Sunday, April 6, 2014

நீலகேசி - சரித்திர மர்ம நாவல்!

னவரியில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இந்நாளில் சரித்திரத்தை சுவாரஸ்யமாக எழுதும் எழுத்தாளர்கள் இல்லையே என்ற ஆதங்கம் என்னுள்ளிருந்ததால் பின் அட்டைக் குறிப்பு மற்றும் எழுத்தாளரின் உரை ஆகியவற்றைப் படித்துவிட்டு இந்தச் சரித்திரக் கதையை வாங்கினேன். பொதுவாய் புத்தகங்களை படிக்கும்படி வாசகனை உள்ளிழுப்பதில் அதன் அழகான அட்டைப்படத்துக்கும் ஒரு பங்கு உண்டு. இந்த நூலின் அட்டைப்படம் அப்படிக் கவராததால் ஓரமாகப் போட்டு வைத்து விட்டேன். சென்ற வாரம் ஓர் (அ)சுபதினத்தில் இரவு 2 மணிக்குப் போன மின்சாரம் மறுதினம் பகல் 2 மணிக்கு வந்த இடைநேரத்தில் இதைக் கையிலெடுத்தவன் அன்று மாலையில் இதை முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன். வாழ்க தமிழக அரசு!

மிழ்நாடு சேரர்,. சோழர், பாண்டியர் என்று மூவேந்தர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மன்னர் பரம்பரையினர் மேலோங்கி ஆதிக்கம் செலுத்த, மற்ற வேந்தர்கள் சிற்றரசர்களாக இருப்பதை வரலாற்றில் காணலாம். சேரர்கள் பலம் ஓங்கியிருந்த காலகட்டத்தில் இக்கதை புனையப்பட்டிருக்கிறது. இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்றதால் இமயவரம்பன் என்று சிறப்புப் பெயர் கொண்ட நெடுஞ்சேரலாதன் காலத்தில் கதை நிகழ்கிறது. சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் காலத்தில் எரித்திரியக் கடலில் உலாவி வந்த கடற்கொள்ளையர் முசிறி, தொண்டி துறைமுகங்களில் பெரும் தொல்லை கொடுத்து வந்ததை முற்றிலுமாக அழித்தான் என்பது வரலாறு கூறும் செய்தி. அந்தச் செய்தியுடன் பாண்டியப் பேரரசின் சிக்கலையும் இணைத்து ‘நீலகேசி’ என்ற இந்த சுவாரஸ்யமான கற்பனைப் புதினத்தை வனைந்திருக்கிறார் ‘பரதவன்’.

பாண்டிய உபசேனாதிபதி இளையநம்பியிடம் தான் இளவரசனாக இருந்தபோது காதலித்த பெண்ணைப் பற்றியும், அரசனானதும் சூழ்நிலைகளால் அவளை அடைய முடியாமல் போனதையும். அவளின் அண்ணன் ஒருவன் மட்டும் கடுஞ்சினத்தோடு தன்னிடம் சண்டையிட்டதையும், பின்னொரு சமயம் அவன் (இயக்கன்) பாண்டிய நாட்டின் பொக்கிஷம் ஒன்றை (மலயத்துவஜ பாண்டியனின் வாள், கிரீடம்) கொள்ளையிட்டுச் சென்றதையும் கூறி. அதனை மீட்டு வரும்படியும். பாண்டிய சேனாதிபதியாக இருந்து தற்சமயம் கொள்ளைக்காரனாக மாறிவிட்ட ஆதன் அழிசி என்பவனைக் கைது செய்து வரும்படியும் இரட்டைப் பொறுப்புகளை தருகிறான் பாண்டிய மன்னன். (ஹை! சாண்டில்யன் மாதிரி நானும் நீள வாக்கியம் எழுதிட்டேனே..!) இயக்கன் என்ன காரணத்தாலோ முகத்தை மறைத்து உலவுவதாக இளைய நம்பிக்குத் தகவல் தருகிறான் பாண்டியன். தொண்டிக்கு இளையநம்பி வர, அத்துறைமுகம் கடற்கொள்ளையரால் திடீரென ஆக்கிரமிக்கப்படுகிறது.

அந்த இரவில் எதிர்பாராத இரண்டு சம்பவங்களில் அவன் சிக்கிக் கொள்கிறான். 1) ஹீரா என்ற யவன அழகியை காப்பாற்றப் போய் கடற்கொள்ளையர் தலைவனான நாகனின் தம்பி இளநாகனைக் கொன்று விடுகிறான். 2) அவளை அவள் அணணனிடம் சேர்த்துவிட்டு வருகையில் சேர இளவரசி இமயவல்லி குறுவாளால் குத்துப்பட்டுக் கிடப்பதைக் கண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவள் மூலம் கொள்ளையர்கள் சேரனின் அன்புக்குப் பாத்திரமான புலவர் கண்ணனாரை கடத்திச் சென்று விட்டதையும், கடல்வழி, தரைவழி தொடர்புகளை அடைத்து விட்டதையும் அறிகிறான். இவ்ற்றின் விளைவாக தொண்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி சேர இளவரசி வேண்டியதை அவனால் மறுக்க இயலாமல் பொறுப்பு ஏற்கிறான் இளையநம்பி.

