Wednesday, October 8, 2014

காலச் சக்கரம் - நரசிம்மா

படைப்பாக்கம் : சீனு 

கதை

காலச் சக்கரத்தின் சுழற்ச்சியில் எங்கோ ஒரு மூலையில் எப்படியோ பாதிக்கபட்ட சிலர் அதற்குப் பழிவாங்குவதற்காக தங்கள் வேட்டையைத் தொடங்கினால் அதில் அவர்களின் சுழற்சியும் காலச் சக்கரத்தின் சுழற்சியும் எவ்வாறு இருக்கும் என்பதை நமக்கு அறிமுகம் செய்வதே இந்த காலச் சக்கரத்தின் கதை. 
நான்கு வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுவதாக நகர்கிறது இக்கதை. 

அழகிய காஷ்மீரகத்தின் ஒரு பகுதியான ரஸ்கம் என்ற பகுதியை எதிரிகள் கைப்பற்ற முயல, அதனால் அங்கு வசிக்கும் பண்டிதர்கள் அனைவரும் தங்கள் சொத்து சுகங்களை இழந்து இந்தியப் பகுதிக்குள் அகதிகளாக நுழைகிறார்கள். இவர்களில் ஷ்ரத்தா என்ற சிறுமி மட்டும் தன் தந்தையின் ஆலோசனையின் படி ஸ்ரீசக்கரம் என்ற சக்கரத்தைத் தேடி புறப்படுகிறாள். நிகும்பலை என்ற காளி இலங்கையின் காவல் தெய்வம், அவள் அங்கு இருக்கும் வரை யாராலும் ராவணனை வெல்ல முடியாது. ஆகவே விபீடணன் நிகும்பலையை ஹனுமனின் உதவியுடன் தமிழகத்தில் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்கிறான். இயல்பாகவே நிகும்பலை மிகவும் மூர்க்கமான காளி என்பதால் அவளின் கோபத்தை மக்களால் தாங்க முடியவில்லை. அதனால் ஆதிசங்கரர் காஸ்மீரின் ரஸ்கத்தில் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு தமிழகம் வருகிறார். அந்த ஸ்ரீசக்கரத்தின் உதவியுடன் நிகும்பலையை அடக்கி யாருமறியா பாதுகாப்பான இடத்திலும் வைக்கிறார். அந்த ஸ்ரீசக்கரம் காஷ்மீரகத்தில் இருந்து வெளியில் சென்றதனால் தான் காஷ்மீருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படுகிறது, பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது என நம்பி அந்த ஸ்ரீசக்கரத்தை மீண்டும் காஷ்மீருக்கே கொண்டு வருவது என்ற சபதத்துடன் ரஸ்கத்தில் இருந்து கிளம்புகிறாள் ஷ்ரத்தா. 

டெல்லியில் வசித்துவரும் மிக முக்கியமான மகாராணியின் குடும்பம் வசுந்தராவின் உடையது. அவளுக்கு இரண்டு மகன்கள். சமீப காலமாக ஒரு பயங்கரமான வடிவம் கொண்ட ஒரு பெண் அவளை கொல்லப் போவதாக மிரட்டுகிறாள். இதனால் குழப்பமும் பயமும் அடையும் வசுந்தரா தன் குடும்ப நண்பர்களான ஒரு தீட்சிதரையும் சுவாமிஜியையும் நாடுகிறாள். மேலும் வசுந்த்ராவிற்கு உதவுவதற்காக ஒரு தாந்த்ரீகரும் கேரளத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார். அவரது தலைமையில் பிரசன்னம் பார்க்கபடுகிறது. அதில் கிடைக்கும் சில புதிரான பதில்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையைத் தருகிறதே தவிர இன்னதென்று தெளிவாக கூறமறுக்கிறது. மேலும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க வேண்டுமாயின் அவருக்கு ஸ்ரீசக்கரம் தேவைப்படும் என்றும் கூறுகிறது எப்படியேனும் ஸ்ரீசக்கரத்தைக் கண்டுபிடித்து அந்த மர்மப் பெண்ணை கண்டுபிடிப்பதாக சபதம் செய்கிறார் தாந்த்ரீகர். ஆனால் அதிலிருந்து சில தினங்களில் யானை மிதித்து மரணம் அடைகிறார் தாந்த்ரீகர்.   

