுத்தவில்லை.
அரங்கராவின் லீலையை கேசட் பண்ணும் சேட்டைகளிருக்கே செம செம ... படிச்சி பாருங்கள் உங்களுக்கே புரியும்...
தன்ராஜை தேடி முதல்வர் பதவியே வரும் அளவிற்கு குறுகிய காலத்திற்கு வளர்வது தான் உச்சம். முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டானா ? ஜமுனாவும் அவளது குழந்தையும் என்ன ஆனது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
ப்ளஸ்:
ஜமுனாவிற்கும், தன்ராஜ் க்கும் இடையே இளம்வயதில் நடந்த காதல் முறிவை சொல்லாமல் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லியிருப்பது நச்...
திலகவதிக்கும், தன்ராஜ்க்கும் தாலி கட்டாமல் இணைந்து வாழும் இல்லறத்தை போகிற போக்கில் சொல்லிச்சென்றது கூடுதல் அழகு ...
========================================================================
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 384
விலை : 230/-
========================================================================
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 384
விலை : 230/-
========================================================================
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/
Wednesday, May 14, 2014
'சொர்க்கத் தீவு', என் மனதைக் கவர்ந்த சுஜாதாவின் சயன்ஸ் பிக்ஷன் நாவல்கள் வரிசையில் 'என் இனிய இயந்திரா'விற்கு பின் நான் இரண்டாவதாக வைப்பது. அதே சமயம் சொர்க்கத் தீவு சுஜாதா எழுதிய முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கடம்பூர் சுந்தரவரதன் சீனிவாச அய்ங்கார் என்னும் அய்ங்கார் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் இருபத்து எட்டு வயதான திருமணம் ஆகாத இளைஞன். அவனது பணி அவன் கம்பெனிக்கு சொந்தமான ஒரு கம்ப்யூட்டரை பராமரிப்பது. அந்த கம்ப்யூட்டரை IBM மைன்ப்ரெம் போன்ற ஒரு நவீன கணினி. அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வது தான் இவன் வேலை. அமெரிக்காவிடம் இருந்து அவன் கம்பனி வாங்கிய அந்தக் கணினியை திறமையாக கையாள்வதில் இவனை விட்டால் வேறு எவரும் இல்லை. அந்தக் கணினியின் செயல்பாடுகளை அக்கு வேறு ஆணி வேராக அறிந்து வைத்திருந்தான். அந்தக் கம்ப்யூட்டரை உருவாக்கிய அமெரிக்கன் கூட இவன் அந்தக் கம்ப்யூட்டரை கையாளும் விதம் கண்டு பல சமயம் வியந்ததுண்டு.
அய்ங்கார் தனது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த சமயம் லீலா என்னும் பெண் அவளது அண்ணனை தனது தங்கைக்கு பேச இவனை அணுகினாள். லீலாவின் அண்ணன் விமான பைலட்டாக பணி புரிவதாக அவள் சொல்ல, அவரைக் காண இருவரும் விமான நிலையம் செல்கின்றனர். அங்கு அய்ங்கார் தன்னை அறியாமல் ஒரு விமானத்தின் உள் தள்ளப்பட, அந்த விமானம் புறப்படுகிறது. அந்தப் பெண் லீலா தன்னை ஏமாற்றி கடத்திக் கொண்டுவந்ததை அய்ங்கர் அறியும் சமயம், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் எதோ ஒரு தீவில் தரையிறங்குகிறது.
