Showing posts with label Novel. Show all posts
Showing posts with label Novel. Show all posts

Sunday, September 6, 2015

நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்




நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களைசெய்தியாளர் சரவணன் கண்ட பேட்டி ஆங்கில இதழ் ஒன்றில் வெளியானது. அதன்தமிழ்வடிவம்இது.

திருவேங்கடம் நாதஸ்வர வித்வான் மகாலிங்கம் அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்என்னை அவரது அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றார்மனைவியின் மறைவிற்குப்பின் ஒருதோட்டத்து வீட்டில் தனியாக வசிப்பதாக அறிந்திருந்தேன்அவரது அறையில் இசை சம்மந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமென நினைத்திருந்த எனக்கு பெரும் ஏமாற்றம்அறை முழுவதும் புத்தகங்கள்அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமுண்டு என்பது இதுவரை நான் கேள்விப்படாததுபல்வேறுவகையான புத்தகங்களை மிகவும் நேர்த்தியாக வகைப்படுத்திவைத்திருந்தார்சாய்வு நாற்காலியின் மேல் யுவன்சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' புத்தகம் கவிழ்ந்தபடியிருந்ததுஅருகே ஒரு பென்சில்அவர் எவ்வாறு குறிப்பெடுப்பார் என்ற ஆவல் மேலிட புத்தகத்தின் அருகே செல்லவும் அவர் உள்ளே நுழையவும் சரியாக இருந்ததுகையில் தேநீருடன் இன்முகத்துடன் என்னை நோக்கிவந்தார். மாபெரும் கலைஞன் எனக்காக அவரே தேநீர் எடுத்து வந்தது வியப்பில் ஆழ்த்தியது.

உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா’ என்றேன் வெகுளியாக.

சிரித்தார்.

இசை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் உங்கள் புத்தக வாசிப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நானும் ஒரு புத்தக விரும்பி என்பதால் இப்படி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறிதுநேரம் அது குறித்து பேசலாம்

'நானும் ஒரு புத்தக விரும்பி எனும் போது அதைப்பற்றி பேச என்ன கசக்கவாபோகின்றது? இன்று முழுவதும் புத்தகம் குறித்து மட்டுமே கூட பேசத்தயார்' என்றபடி சிரித்தார்அதேசிரிப்பு.

'இசை குறித்து பேசுவதற்கு குறிப்பெடுத்திருந்தேன். திடீரென புத்தகம் என்றவுடன் எதுவும் தோன்றவில்லை. தற்போது என்னவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?'

'யுவன்சந்திரசேகர் எழுதிய நினைவுதிர்காலம்’. இசை குறித்து இப்படி ஒரு புதினம் வெளிவந்திருப்பதை வெகுகாலம் அறியாமல் இருந்திருக்கிறேன். அற்புதமானநாவல்'

'எனக்கும் ஓரளவிற்குதான் இலக்கியப் பரிட்சயம். யுவனின் எழுத்துகள் எதையுமே வாசித்ததில்லை. அவர்பற்றி கூறுங்களேன்'

'சொன்னால் நம்பமாட்டீர்கள். யுவனின் எழுத்தை நானும் இப்போதுதான் வாசிக்கிறேன். இதுதான் நான் வாசிக்கும் அவரின் முதல் நாவல். வாசிக்க ஆரம்பித்த ஓரிரு பக்கங்களில் யுவனை வெகுவாய் பிடித்துவிட்டது. கவிதை, சிறுகதை, நாவல் என தொடர்ந்து சிறப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இவர் இலக்கியப்பரப்பில் பிரசித்திபெறாமல் இருப்பது வருத்தமேஅவருக்கு விளம்பரம் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் அவரைப் படித்தவர்களாவது அவர்குறித்து பேசவேண்டாமா?நீங்களும் இசைப்பிரியன் என்பதால் உங்களுக்கும் நினைவுதிர்காலம்’ நாவலைப் பரிந்துரைக்கிறேன்கட்டாயம் படித்துப்பாருங்கள்அவரது எல்லா படைப்புகளையும் நண்பரிடம் அனுப்பித் தரச் சொல்லிக்கேட்டிருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும்போது அவர் குறித்து விரிவாக நிச்சயம்பேசுகிறேன்'

'நினைவுதிர்காலம் நாவல் குறித்து சொல்லுங்களேன்?'