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் கும்பை என்ற கிராமத்தில் ஆஸ்டானமான பிராமணக் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. பட்டப்பாவிற்கு மூன்று மகள் ஒரு மகன் மற்றும் இறந்து போன தன் தம்பியின் மகனான சங்குவையும் வளர்த்து வருகிறான். சங்கு முறையாக சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றவன் என்ற போதிலும் அவனுடைய நாட்டமெல்லாம் தாந்த்ரீகத்திலும் பில்லி சூனியம் கற்பதிலுமே இருக்கிறது. இந்நிலையில் லாடன் என்ற இளைஞன் சங்குவுக்கு தாந்த்ரீகம் கற்றுத் தருகிறான். அதைக் கொண்டு கும்பேஷ்வரரின் அருளைப் பெறுகிறான் சங்கு. மேலும் அந்த கிராமத்தில் தன்னுடைய பெரியப்பாவால் பில்லி சூனியத்திற்கு ஆட்பட்ட ஒரு பெரியவரை அதிலிருந்து விடுவிக்கிறான். அவர் மூலம் அதுநாள் வரை தான் அறியப்படாத தகவல்களை எல்லாம் அறிந்து கொள்கிறான். 

சங்குவின் அப்பா வாரணாசி சென்றபோது ஸ்ரத்தா என்ற பெண்ணை சந்தித்ததாகவும், ஸ்ரீசக்கரத்தைக் கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி கேட்டதாகவும், பின் இருவரும் காதலில் விழுந்து பலத்த எதிர்ப்புக்குப் பின் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறுகிறார். சங்கு பத்து மாத சிறுவனாக இருந்த போது சங்குவும் அவனது அப்பா அம்மாவும் டெல்லி செல்கிறார்கள். அங்கு ஷ்ரத்தா தொலைந்து போக, அதனால் பித்துப்பிடித்த சங்குவின் அப்பா அவனை அவனது பெரியப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார். ஆனால் தொலைந்து போன அவன் அம்மா மட்டும் திரும்ப வரவேயில்லை. அதற்குப் பின் உலகை ஆளும் தாந்த்ரீகன் ஆக ஆசைப்படுகிறான். அப்படி ஆக வேண்டுமானால் அதற்கு அந்த ஸ்ரீசக்கரம் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவன் அதனைத் தேடத் துவங்குகிறான். 

இதற்கிடையில் ஜாங்கிரி சுற்றி பிழைப்பு நடத்தும் ஜாங்கிரி ஜம்பு என்பவரின் குடும்பத்தை அவர்கள் தற்கொலை செய்து கொள்வதில் இருந்து காப்பாற்றுகிறாள் ஒரு மர்மப்பெண், பின்னர் அவளே அந்தக் குடும்பத்தை வழிநடத்துவும் தொடங்குகிறாள். அந்தப் பெண் வேறு யாரும் இல்லை, ஷ்ரத்தாதான். பின்னர் சில காலங்களில் ஷ்ரத்தா தன் மகனான சங்குவையும் கண்டுபிடித்து அவர்கள் இருவருமாக ஸ்ரீசக்கரத்தைத் தேடத் துவங்குகிறார்கள். இதில் அவர்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கிறார்கள். இறந்து போனவனின் உதரத்தில் இருந்து பிறந்த ஒருவனாலேயே அந்த ஸ்ரீசக்கரத்தை அடைய முடியும் என்று கண்டுபிடித்து, தங்கள் காய்களை அதன்பொருட்டு நகரத்துகிறார்கள். 

இந்நிலையில் மகாராணி வசுந்தராவின் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவராக மரணிக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த மர்மப் பெண் தான் என்று அஞ்சுகிறாள் வசுந்தரா. பின் வசுந்தரா என்ன ஆனாள். எதற்காக அவளுடைய குடும்பம் பழிவாங்கப்படுகிறது. இறந்து போனவனின் உதிரத்தில் இருந்து குழந்தை பிறந்ததா, அந்த ஸ்ரீசக்கரம் கிடைத்ததா என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கூறியபடி நிறைவடைகிறது காலச்சக்கரம்.  