'சொர்க்கத் தீவில்' இறங்கிய அய்ங்கார் முறையாக வரவேற்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து ஊருக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். செல்லும் வழியில் எங்கும் 'சத்யா' என்பவரின் படங்கள் இருப்பதைக் காண்கிறான். மேலும் அந்தத் தீவின் வாசிகள் அனைவரும் ஒரே வகையான புஷ்டியான உடல் கட்டுடன் இருபதைக் கண்டு வியக்கிறான். எதற்காக இங்கு தான் கொண்டுவரப்பட்டோம் என்ற கேள்வி அவனை வாட்டத் தொடங்குகிறது. அவனை சர்வ வசதிகள் பொருந்திய ஒரு அறையில் தங்கவைத்து விட்டு, விரைவில் சத்யா அவனை சந்திப்பார் என்று சொல்லி அவனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த அதிகாரி விடை பெற்றுச்செல்கின்றார்.
சத்யாதான் அந்தத் தீவை இயக்கும் சர்வாதிகாரி என்றும், அந்தத் தீவில் 58 வயதைக் கடக்கும் பிரஜைகள் கொல்லப் படுகிறார்கள் என்ற செய்தியையும் அவன் அறிந்து கொள்கின்றான். மேலும் அந்தத் தீவில் இருக்கும் '2080' என்னும் கம்ப்யூட்டரை பழுது பார்க்க தான் அவன் கடத்திவரப்பட்டான் என்ற உண்மையும் அவனுக்கு புலப்படுகிறது. அந்தத் தீவின் வினோதங்கள் ஒவ்வொன்றையும் அவன் சத்யாவின் பார்வையில் இருந்து அறிகின்றான்.
அந்தத் தீவில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரு வகையான இயந்திரக் கட்டுப்பாட்டில் தான் வளர்க்கப் படுகின்றனர் என்றும் அவர்களுக்கு சில மருந்துகள் கொடுக்கப் பட்டு அவர்களது அடிப்படை மனித உணர்சிகள் கட்டுப்படுத்தப் பட்டு ஒரு வகையான அடிமைத்துவம் வாய்ந்த பிரஜைகளை உருவாக்கு கின்றனர். இவர்களுக்கு உணவு என்பது மாத்திரைகள் தான். அந்தத் தீவில் இருப்பவர்களுக்கு அம்மா, அப்பா, என்னுடையது, உன்னுடையது, காதல், காமம், வெறி, சமூக ஜாதி, கதை, கட்டுரை, நிஜம், பொய், போன்ற ஒன்றும் தெரியாது. அந்தத் தீவில் இருக்கும் மக்கள் அமைதி, சந்தோஷம், ஆண், பெண், விஞ்ஞானம், மனதில் மற்றும் உடலில் வலிமை கொண்ட பொம்மைகள் போல் இயக்கப் பட்டனர்.
அந்தக் கம்ப்யூட்டரை அவன் சரி செய்து விட்டால் அவனை திருப்பி அனுப்பி விடுவதாக சத்யா வாக்களிக்க, இரவு பகல் பாராமல் அந்தக் கம்ப்யூட்டரை பழுது பார்க்கும் பணியில் அய்ங்கார் ஈடுபடுகிறான். இந்நிலையில் அவனை நந்தினி என்னும் பெண் சுய உணர்சிகளுடன் அணுகி அவனது காதலனை சந்திக்க அய்ங்காரை பணியும் பொழுது அவன் அதிர்ந்து போகின்றான். அந்தத் தீவின் சட்ட திட்டங்களை மீறி அவளது காதலன் 'கௌதமை' தனிமையில் சந்திப்பதில் இருந்து கதை வேகம் கொள்கின்றது. கௌதம் நந்தினி இருவரும் அந்தக் கம்ப்யூட்டர் பிழையால் தங்கள் தினசரி மருந்தை உண்ணமால் இருக்க அவர்களுக்கு மனித உணர்சிகள் தோன்றியிருப்பதை கௌதம் வாயிலாக அறிகின்றான்.
சத்யாவின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அய்ங்காரை தன் பக்கம் சேர்ந்துகொண்டு, இந்தத் தீவை கட்டுபடுத்தும் 2080 கம்ப்யூட்டரை அழிக்குமாறு வேண்டுகிறான். நவீனத்துவம் கொண்டு தீவை கட்டுபடுத்தும் சத்யாவின் கண்ணில் மண்ணைத் தூவி அந்த கம்ப்யூட்டரை அழித்து அந்தத் தீவின் மக்களை அய்ங்கார் எப்படிக் காப்பாத்துகின்றான என்பது தான் மீதி கதை.