இசை குறித்து அபாரஞானம் யுவனுக்கு. இசையை ரசிக்கத் தெரிவதும் ஒருகலை தான். அது குறித்து கட்டுரை எழுதச்சொல்லிகேட்டிருக்கிறார்கள் போல. அவரோ அதை நாவல் வடிவில் கொடுத்திருக்கிறார். ஒரு நிருபர் ஒரு இசைக்கலைஞனைப் பேட்டியெடுப்பது போன்று நாவல் வடிவம். நீண்ட பேட்டிஒரு இடத்தில் கூட அது ஒரு கற்பனை என்று தோன்றாத வண்ணம் எழுதியிருக்கிறார்இசையை நேசிப்பவர்களுக்கு திறப்புகள் பல கிட்டும் வகையில் உரையாடல்கள். இசையை நேசிப்பவர்களுக்கு உத்வேகம் தரும் உரையாடல்கள்இவ்வளவு நாள் நாம் கேட்டுக்கொண்டிருந்தது இசையா என்ற கேள்வியை இளைஞர்கள் மனதில் தோன்றச் செய்யும்இசைக் கற்றுக்கொள்ள விரும்புவர்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவமும் உழைப்பும் தர வேண்டுமென்பதை வலியுறுத்தவும் செய்யும் .இசைக்கு அவர் செய்திருக்கும் மிகப் பெரிய பங்களிப்பு இந்நாவல்'

மற்றொரு அறையில் தொலைபேசி அழைக்கும் சப்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்று செய்கை காட்டி விட்டு எழுந்து சென்றார். யுவனின் 'நினைவுதிர்காலம்' நாவலைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்தேன்.

=============================================================================================
காலச்சுவடுபதிப்பகம் | விலைரூ. 230/-
=============================================================================================


வாசித்துச் சொன்னவர்,

திரு. த. ராஜன் 


Monday, August 31, 2015

"எங் கதெ" (நாவல்) - இமையம்




இதற்கு முன்னரே வீடியோ மாரியம்மன் என்ற நூலின் வாயிலாக எழுத்தாளர் இமையத்தைப்  பற்றி அறிந்திருந்தாலும், அதன் பிறகு வாங்கிய "ஆறுமுகம்" என்ற நூலை வாசிக்காமல் கிடப்பில் போட்டிருந்தமையால் , இமையத்தின் புதிய வெளியீடான "எங் கதெ" நாவலை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டினேன், ஒருநாள் சந்திப்பின் போது, "தலைவரே, "எங் கதெ" வாங்கிட்டிங்களா? எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க, நீங்க வாங்கவில்லை என்றால் நான் வாங்குகிறேன்" என்று சொன்ன தோழர் சீனுவை சாந்தப்படுத்தி, நான் வாங்கிவிடுகிறேன் என்று சொல்லி, அதே வாரத்தின் இறுதியில் டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி வந்தேன்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து, எழுத்தாளர் அபிலாஷ், இந்து தமிழ் நாளிதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்ததை படித்ததும், வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூலை மூடி வைத்துவிட்டு, அந்த வெற்றிடத்திற்குள் இந்த  "எங் கதெ" யை புகுத்திக் கொண்டேன். நண்பனை சந்திக்க கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருந்தேன், அவன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும், வசதியான இருக்கையாய் பார்த்து அமர்ந்து இந்நூலை வாசிக்க துவங்கினேன். அந்த நண்பர் வருவதற்குள் நூலில் பாதியை வாசித்து முடித்திருந்தேன். நூலின் நகர்வு அவ்வளவு விறுவிறுப்பு! சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்!

பொதுவாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் இருக்கும் அலாதி வேறெதிலும் இருக்காது, அப்படியொரு தீவிரம் காட்டுவார்கள் நம்மவர்கள், இந்த நம்மவர்களில் அடியேனும் அடக்கம்! அப்படியான ஒரு தனி நபரின் அந்தரங்கம் தான் கதையே! முதல் நான்கு பக்கங்களை வாசித்தாலே போதும் கதையின் வடிவத்தை யூகித்து விடலாம். சில நேரங்களில் கதையின் விறு விறு நகர்வை வட்டார எழுத்து நடை சிதைத்து படிக்கிற ஆர்வத்தை குறைத்து விடும். அப்படியொரு நாவல் ஒன்று எனது புத்தக அடுக்கில் மூன்று வருடங்களாக தூங்கி கொண்டிருக்கிறது. நல்லவேளை அம்மாதிரியான சிக்கல் இந்த புத்தகத்திற்கு இல்லை. கடலூர் வட்டார வழக்கில் புனையப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கான சிக்கல்கள் ஏதுமில்லை!

