Thursday, December 18, 2014

ருத்ர வீணை - மர்மத் தொடர்

எனக்கு மிகவும் பிடித்த அன்று-இன்று பாணியில் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதப்பட்டு தொலைகாட்சி தொடராக வெளிவந்து மிகவும் பிரபலமான ஒரு மர்மத் தொடர் என்பதை அறிந்த உடனே இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் தோன்றியது. எனது வட்டாரத்தில் இருக்கும் அரசு நூலகத்தில் வலை வீசியதில் முதல் பகுதி மட்டும் சிக்கியது. அடுத்த இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியை தேடி வைப்பதாக நூலகர் சொன்ன வாக்குறுதியை ஏற்று முதல் பகுதியை படிக்கத் தொடங்கினேன்.  முதல் பகுதி முடிந்தவுடன் அடுத்த பகுதியை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவல் கூட, மறுதினமே நூலகம் சென்று இரண்டாவது பகுதியை எடுத்து வந்தேன். அதுதான் இறுதிப் பகுதி என்று நூலகர் வாக்கை நம்பி படிக்கத் தொடங்கினால், அதுவோ அடுத்த பகுதியில் தொடரும் என்று முடிந்தது. 

கதையின் போக்கில் பிணைக்கப் பட்ட மர்மங்கள் எப்படி அவிழ்கின்றன என்பதை அறிய எனக்குள் ஒரு போராட்டமே நடந்தது. கடைகள், ஆன்லைன் என்று எங்கு தேடியும் அடுத்த பகுதி கிடைக்கவில்லை. புத்தகச் சந்தை வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்ட நிலையில், 'மின்னல் வரிகள்' பால கணேஷ் சார் தன்னிடம் அனைத்து பகுதிகளும் இருப்பதாக கூறி எனது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அவரிடம் இருந்ததோ நான்கு பகுதிகள் கொண்ட பதிப்பு. சமீபத்திய பதிப்புகள் இரண்டு பகுதிகளாக வருவதாகவும் அவை அதிகம் புழக்கத்தில் இல்லை என்றும் என் நண்பன் பின் ஒரு நாள் விளக்க அறிந்தேன். அன்று 
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன், நவாப்களின் ஆளுமைக்கு உட்பட்டு, பல வித இசைக்கலைஞர்கள் கலைகளை வளர்த்து வாழ்ந்த தோடீஸ்வரம் என்ற ஊருக்கு, வடக்கில் இருந்து நவாப்ஜான் பாபா என்பவர் ருத்ர வீணையுடன் வருகிறார். அந்த ருத்ர வீணையானது அந்த சிவனே பார்வதியைக் கொண்டு செய்த பல சக்திகள்  கொண்ட ஒரு அரிய இசைக் கருவி. அதில் இசைக்கப்படும் ராகத்திற்கு ஏற்ப பல அற்புதங்கள் நிகழ்த்த கூடியது. அதை வாசிப்பதற்கே தனி அருள் வேண்டும், தீய எண்ணங்களுடன் நெருங்கினால் அதை தீண்ட முடியாது. பெண்களாலும் அதை வாசிக்க முடியாது. சிவ அம்சம் கொண்ட ருத்ரர்களால் மட்டும் தான் அதை வாசிக்க முடியும். அத்தகைய ருத்ர வீணையை தன் குருவின் ஆணைப் படி அந்த தோடீஷ்வர ஆலயத்தில் சேர்க்க வருகிறார் பாபா. 

ஒரு இஸ்லாமியர் வீணையுடன் கோவிலில் நுழைவதைக் கண்டு, அங்கு இருப்பவர்கள் பதறி அவரை வெளியேற்றி விடுகின்றனர். அந்த ஊரின் தாசி குடும்பத்தில் தோன்றி கற்பு நிலை தவறாது வாழும் அபராஜித வைஜெயந்தி பாபாவிற்கு தன் இல்லத்தில் அடைக்களம் தந்து அவரை போற்றி வழிபடுகிறாள். வரட்சியில் இருக்கும் அந்த ஊரை ருத்ர வீணையின் இசை செழிப்பாக மாற்றுவதோடு மட்டுமின்றி, ஊரில் சில அற்புதங்களை நிகழ்த்துகின்றது. 

அந்த ருத்ர வீணையின் சக்தி பற்றிய செய்திகள் நான்கு புறமும் பரவ, அதை அபகரிக்க எண்ணி சில தீய சக்திகள் அந்த ஊருக்குள் நுழைகின்றன. பல தடைகளையும் தாண்டி பாபா எப்படி தன் குருவின் கட்டளையை நிறைவேற்றுகிறார், எப்படி அந்த வீணை பாதுகாக்கப் படுகின்றது என்பதே மீதி கதை.

இன்று         

பாபா வருகைக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு தோடீஷ்வர ஆலயத்தில் பாபா ருத்ர வீணையுடன் சிலையாக காட்சி தருகின்றார். தஞ்சையை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வரட்சியில் இருக்க, தோடீஷ்வரம் மற்றும் செழிப்புடன் விளங்குகின்றது. தினமும் கேட்கும் ருத்ர வீணையின் நாதம் தான் அந்த செழிப்புக்கு காரணம் என்றாலும், அது எங்கு உள்ளது என்பதும் அதை வாசிப்பது யார் என்பதும் மர்மமாகவே இது நாள் வரை உள்ளது. 