சுஜாதாவின் மற்ற நாவல்கள் போல் இல்லாமல் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
காரணம் ஒன்று:
இந்தக் கதையின் மையம் 2080 என்னும் ஒரு கம்ப்யூட்டர்.
நான் எனது அலுவலகத்தில் இந்தக் கதையைப் பற்றி சொன்ன பொழுது எனக்கு கிடைத்த பதில் 'என்ன டமில் புக்ல மைன்ப்ரெமா 1!'.
ஆம் இன்று நான் வேலை செய்து கொண்டிருக்கும் மைன்ப்ரெம் கம்ப்யூட்டரை போன்ற ஆனால் அதை விடவும் நவீனத்துவும் வாய்ந்த ஒரு கம்ப்யூட்டரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கற்பனை செய்த சுஜாதாவின் படைப்பாற்றலைப் பற்றி யாரால் வியக்காமல் இருக்க முடியும்.
காரணம் இரண்டு:
விறுவிறுப்பாக சென்ற கதையின் இறுதி பக்கங்களை படித்து விட்டு நான் எதிர்பார்த்த முடிவு ஏற்படாத விரக்தியில் இருந்த பொழுது, கடைசி சில வரிகள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன. சுஜாதாவின் நுண்ணறிவிற்கு சிறந்த சான்றாக இந்தக் கதையின் முடிவு இருப்பதை கண்டு மகிழ்ந்தேன். சுவாரசியத்தை இழக்காமல் இருக்க வாசகர்கள் அந்தக் கடைசி பக்கங்களை காத்திருந்து படிப்பதே நலம்.
******************************************************************************************************
வெளியீடு : வீசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 168
விலை : ரூ. 58
******************************************************************************************************
வெளியீடு : வீசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 168
விலை : ரூ. 58
******************************************************************************************************
காதலுடன்
ரூபக்
Sunday, April 20, 2014
பெயரின் வசீகரத்தில் கணேஷ் வசந்த் கலக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்தில் புத்தகத் திருவிழாவில் வாங்கிய நாவல் இது. சுஜாதா 1983 ல் எழுதியது. செல்போன்கள், இன்டர்நெட் இல்லாத காலத்தில் துப்பறிந்ததை இன்று படிக்கும் பொழுது கொஞ்சம் பழைய பஞ்சாங்கமாக தெரிந்தது. இருந்தும் கதையின் விறுவிறுப்பு நம்மை இதைப் பற்றியெல்லாம் யோசிக்க விடாமல் நகரச் செய்கிறது.
உக்கல் என்ற கிராமத்தில் உள்ள "இராஜராஜன்" கிணற்றை பற்றி ஒரு விரிவுரையாளர் எழுதப் போக, அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை திருடிப் போக ஒரு கும்பல் வருவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அந்த விரிவுரையாளரின் மகள் இனியாவை காதலிக்கும் வசந்த். வசந்தின் சேட்டை, கணேஷின் பொறுமை. உக்கல் கிராமம் சென்று இதைப் பற்றி விசாரிக்க செல்லும் இருவருக்கும் வரும் கொலை மிரட்டல்கள், அங்கே நடக்கும் கொலைகள் என ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றிச் செல்கிறது கதை.சுஜாதாவின் தீவிர வாசகனான எனக்கு இந்தக் கதை எதோ அவசர கதியில் எழுதியது போன்று இருந்தது. கிணறு, ஆராய்ச்சி, துரத்தும் கும்பல் என்றதுமே நம்மால் கதையை ஆரம்பத்திலேயே ஊகித்து விட முடிகிறது. தவிர சில இடங்களில் சினிமா திரைக்கதை போல் வடிவெடுக்கும்போது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. ஒரு கட்டத்தில் கணேஷை சில தடியர்கள் சுற்றி வளைத்து விட்ட நிலையில் அங்கிருந்து தப்பிப்பது அக்மார்க் சினிமாத்தனமான விவரிப்பு. இந்த ஒரு நெருடலைத் தவிர நமக்கு வழக்கமான சுஜாதா ஸ்டைல் எழுத்துகள் அப்படியே இருக்கின்றன.