விமர்சனம் 

படிப்பவர் யாராயினும் அவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிய நடையில் எழுதப்பட்ட நாவல். மேலும் பல்வேறு தளங்களிலும் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்தாலும் என கதை எந்த வருடத்தில் நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை குழப்பம் ஏற்பட்டாலும் அத்தியாங்களின் தலைப்பைப் பார்த்தால் அந்தக் குழப்பங்களைப் போக்கிக் கொள்ளலாம். காரணம் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவை நடக்கும் வருடங்களுடன் தான் தொடங்குகிறது. அதனால் இந்த நாவலில் இடம்பெறும் வருடங்கள் அவ்வளவு முக்கியமானவை. இருந்தும் வருடங்களைக் குறிப்பதில் ஒரேஒரு இடத்தில் மட்டும் பிழை ஏற்பட்டுள்ளது. பதினான்காவது அத்தியாயத்தில் 1974 என்று இருக்கவேண்டிய வருடம் 1984 என்று இருக்கிறது.

இந்த நாவல் முழுக்க முழுக்க பில்லி சூனியம் ஏவல் மாந்த்ரீகம் தாந்த்ரீகம் யோகம் என்று வருவதால் உங்களிடம் இருக்கும் பகுத்தறிவு வாதங்களைக் கழற்றி ஒரு ஓரமாக வைத்திவிட்டு இந்த நாவலைத் தொடவும், இல்லையென்றால் உங்களுக்கும் நாவலுக்கும் இடையே ஏதோ ஒரு பெரிய இடைவெளி இருந்து இருந்து கொண்டே இருக்கும். நாவலின் முதல் சில அத்தியாயங்கள் கதையை நமக்கு அறிமுகம் செய்வதற்காக நகர்வதால் அவற்றைப் படிக்க மிகபெரிய பொறுமை வேண்டும், அதற்குப் பின் நாவல் நல்ல வேகம் எடுத்து தன்போக்கில் பறக்கத் தொடங்குகிறது. இது இலக்கிய வாசகர்களுக்கான நாவல் அல்ல. அனைத்து தரப்பிலும் இருக்கும் வாசகர்களுக்கானது. பில்லி சூனியம் ஏவலில் நம்பிக்கை இருந்தாலோ அல்லது அதை சார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ தவறாது படிக்கலாம்.

ஆசிரியர் குறிப்பு 

எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் டி.ஏ.நரசிம்மன். தற்போது தி இந்து ஆங்கில தினசரியில் தமிழ்நாட்டு பிரிவின் செய்தி ஆசிரியராகவும், சீனியர் அசிஸ்டென்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை திரைப்பட இயக்குனர் சித்ராலயா கோபு. தாய் நாவலாசிரியை திருமதி கமலா சடகோபன்.

ஆசிரியர் : நரசிம்மமா
புத்தகம் : காலச்சக்கரம்
விலை : 120
பதிப்பகம் : வானதி 

19 comments:

 1. ஶ்ரீ சக்கரம், வைத்து இந்திரா சவுந்தரராஜன். அவர்களின் ஶ்ரீபுரம் வாசித்து இருக்கிறேன்.. this genre is one of favorite :) , சீனு ப்ரோ விமர்சனம் சொல்றேன் நு கதையை சொல்லிட்டீங்க்ளே ,கதை படிக்கும்போது. . எதிர் பார்ப்புகள்க்கு விடை இருக்கும்போது அந்த ...அந்த feel miss ஆகாதா. :P

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா விஜயன்! நான் கதையின் சாரத்தைக் கூட முழுமையா சொல்லல, காரணம் கதை அவ்ளோ பெருசு, சில தளங்களின் அறிமுகம் மட்டும் தான் செய்து இருக்கேன். எப்போதுமே முக்கியமான முடிச்சுகளை விமர்சனத்தில் அவிழ்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, அதனால் அப்படிக்கு அப்படியே விட்டுவிட்டேன்.

   Delete
  2. எனக்கும் முதலில் படித்தபோது கதையை சொல்லிவிட்டீர்களோ என்ற அச்சம் தான் இருந்தது.. (இப்போ தெளிந்தது)

   உங்கள் இலக்கிய நடை கொஞ்சம் மிஸ் ஆகிறதே? ;)

   Delete
  3. அட ஆமாம். !!! இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு ...

