Thursday, December 4, 2014

திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


பெரிய மெனக்கெடல் இல்லாமல் வந்து விழும் வார்த்தைகளைக் கொண்டு எழுதப் பட்ட குறுநாவல் தான் இந்த "திசையெல்லாம் நெருஞ்சி". தலைப்பே கவிதை பேசியமையால் தான் இந்நூலை வாங்கினேன். சமீபத்தில் நான் வாங்கியப் புத்தகங்களில் சிறந்தது என்று இந்நூலைச் சொல்வேன். இந்நூலை வாசிக்க ஐந்து மணிநேரம் போதுமென்று நினைக்கிறேன், நான் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். 

இந்நூலில் மூன்று கதைகள் அடங்கியிருக்கிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை தாங்கியிருக்கின்றன. இலக்கியமென்று வார்த்தைகளை தேடித் தேடி பிடித்து எழுதி வாசர்களை அயற்சியடைய முயற்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய சில எழுத்தாளர்களுக்கு மத்தியில், பேசுமொழியில் எழுதியிருப்பது வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது, இதுதான் அவரின் பலமென்று கருதுகிறேன்.

1) இரட்சணியம்:


தொடங்குவது என்னவோ ஒருமாதிரி இழுவையாக இருந்தாலும் சில பக்கங்கள் சென்றதும் நம்மை வேறெங்கும் சிதறாமல் விறுவிறுவென ஜெட் வேகத்தில் நகர்த்திச் செல்கிறது. ஆல்பர்ட் எனும் சிறுவன் காமத்தின் வேட்கையை கட்டுப்படுத்த முடியாமல் எப்படி தணித்து கொள்கிறான் என்பது தான் மையக் கரு. கரண்டு போன சாயந்திரத்தில் அக்கா முறை பெண்ணொருத்தி செய்யும் சேட்டையும், பின் மாலினி டீச்சர், சித்தி காடில்யா மற்றும் பக்கத்து வீட்டு ஜெயராணி வரை நீளும் மன்மத லீலைகளை சுமந்து நிற்கிறது இந்த இரட்சணியம். நேர்த்தியான நடையில் விறுவிறு கதை. பதின்ம வயதில் காமத்தின் மீதான தெளிவு இல்லாத சிறுவனின் மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்வதோடு மட்டுமில்லாமல், இந்த சமூகத்தின் முன்பு மிகப்பெரிய கேள்விக்குறியை ஆல்பர்ட் என்ற பாத்திரத்தின் வாயிலாக நம்முன் வைத்திருக்கிறார் ஆசிரியர். பதின்ம வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.  2) உருமால் கட்டு:


கிராமத்திலிருந்து நகரத்திற்கு பெயர்ந்து சென்ற குடும்பமொன்று திருமணத்திற்கு முந்திய உருமால் கட்டு என்னும் வைபவத்திற்கு தனது சொந்தங்களை கூப்பிட வந்திருக்கும் நிலையை எளிமையாக விவரித்திருப்பது அழகு. குபேந்திரன் (மண மகன்)  பார்வையில் சொல்லப்படும் கதையில் கிராம சூழல்களையும், அதை சார்ந்த மனிதர்களையும், உறவினர்களையும், அவர்களின் மனப்பாங்கையும் அத்தோடு உறவினர்களை உதறித்தள்ளும் மன நிலையிலிருக்கும் திடீர் நகரவாசிகளான முன்னாள் கிராமவாசிகளான குபேந்திரனின் குடும்பத்தாரின் மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த "உருமால் கட்டு". யதார்த்த நடை.

3) திசையெல்லாம் நெருஞ்சி: 

பல வருடங்களுக்குப் பிறகு வேறொரு ஊரிலிருந்து, இன்னொரு ஊருக்கு பிழைப்பு தேடி வந்த பழநி எனும் சவரத்தொழிலாளி தனது மனைவி குருவம்மா மற்றும் குழந்தைகளோடு படும் அல்லல்களை வலியுடன் பதிவு செய்திருக்கிறார். சிறுக சிறுக சேமித்து, அந்த ஊரின் பெரிய மனுஷன் ஒருவனுக்கு வட்டிக்கு கடனாக கொடுத்துவிட்டு திருப்பி கேட்க போய் படும் அவமானத்தையும், கோவம் வந்து அந்த மேல் சாதி மனுசனை? அடித்துவிட்டு அதனால் ஊரை காலி செய்ய சொல்லி ஊர்ப் பஞ்சாயத்து சொல்வதையும் வலிகளோடு மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் திரு. சு.வே. பாவப்பட்ட மனிதர்களின் கண்ணீரை நீங்களும் உணரலாம் இக்கதையை வாசித்தால். 

திசையெல்லாம் நெருஞ்சி என்ற தலைப்பை தவிர இந்த நூலுக்கு வேறந்த தலைப்பும் பொருந்தாது என்பதை இக்கதை உங்களுக்கு சொல்லும். 

பலம்:

1) கொஞ்சம் பிசகி இருந்தாலும் "இரட்சணியம்"  கதை பிட்டுக் கதைகள் வரிசையில் அடங்கிவிடும் அபாயமிருந்தும் நேர்த்தியாக எழுதியிருப்பது.

2) புனைவுகளை தவிர்த்து மனிதர்களை மனிதர்களாகவே உலவ விட்டிருப்பது.

 இம்மூன்று கதைகளும் எங்கோ நடந்த நிஜமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது, அந்த அளவுக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. புத்தகத்திற்கு கொடுக்கும் காசுக்கு நிச்சயமாக நீங்கள் மன நிறைவைடையலாம்.

=================================================================

தமிழினி பதிப்பகம் 

முதல் பதிப்பு : 2007, இரண்டாம் பதிப்பு : 2012.

மொத்தப் பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 80/-

==================================================================

படித்துச் சொன்னது 

அரசன் 

4 comments:

 1. விமர்சனமே அட்டகாசம் அரசன்.. கச்சிதமான கட்டுக்குள் அடங்கியிருக்கிறது...

  ReplyDelete
 2. நெருஞ்சியை பூப்போல் பகிர்ந்திருக்கிறீர்கள்.. சூப்பர் அரசன்..

  ReplyDelete
 3. அட்டகாசமான அறிமுகம் அரசன். பாராட்டுகள்.

  ReplyDelete
 4. முத்தனா மூன்று கதைகளையும் கொத்தாக படித்துவிட ஆசை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!