இனியாவிடம் வசந்த் செய்யும் காதல் லீலைகள், குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கிறது. கணேஷ் தனியாக இனியாவை சந்திக்க செல்லும்போது வசந்த் இருந்திருந்தால் அவளை எப்படியெல்லாம் வர்ணித்திருப்பான் என்று கணேஷ் கற்பனை செய்து பார்ப்பது போன்றவை கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது. கேஸை வெற்றிகரமாக முடித்தபின் இனியாவை வசந்திற்கு திருமணம் செய்துவைக்க கணேஷ் முயற்சி செய்யாதது ஏன் என்பது சுஜாதாவிற்கே வெளிச்சம். (ஒரு வேளை ஜேம்ஸ் பாண்ட் போல் காதல் ரசம் சொட்ட மட்டுமே வசந்த் எனும் கதாப்பாத்திரத்தை படைத்திருப்பாரோ? )
மொத்தத்தில் வசந்த் வசந்த் ஒரு ஜாலியான துப்பறியும் கதை. சுஜாதாவின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக இதைக் கூற முடியாவிட்டாலும் சுஜாதா ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரும் வகையில் இல்லை. உயிர்மை பதிப்பகத்தில் நான் வாங்கிய புதிய பதிப்பின் விலை ரூ.140. ஆனால் அதே புத்தகம் வேறொரு பதிப்பகத்தில் இருபத்தி ஏழு ரூபாய்..
நூலின் பெயர் : வசந்த்! வசந்த்!
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 176
விலை : ரூ.140
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்
சென்னை - 600 018
சென்னை - 600 018
Wednesday, March 19, 2014
Posted by
ரூபக் ராம்
at
4:24 PM
Labels:
காந்தளூர் வசந்தகுமாரன் கதை,
சரித்திர நாவல்,
சுஜாதா
29
comments
'ரத்தம் ஒரே நிறம்' என்பது சுஜாதா எழுதிய முதல் சரித்திர நாவல் என்பதை சீனுவின் பதிவின் மூலம் அறிந்தேன். பின் சுஜாதா எழுதிய மற்றொரு சரித்திர நாவல் 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்பது தெரியவந்தது. இது ராஜ ராஜ சோழன் காலத்தில் நடப்பது போன்ற கதை என்றும், இதில் கணேஷ்-வசந்த் சரித்திர நாயகர்களாக தொன்றிகின்றனர் என்ற தகவல் எனது எதிர்பார்ப்பை கூட்டியது. பொன்னியின் செல்வன் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்துடன், 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' படிக்கத் தொடங்கினேன்.
வசந்தகுமாரன் மது, மாது மற்றும் சூது இவை மூன்றில் முழுகித் தத்தளிக்கும் இளைஞன். அவனது குரு கணேசபட்டர் என்னும் பிரம்மதேயத்துக்காரர். குருவின் அறிவுரை கேட்டு திருந்தி வாழ விரும்பும் வசந்தகுமாரன், துறைமுகம் சென்ற பொழுது ஒரு கிரேக்க நாட்டுக் காரனுடன் குதிரை வியாபாரம் செய்ய முற்படுகிறான். இருவருக்கும் பொதுவாக சோழ நாட்டுப் பெண்கள் மீது இருக்கும் மோகம் காரணமாக அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. அந்த கிரேக்க நட்டானின் காமப் பசிக்கு தீனி போட அவனை ஆட்டசாலைக்கு அழைத்துச் செல்கிறான் வசந்தகுமாரன். அங்கு அந்த கிரேக்க நாட்டான் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவனுடன் வந்த வசந்தகுமாரன் மீது கொலைப் பழி விழுகிறது.