   Delete
  4. இலக்கிய வாதி தூங்கிட்டாரு போல

   Delete
  5. ஹா ஹா ஹா எல்லாவற்றையும் ஒரே போன்ற நடையில் எழுதி விட விருப்பமில்லை, அது அது என்ன நடையில் வருகிறதோ அதன் போக்கிலேயே எழுதி விட வேண்டியது தானே.. எதையாவது வலிந்து தினத்தால் அபத்தமாகிவிட வாய்ப்பு உண்டு. பரீட்சார்த்த முயற்சிக்கு என்று சில பதிவுகளை எழுதுவேன், அதில் தான் வராததை வலிந்து திணிக்கும் விந்தை எல்லாம் நடக்கும் :-) மேலும் இது இலக்கியப் புத்தகம் அல்ல என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ளேன்..

   ஆமா நான் எழுதுறது எல்லாம் இலக்கிய நடைன்னா இந்த உலகம் நம்புது :-)

   Delete
  6. சீனு உண்மையாகவே நம்பறோம். இதை வாசித்த போது இலக்கிய நடை மிஸ்ஸிங்க் என்று ஆவி சொன்னதற்கு நீங்கள் சொல்லியிருந்த பதிலைத்தான் அவருக்குச் சொல்ல நினைத்து வந்தால் நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள் அதற்கான பதிலை!

   Delete
 2. இது நரசிம்மாவின் ஆரம்பம்தான். சங்கத்தாராவையும், குபேரவனக் காவலையும் படிச்சா இன்னும் பிடிக்கும் உனக்கு. இந்தக் கதையில வர்ற அந்த ஜமீன் குடும்பம் இந்திய அரசியல்ல புகழ்பெற்ற ஒரு குடும்பத்தோட பிரதிபலிப்புங்கறதக் கண்டுபிடிக்க முடிஞ்சதா சீனு..?

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரிஞ்சது எல்லாம் எங்கூரு ஊத்துமல ஜாமீன் தான், நீங்களே புதிர்போடாம சொல்லிட்டா யான் தன்யவான் ஆவேன் குருஜீ :-)

   Delete
 3. சங்கதாராவால் கவரப்பட்டு, அவரது பெயரோடு ஒட்டிக் கொண்ட இந்த நாவலையும் படிக்க வேண்டும் என்று நானும் வாங்கிப் படித்து விட்டேன். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. ஸ்ரீரங்கத்தை மையமாகவைத்து எழுதப் பட இன்னொரு நாவலும் வாங்கிப் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அது என்ன நாவல் சார், அதுவும் இவரே எழுதியதா...

   Delete
  2. ரங்கராட்டினம்.

   Delete
 4. If you all like this genre, check out Ashwin Sanghi's "The Krishna Key" and if you like political thriller, you may want to check out Ashwin Sanghi's "Chanakya Chant". Both are simply unputdownable

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் படித்துப் பார்கிறேன் முரளி சார்...

   Delete
 5. எப்படி தான் இவ்வளவு பொறுமையை ரசித்து எழுதுரினங்களோ??
  பகுத்தறிவை கழட்டி வைச்சுட்டு(!?) அது ரொம்ப கஷ்டம். ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ தான் காத்துகிட்டிருக்கேன் (நண்பன் படத்தில் ஜீவா இன்டர்வியூ ல சொல்லுவரே:)) so உங்க அடுத்த புத்தக விமர்சனம் படிச்சு, அந்த பரிந்துரையை ஏற்றுகொள்கிறேன்:)

  ReplyDelete
 6. நல்ல நாவல். நல்ல விமர்சன நடையும்கூட அண்ணே :)

  ReplyDelete
 7. .நல்ல நாவல். நல்ல விமர்சன நடையும்கூட அண்ணே :)

  ReplyDelete
 8. எஸ்.ரா நமது சமகால எழுத்த்து இமையம்...
  நல்ல அறிமுகம் ...
  தொடர்ந்து படிங்க


  நண்பர்களின் முகநூல் தகவல்கள்

  ReplyDelete
 9. ஸ்ரீசக்கரத்தை கஷ்மீரில் வச்சாச்சு ... பிரச்சனையும் ஓய்ந்தது .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!