பொறுப்பேற்ற பின்தான் தனக்குக் கிடைத்திருப்பது இருக்கையல்ல, ஒரு திரிசூலத்தின் முனையில் தான் அமர வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறான். ஒருமுனையில் கடற்கொள்ளையருக்கு சேரனின் பொக்கிஷத்தை திருட ஆசை காட்டி அழைத்து வந்திருக்கும் ஆதன் அழிசி, இன்னொருபுறம் இயக்கனைப் போலவே முகத்தை மூடி தன்னை ‘குடநாட்டு மன்னன்’ என்று சொல்லிக் கொண்டு சதி செய்யும் மர்ம மனிதன், மூன்றாம்புறம் தன் தம்பியைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் கொள்னையன் நாகன்... இப்படி மூன்று சிக்கல்களை சமாளிக்க வேண்டியவனாகிறான். இதனிடையில் சேரன் மகளின் காதல் கிடைக்க, தான் தேடிவ்ந்த இயக்கன் தொண்டிக்கருகிலுள்ள தீவில் மறைந்திருப்பதை அறிகிறான். பாண்டியனின் கடமையையும் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் கூடுகிறது. இவையெல்லாவற்றையும் இளையநம்பி தன் புத்திசாலித்தனம். வீரம் இவற்றின் உதவி கொண்டு எப்படிச் செய்தான் என்பதை 47 அத்தியாயங்களில் விவரிக்கிறது கதை.

சரித்திர நாவல் படித்திருப்பீர்கள்... மர்ம நாவல் படித்திருப்பீர்கள்... இந்தக் கதையை சரித்திர மர்ம நாவல் என்று புதுப் பெயரிட்டுத்தான் அழைக்க வேண்டும். கதையை பெரும்பாலும் சாண்டில்யனின் பாணி கதைசொல்லலில் சொல்லியிருக்கிறார் பரதவன். வழக்கமான காதல் மற்றும் வீரத்தை ரசிக்கும் அதேவேளையில் க்ளைமாக்ஸில் அந்த மர்ம மனிதன் பிடிபட்டதும் அவன் யார் என்பதையும் ஏன் செய்தான் என்பதையும் இளைய நம்பி விவரிக்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. அகதாகிறிஸ்டி பாணியிலான மர்ம முடிச்சைத்தான் அவர் போட்டிருக்கிறார் என்றாலும் சரித்திரக் கதையில் இந்த சஸ்பென்ஸை சற்றும் எதிர்பாராததில் மிதமிஞ்சிய வியப்பு எனக்கு. கதைக்கான சரித்திர ஆதாரங்களை ஆசிரியர் நாவலின் முடிவில் அடுக்கியிருக்கிறார். அது தேவைப்படாமலேயே நம்மால் கதையின் விறுவிறுப்பை நிச்சயம் ரசிக்க முடியும்.

“பரதவன்’ என்ற புனைபெயருக்குள் மறைந்திருக்கும் நூலாசிரியர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் மற்றப் படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்ற ஆவலை மட்டும் நிறையவே தூண்டி விட்டு விட்டார் என்னுள். 288 பக்கங்கள் கொண்ட இந்த நூலை 140 ரூபாயில் எண் 34.1, பூரணம் பிரகாசம் சாலை, பாலாஜி நகர், இராயப்பேட்டை, சென்னை-14ல் இயங்கி வரும் முற்றம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். (செல் : 98847 14603)

சரித்திரக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் மர்மக் கதை உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் இரண்டு ப்ளேவர்கள் கலந்த ஐஸக்ரீம் போன்ற இ(க)தை நிச்சயம் அருந்த(படிக்க)லாம். ரசிப்பீர்கள் நிச்சயம்!

8 comments:

  1. எனக்கும் சரித்திர நாவல்கள் பிடிக்கும் என்ற வகையிலும், இந்நாவலில் வரும் மர்ம முடிச்சு பற்றி நீங்கள் சொல்லியிருப்பதாலும், எனக்கும் இந்தப் புத்தகம் படிக்க ஆவல் ஏற்படுகிறது.

    ReplyDelete
  2. மர்மக் கதைக்குள் அரசியலும் புகுத்தீட்டீங்க.. சபாஷ் வாத்தியாரே.. அடுத்த முறை வரும்போது இதை எடுத்துக்கறேன்..

    ReplyDelete
  3. சரித்திரமும் மர்ம நாவலும் என் பேவரிட்! இரண்டும் கலந்து அசத்தியிருக்கிறார் என்றால் அருமைதான்! வாங்க வேண்டும் படிக்க வேண்டும்! நன்றி!

    ReplyDelete
  4. அடடே ரொம்ப ஸ்வாரசியமான கதையாக இருக்கும்போல இருக்கே கணேஷ்...

    சில நாட்களில் சென்னை வருவதாக உத்தேசம்..... புக் கிடைக்குமா? :)

    ReplyDelete
    Replies
    1. கேக்கணுமா வெங்கட்...? உங்களுக்குக் கிடைக்காம வேற யாருக்குக் கிடைக்குமாம்...?

      Delete
  5. வாசிக்கத் தூண்டும் விமர்சனம். நன்றி கணேஷ். அட்டையில் ரவிவர்மாவின் ஓவியத்திற்கு பதில் வாசகரின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வண்ணம் வேறு ஓவியம் இருந்திருக்கலாம் என்னும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

    ReplyDelete
  6. சரித்திர மர்ம நாவல்.. அருமையான விமர்சனம்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. நீலகேசி இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete

இது... உங்க ஏரியா!