சோழ ராஜ்ஜியத்திற்கு எதிராக சதி செய்யும் பாண்டிய ஒற்றர்கள் தான் அந்த கொலைக்கு காரணம் என்று வசந்தகுமாரன் அறியும் பொழுது, விஷம் பொருந்திய சிற்றம்பால் அவனும் தாக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை செல்கிறான். கணேஷபட்டரின் உதவியுடன் உயிர் பிழைத்து, அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் சமயம், சாலையில் அவன் அபிமதி என்னும் இளவரசியை சந்திக்கின்றான். காவலர்கள் 'நீ எந்த ஊர்?' என்று இவனை கேட்க, இவன் விளையாட்டாக 'காந்தளூர்' என்று சொல்ல, காந்தளூர் சேர நாட்டில் இருப்பதால், இவன் சேர நாட்டு ஒற்றன் என்ற செய்தி சோழ நாடெங்கும் பரவுகின்றது. இளவரசி அபிமதி இவனை காவலர்களிடம் இருந்து காக்க, இருவருக்கிடையிலும் காதல் மலர்கின்றது.
இளவரசி அபிமதியை சாளுக்கிய மன்னன் விக்ரமனுக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்வது பிடிக்காமல், அவள் வசந்தகுமாரனுடன் அரண்மனையை விட்டு தப்பிச் செல்ல, வசந்தகுமாரன் தேச துரோகியாக மாறிவிடுகிறான். இளவரசியை மணக்க இருக்கும் விக்ரமன் இவன் மீது கடுங்கோபம் கொள்கின்றான். கணேஷபட்டருக்கு அரசாங்கத்திலும் ராஜராஜ சோழனிடமும் இருக்கும் செல்வாக்கின் மூலம், வசந்தகுமாரன் நிரபராதி என்று போராடுகிறார். கணேஷபட்டர் வசந்தகுமாரனை தண்டனையில் இருந்து காப்பதும், அவனது காதல் வேல்வதுமே மீதிக் கதை.
புத்தகத்தில் நான் நொந்தவை:
முதல் அத்தியாத்தில் வசந்தகுமாரனும், அந்த கிரேக்க நாட்டானும் சோழ நாட்டுப் பெண்களைப் பற்றி பேசுவது சற்று கொச்சையாகவே இருந்தது.
ஒரு சில காட்சிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் உறையாடும் பொழுது, எந்த வசனத்தை யார் பேசுகின்றனர் என்றத் தெளிவு சரியாக இல்லை.
இழுக்கப்படவேண்டிய காட்சிகள் சுருக்கப்பட்டதும், சுருக்க வேண்டிய சில காட்சிகள் இழுத்ததும் , கதையின் சுவாரசியத்தை குறைக்கின்றன
சரித்திர நாவல் எழுதவேண்டும் என்பதற்காக, இயல்பான கதையில் சரித்திர தடையங்களைப் புதைத்தது போன்ற ஓர் உணர்வு தான் இந்தப் புத்தகத்தை படித்த பொழுது தோன்றியது. உதாரணத்திற்கு காரில் செல்லும் வசந்திற்கு பதிலாக குதிரையில் செல்லும் வசந்தகுமாரனை இதில் காண முடிகின்றது.
'பொன்னியின் செல்வனில்' மிகவும் கம்பீரமாக பார்த்த ராஜராஜ சோழன், இதில் மிக சாதரணமாக காட்சியளிப்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கின்றது. ராஜ ராஜ சோழன் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் 'குந்தவை' இதில் அதே சிறப்புடன் தோன்றுவது ஆறுதல் தருகின்றது.
