Sunday, August 10, 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘பதவியில் இருப்பவர்கள் தங்கள் சொத்துக் கணக்குகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்’ என்று சொன்னதன் காரணமாக தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டிருந்த காலகட்டம் அது. அவரைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எல்லோரும் அவரிடம் தனிக் கட்சி ஒன்று தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். அவர் அந்த முடிவுக்குச் சட்டென்று வந்து விடவில்லை. அதே காலகட்டத்தில் மற்றொரு பெரும் பொறுப்பும் அவரைச் சூழ்ந்து அழுத்திக் கொண்டிருந்தது. தன் சொந்த நிறுவனமான எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்க்காக அவர் பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்த பிரம்மாண்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் முக்கால்வாசி உருவாகி முடிந்திருந்த நிலையில் அதன் வெளியீடு என்பதே அந்தப் பொறுப்பு.

கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க. அரசு படத்தை ஓடவிடாமல் தடுக்க எல்லாவற்றையும் செய்தது. போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடை விதித்தது. மதுரை முத்து ‘படம் மதுரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவிட்டால் நான் புடவை கட்டிக் கொள்கிறேன்’ என்று சவால் விட்டார். வாத்யார் ஸ்டிக்கர்களை அச்சடித்து அவைகளை பஸ்களில் ஒட்டி (அதுவரை இல்லாத புதுமை இது அந்நாளில்) விளம்பரம் செய்து, படம் ஓடும் தியேட்டர்களில் தனிப்படை அமைத்து ரசிகர்களுக்கு பாதுகாப்பளித்து படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார். அதுவரையிலான தமிழ் சினிமா வசூல் ரெகார்டுகளை முறியடித்தது அந்தப் படம் என்பதுடன் மதுரை முத்துவுக்குப் புடவைகள் வந்து குவிந்தன. (அவர் தனியா புடவைக் கடை வெச்சாரான்னு தெரியல).

இப்படி படத்தின் வெற்றிக்குப் பின்னிணியில் பல சுவாரஸ்யங்கள் இருக்க. படம் உருவான விதத்திலும் நிறைய சுவாரஸ்யங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை படம் வெளியான பின் வாத்யாரே ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக எழுதினார்.  அவற்றைத் தொகுத்து விஜயா பதிப்பகத்தினர் (கோவை அல்ல, சென்னை) ‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’ என்று நூலாக வெளியிட்டுள்ளனர். வாத்யாரின் விவரிப்பில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் பரபரவென்று நகர்கிறது. புத்தகத்தில் நிறையத் தூவப்பட்டுள்ள புகைப்படங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

வாத்யாரின் படங்களில் திரைக்கதை மிகக் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கும். கதை விஷயத்தில் அத்தனை தேர்ந்த ஞானம் அவரிடம் உண்டு. இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்தின் வசனகர்த்தா சொர்ணத்துக்கும், இயக்குனர் மேற்பார்வையாளரான ப.நீலகண்டனுக்கும்கூட முழுக்கதை தெரியாமலேயே பயணப்பட்டிருக்கிறார்கள். கதை என்பது வாத்யார் ஒருவரின் மனதில் மட்டுமே இருந்திருக்கிறது என்பது எத்தனை வியப்பான தகவல். அது வாத்யாரின் வார்த்தைகளில்....

அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான். -இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்... இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச்  செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!

இப்படி தீர்மானமான திரைக்கதை இல்லாமலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு இன்றளவும் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதை அமைந்த படமாக ‘உ.சு.வா.’வை உருவாக்கணும்னா வாத்யாரால மட்டும்தான் சாத்யம். எப்படி வந்துச்சு வாத்யாருக்கு இந்த தைரியம்...? சொல்றாரு....

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளிநாடுகளில் படமெடுக்கும் துணிவை எனக்கு ஏற்படுத்தியவை ஜெய்ப்பூரில் நான் ‘அடிமைப்பெண்’ எடுத்ததால் ஏற்பட்ட அனுபவமும், நண்பர்களின், கலைஞர்களின் திறமையும். ஒத்துழைப்பும்தான் என்பதை நிறை மனதோடு நான் சொல்லியே தீர வேண்டும்’