நரசிம்ம பாரதி என்னும் சக்தி உபாசகர் அந்த ருத்ர வீணையை தேடி ஊருக்குள் வருவதில் இருந்து மாற்றங்கள் நடக்கத் தொடங்குகின்றன. ஒரு பக்கம் மனைப் பாம்பு ஒன்று பாதுகாக்கும் பாபா கைப்பட எழுதிய ராக மந்திர ஏடு, மறு புறம் கோவில் தாசியான சுந்தராம்பாள் தினமும் சென்று பூஜை செய்யும் யாராலும் நுழைய முடியாத தாசி பங்களா, ஊர் முழுவதும் ஒரே சம அளவில் தினமும் ஒலிக்கும் ருத்ர வீணையின் இசை என்று பல மர்மங்கள். ரகசியங்களை பாதுகாக்கும் சுந்தராம்பாள், ருத்ர வீணையை தன் வசமாக்க துடிக்கும் உபாசகர், இந்த மர்மங்களை கண்டுபிடிக்க துடிக்கும் இளவட்ட நண்பர்கள் சுவாமிநாதனும் சங்கரனும் என்று கதை சூடு பிடிக்கின்றது.  

இறுதியில் நல்ல சக்திக்கும் கெட்ட சக்திக்கும் இடையில் அந்த வீணைக்காக பெரும் போராட்டம் வெடிக்கின்றது. நல்ல சக்தியே வென்றாலும், ருத்ரன் யார் என்ற ரகசியம் இறுதிவரை வாசகர்களை சுவாரசியம் குறையாமல் இழுக்கின்றது.                   

இந்தக் கதை தொலைகாட்சி வடிவத்தில் சற்று வேறுபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று பகுதியில் நடக்கும் ஒரு சம்பவம் இன்று பகுதியில் கண்டியறிப் படுவது போல் காட்சிகள் ஒரு சேர அமைத்தது கதைக்கு பலம். சில இடங்களில் திகட்டும் அளவு ஆன்மீகமும், இறுதியில் தேவைக்கு அதிகமாக கதாப்பாத்திரங்களும் சேர்வது கதையில் சற்று தொய்வை ஏற்படுத்தினாலும், 'ருத்ர வீணை' விறுவிறுப்பு குறையாத ஒரு மர்மத் தொடர்.

************************************************************************************************************
வெளியீடு : ஜீயே பப்ளிகேஷன்ஸ்
ஆண்டு :  2004
பகுதிகள் : நான்கு
***********************************************************************************************************

இந்திரா சௌந்தர்ராஜன்இந்திரா சௌந்தர்ராஜன் என்ற புனைப்பெயர் கொண்ட பி. சௌந்தர்ராஜன் அவர்கள் தமிழில் ஆன்மீகம் மற்றும் அமானுஷ்யம் சார்ந்த பல மர்ம நாவல்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்து மக்கள் மனதைக் கவர்ந்தவை. 'மர்ம தேசம்' விடாது கருப்பு இவரது படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மதுரையில் வசிக்கும் இவர் இந்த ஆண்டு தமிழ் வலைப் பதிவர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

காதலுடன்
ரூபக்

7 comments:

 1. உங்க எழுத்து நன்றாக மெருகேறியிருக்கு

  ReplyDelete
 2. சுவையான விமர்சனம். முழுதுமாக எனக்கும் கிடைக்கவில்லை. ஒரு பாக்கெட் நாவலாக நான் இந்த ருத்ர வீணையின் இறுதி பாகத்தை தான் வாசித்தேன். அப்படியும் இறுதியில் ருத்ரன் யார் என்பதை அடுத்து எழுதிய விக்ரமா விக்ரமா வில் சொல்வதாக போட்டிருந்தது. மண்டை வெடித்து போல் தான் இருந்தது. அப்புறம் நால்வரில் ஒருவர் என்று நானாகவே சமாதனப்படுத்திக் கொண்டேன்.....:)) தற்சமயம் வாசிக்கும் நூலகத்தில் இரண்டு பாகங்களாக உள்ளது. வாசிக்க வேண்டும்.

  தற்சமயம் என்னுடைய வாசிப்பில் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ”கோட்டைபுரத்து வீடு”

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம் ரூபக்! இந்தத் தொடரை வொலைக்காட்சியில் பார்த்திருக்கின்றோம். புத்தகம் 2 பகுதிதான் கிடைத்தது...அப்புறம் கிடைக்கவில்லை...தொடர் சற்று கொஞ்சம் கூடுதலாகவே வேறுபட்டிருந்தது. முக்கியமாக ஒவ்வொருநாளும் ஒரு ராகம் வாசிக்கப்பட்டு அதனால் தீர்க்கப்படும் வியாதிகளும் சொல்லப்படும்.

  ReplyDelete
 4. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

  http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_30.html

  முடிந்த போது வந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

  ஆதி வெங்கட்.

  ReplyDelete
 5. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 6. புத்தகத்திலும் தொடரும் ஆஆஆ ... ஐயகோ ஒரு புத்தகம் கிடைக்கவில்லை என்றால் கூட தலை வெடித்து விடுமே ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 7. ருத்ர வீணை படபிடிப்பு நடந்த கோவில் ஏங்கு உள்ளது?

  ReplyDelete

இது... உங்க ஏரியா!