எல்லாமே குறை என்று சொல்ல முடியாது. சில இடங்களில் பயன்படுத்தப் பட்ட சரித்திரச் சொற்களுக்கு, பக்கத்தின் முடிவில் விளக்கம் தந்தது, பொருள் அறிந்து படிக்க உதவியது.
'ஆணல்ல பெண்ணல்ல' என்று பெண் வேடம் பூண்டு வசந்தகுமாரன் அரண்மனைக்குள் செல்லும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன.
தஞ்சை பெரிய கோயில் கட்டியதால் பொது மக்களுக்கு எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தன என்று பொது மக்கள் வாயிலாக கணேஷபட்டர் அறிவது பாராட்டத்தக்க சுஜாதாவின் டச்.
கல்கியின் சரித்திர நாவல்களை படித்து முடித்த பொழுது தோன்றிய ஒரு வித புத்துணர்ச்சி, இந்த நாவலை முடிக்கும் பொழுது கிடைக்க வில்லை. இவ்வளவு ஏன், சுஜாதாவின் மற்ற படைப்புகளில் இருக்கும் சிறப்புகளில் ஒன்றுகூட இதில் இல்லை என்பது வருத்தம் தான். இந்தக் கதையை முடித்த பின் சுஜாதாவிற்கு அடுத்த பகுதியை தொடர எண்ணங்கள் இருந்த போதும், இந்த முயற்சியை மேலும் தொடராமல் கைவிட்டது உத்தமம் என்றே தோன்றுகிறது.
Sunday, February 2, 2014
லீனியர் மற்றும் நான் லீனியராக நகரும் ரத்தம் ஒரே நிறம், சுஜாதா எழுதிய இரண்டு சரித்திர நாவல்களுள் இதுவும் ஒன்று. தனக்கு சரித்திரம் எழுத வருமா என்ற கேள்வியை தனக்குத்தானே கேட்டுக்கொண்ட பின்னரே எழுதத் தொடங்கிய நாவல் ரத்தம் ஒரே நிறம். இந்த புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசீத்தீர்கள் என்றாலே புரியும், சுஜாதா ஏன் சரித்திர நாவலை எழுத தயங்கினார் என்பது. காரணம் இதன் முதல் சில பக்கங்களிலேயே இதனை எழுதியது சுஜாதாவா இல்லை சுஜாதா பெயரில் வேறு யாரேனுமா என்றெல்லாம் சிந்திக் கத் தொடங்கிவிடுவோம்.
ஆனால் அந்த அயர்ச்சியை எல்லாம் ஒரு சில பக்கங்களிலேயே தூக்கி தூர எறிந்துவிட்டு சரித்திரத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுவார் சுஜாதா. எங்குமே அலுக்காத எழுத்து நடை, தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹாஸ்யம். தேவைப்படதா இடங்களில் கூட நேர்த்தியாக கதை சொல்லும் வல்லமை. நல்லவேளை இந்த கருவை சுஜாதா பிரசவித்துவிட்டார்.
சிப்பாய் கலகம் சிறுகுறிப்பு வரைக?
பள்ளிக்காலத்தில் இப்படியொரு கேள்விக்கு விடையளிக்காமல் உங்கள் சமூக அறிவியல் பாடத்தை நீங்கள் கடந்திருக்கவே முடியாது.
பிரிடிஷ்காரர்கள் தங்களுடைய என்பீல்டு ரக துப்பாக்கியில் பன்றி கொழுப்பினை பயன்படுத்தினார்கள், மேலும் தங்களுடைய ராணுவத்தில் இருந்த இந்திய சிப்பாய்களையும் உபயோகிக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். இதனால் கொதித்தெழுந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் கூட்டாக ஒன்றிணைந்து தங்கள் ரகசிய திட்டம் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள், இதுவே இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் அல்லது முதல் சுதந்திரப் போராட்டம் என்றழைக்கப்படுகிறது.