க்ளைமாக்ஸைப் படமாக்க அப்போது ஜப்பானில் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்த ‘எக்ஸ்போ 70’ தொழிற்பொருட் காட்சியை தேர்வு செய்திருந்தார்கள். ஜப்பான் செல்ல விசா, அன்னியச் செலாவணி கிடைக்க பட்ட கஷ்டங்கள். அங்கே பொருட்காட்சிக்கு உள்ளே செல்ல அதிக நபர்களுக்கு அனுமதி கிடைக்காமல், கேமராவையும் மற்ற தளவாடங்களையும் அவர்களே சுமந்து சென்று உடை. கெட்டப் மாற்றி நடிக்க வேண்டி இருந்த சிரமங்கள் என்று ஒவ்வொன்றையும் வாத்யாரின் விவரிப்பில் படிக்கப் படிக்க படமாக மனதினுள் விரிகிறது. கூடவே போனஸாக அவர் சொல்லும் வெளிநாட்டுத் தகவல்கள், அசோகன், நாகேஷ், மஞ்சுளா தொடங்கி அவரது உழைப்பில் பங்கெடுத்த ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வது என்று முதல் பக்கத்தில் துவங்கிய என் கண்ணின் ஓட்டம் கடைசிப் பக்கத்தில்தான் ஓய்ந்தது.

=================================================
‘உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை’, வெளியீடு : விஜயா பப்ளிகேஷன்ஸ், 23/9, நேதாஜி நகர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை - 600 083.  பக்கங்கள் : 176. விலை : ரூ.120
=================================================

12 comments:

  1. சமீபத்தில் கூட தினமலர் வாரமலர் இதழில் (இன்னும் கூட வந்து கொண்டிருக்கிறதோ) இந்தப் புத்தகத்தை எடுத்து வாரா வாரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தப் படத்தில் நான் ரசித்த காமெடி : எக்ஸ்போ கண்காட்சி எவ்வளவு பெரிது என்று நமக்கும் தெரியும். வாத்யாரும் படத்தில் அதைக் காட்டுவார். அந்தக் கண் காட்சியின் ஏதோ ஒரு மூலையில் ராஜு 'உலகம்...உலகம்...உலகம்' என்று பாடுவார். இன்னொரு மூலையில் இருக்கும் அண்ணன் விஞ்ஞானி 'ஆ.. என் தம்பி குரல் கேக்குது' என்று சிலிர்த்துத் தேடி ஓடுவார். கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்து எல்லாம் பாடுவார்கள்-தேடுவார்கள்.

    வாலி இதைப் பற்றி அடித்த 'பன் ஜோக்கும் பிரபலம். பாடல்கள் தேன்.'

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற ஸ்ரீ... ஒரு தலைவலி மாத்திரையக் காட்டி மின்னலோட சக்திய சேமிச்சு வெச்சிருக்கேன்பாரு. நம்ம ஊரு கறுப்பு சுப்பையாவையும் வெள்ளை சுப்பையாவையும் வெளிநாட்டு விஞ்ஞானிகள்ன்னுவாரு... வாத்யார் படத்துல லாஜிக்லாம் கிலோ என்ன விலை தான்... ஆனாலும் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும் எம்ஜிஆர் என்கிற உற்சாகப் பந்தும் எல்லாத்தையும் மறக்கடிச்சுரும். அதனாலதான் அவர் சக்ரவர்த்தியானதே.

      Delete
    2. ஹஹஹஹஹஹாஹ்ஹஹஹாஹ்ஹாஹஹ் :)

      Delete
  2. தலைவர்ன்னா தலைவர்தான் படிக்க தூண்டும் விமர்சனம் !

    ReplyDelete
  3. வணக்கம்

    கதையை படிக்கும் உள்ளங்களுக்கு ஒரு உச்சாகம் பிறக்கும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வாரமலரில் இந்த தொடரை பார்த்ததோடு சரி.. படித்ததில்லை.. ஆனால் எப்போதோ ஒருமுறை தொலைகாட்சியில் இந்தப் படத்தின் முதல் காட்சியைப் பார்த்து நானும் (பிரம்மிப்பில்) சிரித்திருக்கிறேன் :-)

    ReplyDelete
  5. என்னிக்குமே,யாராலுமே வாத்தியாரை அடிச்சிக்கவே முடியாது.சொன்னத,சொல்லுறத செஞ்சு காட்டினவரு அவரு ஒருத்தர் தான்!

    ReplyDelete
  6. மிக அருமை கணேஷ்.படித்துச் சிரித்துக்கொண்டிருக்கிறேன். உண்மைதான் வாத்தியாரோட பவர் அப்பிடி.

    ReplyDelete
  7. இதன் ஒரு சில பகுதிகள் ஏதோ ஒரு பத்திரிகையிலும், செய்தித்தாளிலும் வந்ததாக நினைவு....அப்போது வாசித்திருக்கின்றோம்.....வாத்தியார் வாத்தியார்தானுங்க...

    ReplyDelete
  8. அருமையான அறிமுகம் நன்றி

    ReplyDelete
  9. ஆகா ... உலகம் சுற்றும் வாலிபன் ஒரு ரவுண்ட் சுற்றிவர இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறாரா ...ஐயோ பாவம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!