மேற்கூறிய ஒரு சிறுகுறிப்பைக் கொண்டு ஒரு நாவல் எழுத முடியுமா என்றால் அதையும் சுஜாதா எழுதினால்... அதுதான் ரத்தம் ஒரே நிறம்.
நாவலை படிக்கத் தொடங்குவதற்கு முன் சுஜாதா எழுதிய பழைய மற்றும் புதிய முன்னுரைகளையும், ரா.கி.ர வின் உரையையும் படித்துவிட்டு நாவலினுள் நுழையுங்கள். முன்னுரைகளே அத்தனை சுவாரசியம்.
1857-ல் மதராசபட்டினத்தில் இருந்து தொடங்குகிறது கதை. முத்துகுமரன், பூஞ்சோலை, பைராகி என்ற மூன்று தமிழர்கள். எட்வர்ட் மக்கின்சி, எமிலி அட்கின்சன், ஆச்லீ ப்ரேசர் என்ற மூன்று ஆங்கிலேயர்களையும் பிரதானமாகக் கொண்டு, சிப்பாய் கலகம் என்ற ஒற்றை வரியை மையமாகக் கொண்டு நகரும் கதை.
இதே கதையை முதலில் கருப்பு சிவப்பு வெளுப்பு என்ற பெயரில் குமுதம் இதழில் எழுதத் தொடங்கிய போது ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் இருந்து எதிர்ப்புகளும் கொலைமிரட்டலும் கிளம்பவே அந்த முயற்சியை கைவிட்டுவிட்டார் சுஜாதா. அதே நாவல் இரத்தம் ஒரே நிறம் என்ற பெயரில் மறுவடிவம் பெற்று வெளிவந்துள்ளது. இந்த நாவலில் எந்த ஒரு ஜாதியையும் மையமாகக் கொண்டிராத நிலையில் ஏன் எதிர்ப்பு கிளம்பியது என்பது சுஜாதாவுக்கே தெரியவில்லை.
'மேலும் தொடர்ந்து எழுதினால் என் வலது கையை வெட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். எனக்கு இடது கையால் எழுத வேறு பழக வேண்டும். நிறுத்திவிடுங்கள்' என்று தனக்கே உரிய ஹாஸ்யத்துடன் தனக்கு நேர்ந்த அனுபவத்தை குறிப்பிடுகிறார் சுஜாதா.
ரத்தம் ஒரே நிறம்
தன் தந்தையைக் கொன்ற முரட்டு ஆங்கிலேயே அதிகாரி எட்வர்ட்டை கொன்று பழி தீர்ப்பதற்காக ஆலப்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி கிளம்புகிறான் முத்துகுமரன். இடையில் பூஞ்சோலை மற்றும் பைராகியின் அறிமுகம் கிடைகிறது. இரண்டுமுறை எட்வர்ட்டை கொலைசெய்ய முயன்றும் காயங்களுடன் தப்பிவிடுகிறான் முத்துகுமரன். முதல்முறை பூஞ்சோலையாலும் சிலமுறை ஆஸ்லியாலும் காப்பற்றப்படும் முத்து எட்வர்ட்டை கொன்றானா? என்பது ஒரு கிளைக்கதை.
சென்னையில் கர்னல் நீலின் தலைமையில் இருக்கும் ராணுவத்தில் எட்வர்ட் என்ற முரட்டு இளைஞனும், ஆஷ்லி என்ற தன் பதவிக்கு சற்றும் பொருந்தாத மென்மையான இளைஞனும் பணிபுரிகிறார்கள். இருவருமே எமிலியை காதலிக்கிறார்கள், இருந்தும் எட்வர்ட் தனது முரட்டு குணத்தாலும், தைரியத்தாலும் எமிலியை மணமுடிக்கின்றான். மணமான பின்பும் ஆஷ்லி எமிலியை விரும்புகிறான். எமிலி என்ன ஆனாள்? இது மற்றொரு கிளைக்கதை.
சிப்பாய் கலகம் வர வாய்ப்பிருப்பதாக ஜெனெரல் வீலரிடம் இருந்து தகவல் வர நீலின் தலைமையில் சென்னை ரெஜிமெண்ட் கடல் மற்றும் தரை மார்க்கமாக கல்கத்தா நோக்கி பயணிக்கிறது. இக்குழுவில் எட்வர்ட் தனது மனைவி எமிலியுடனும், ஆஸ்லியும் பயணிக்கிறார்கள். அதே நேரம் பைராகியின் துணையோடு முத்துவும், முத்துவின் விருப்பம் இல்லாமல் பூஞ்சோலையும் வடக்கு நோக்கி நகர்கிறார்கள். மேற்கூறிய இரு கிளைக்கதைகளையும் இணைக்கப்போகும் புள்ளி கான்பூரில் நடைபெற இருக்கும் சிப்பாய் கலகம்.
வெகுநாட்களாகவே எனக்கிருந்த சந்தேகம், ஏன் ஒரு சாதாரண பன்றிக் கொழுப்பிற்காக புரட்சி செய்ய வேண்டுமென்பது. பன்றிக் கொழுப்பிற்காக நடைபெற்ற போராட்டம் அல்ல அது. அக்கொழுப்பை காரணியாகக் கொண்டு ஆங்கிலேயக் கொழுப்பை அடக்க மேற்கொள்ளப்பட்ட புரட்சி என்பதை மிக அழகாக விளக்கியிருப்பார் சுஜாதா.
நோக்குமிடங்களில் எல்லாம் கருப்பன், பார்க்கும் பெண்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கும் வெள்ளையன் என்று அடிமை இந்தியாவில் நாம் எப்படியெல்லாம் அவமானபடுத்தப்பட்டோம், என்னமாதிரியான இன்னல்களையெல்லாம் அனுபவித்தோம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் இந்தநூல் மிகச்சரியான ஆரம்பநூல்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறை மட்டுமல்லாது, நமது மூடநம்பிக்கைகளையும் மிக அழகாக சுட்டிக் காட்டியிருப்பார் சுஜாதா. எட்வர்ட்டும், ஆஷ்லியும் கங்கையில் பயணிக்கும் போது உடன்கட்டை ஏற்றும் அவலத்தை காண நேரிடும். இந்த புத்தகத்தில் நம்மை கலங்கடிக்கச் செய்யும் இடமொன்று உண்டென்றால் அது இந்த சம்பவம் தான். மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். படிக்கும் நம்மை ஒருநிமிடம் உணர்வற்றுப் போகச் செய்துவிடும். நல்லவேளை ஒழித்துவிட்டார்கள். ராஜாராம் மோகன்ராய்க்கும், வில்லியம் பெண்டிங் பிரபுவுக்கும் நன்றி.
சிப்பாய் கலகத்தின் போது இந்தியர்கள் செய்த வன்முறைகள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் செய்த வன்முறைக்கு வன்முறைகள் என்று நாவல் முழுவதுமே ஒரே ரத்தமயம்தான், என்னவொன்று எல்லா இடங்களிலும் சிந்தப்பட்ட ரத்தங்களின் நிறமும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நாவல் இது.
எழுத்தாளர்கள் ஜெயமோகனும், எஸ் ராமகிருஷ்ணனும் பரிந்துரைத்த நூறு சிறந்த தமிழ் நாவல்களில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு சுஜாதாவின் நூல் உண்டென்றால் அது ரத்தம் ஒரே நிறம் நாவல் தான். ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல். முத்துகுமரனையும் பூஞ்சோலையையும் தெரிந்து கொள்வதற்காக அல்ல. எட்வர்ட்டையும், ஆஷ்லியையும் தெரிந்துகொள்வதற்காக.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
Subscribe to:
Posts (Atom)