விபத்தில் கணவனை இழந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிட்ட, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு வருகிறாள் கமலா! ஊரிலிருக்கும் இளசிலிருந்து, பெருசு வரை எல்லோரும் அவளின் கவனத்தை ஈர்க்க படாத பாடுபட , அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இக்கதையின் நாயகனுக்கு கிட்டுகிறது. அதன்பின்பு குடும்பத்தை மறந்து, தங்கைகளை மறந்து, ஊரார்களை மறந்து, கடைசியில் தன்னை மறந்து இறுதியாக என்னவாகிறான் என்பதே மொத்தக் கதை. இம்மாதிரியான கதைகளையும், நிகழ்வுகளையும் அதைச்செய்யும் மாந்தர்களையும் நேரிடையாக பார்த்து வளர்ந்த சூழல் கொண்ட எனக்கு, இக்கதை பெருத்த அதிர்வை கொடுக்கவில்லை என்றாலும், உணர்வுகள் ததும்பிய எழுத்து நகர்வு மனக் கிளர்ச்சியை தூண்டுகிறது.

அச்சை வைத்து இயங்கும் சக்கரத்தைப் போல, கமலாவை சுற்றி தான் கதை நகர்கிறது. தன்னோட 28 வது வயதில் அவளிடம் தன்னை தொலைக்கிறான், 38 வயதில் தெளிவு பெறுவதாக முடித்திருக்கிறார். கமலாவை மிகத் தெளிவான பாத்திரமாக புனைந்து, அவளின் காலில் விழுந்து கிடக்கும் நாயை போல நாயகனை புனைந்திருப்பது அதகளம்! தனக்கே தனக்கு சொந்தமாக இருந்தவள் திடீரென பணி இடமாறுதலாகி போன இடத்தில் வேறொருவனிடம் வழிவதாக அமைத்து, இவனின் நிலை என்ன? இத்துணை வருடங்களாக என்னவாக இருந்தோம் என்ற சுய புரிதலை துவக்கி வைப்பது தான் எதார்த்தத்தின் உச்சம்!

ஓரிடத்தில் அவன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை தெரிய வைக்க, ஒரு நிகழ்வை சொல்லியிருப்பார். அதுதான் என்னைக் கவர்ந்த அம்சம். கமலாவிடம் அவமானப் பட்டு, அதன் விரக்தியில் வந்து வீட்டின் கொட்டகை கட்டிலில் குப்புற கிடக்கையில், ஊரிலிருந்து வந்திருந்த தங்கச்சிகளின் பிள்ளைகள் வந்து பொங்கல் காசு கொடு மாமா என்று கேட்கையில் பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு பசங்களை விரட்டிவிட்டு அவனின் அம்மா பாக்கெட்டில் பணம் வைப்பதும், அவனின் தங்கைகள் சும்மா பாக்கெட்டை செக் செய்வது போல் ஆளுக்கு கொஞ்சம் பணம் வைப்பது போல் வைத்து அந்தக் காட்சி கண்ணெதிரே வந்துப் போகுமளவிற்கு எழுத்தில் அனல் காட்டியிருப்பார் திரு. இமயம்.

ஊடாக, கமலாவின் கணவன் பின்புலத்தையும், அவரின் போராட்ட மனப்பான்மை பற்றியும், இவனை சித்தப்பா பையன் ஒருவனைக் கொண்டு இவனின் செய்கைகளை எடுத்துரைத்து இதெல்லாம் தவறு என்று சொல்வதாகவும், எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக நான் கமலா எனும் கடலினும் விழுந்து கிடக்கிறேன், தப்பென்று தெரிந்தும் அதிலிருந்து மீள மனமில்லாமல் கிடக்கும் ஒருத்தனின் வாழ்வை சினிமாவாக கண்ட திருப்தியை கொடுக்கும் இந்த நாவலை வாசித்து முடித்தால்!

இந்த மாதிரியான வகையறா கதைகளுக்கு முடிவு என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தாலும் கதையின் நகர்வு அதை மறைத்து விடுகிறது. தான் சொல்ல வந்ததை அறுபது எழுபது பக்கங்களில் சொல்லிவிட்டாலும், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே பக்கங்களை இழுத்தது சற்று இழுவையாக இருந்தது. இப்படி சின்ன சின்ன தொய்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த "எங் கதெ"   எல்லோருக்குமான கதை தான்!

இவரின் முந்தைய படைப்பான வீடியோ மாரியம்மன் பற்றி வாசிக்க இங்கு கிளிக்கவும்

========================================================================

புத்தகத்தின் பெயர்: எங் கதெ (நாவல்)
வெளியீடு: க்ரியா
ஆண்டு: 2015
பக்கங்கள் : 110
விலை : 110/-
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்:  creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
========================================================================


Thursday, March 26, 2015

மாங்கொட்ட சாமி - புகழ்




எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் வாங்கிய சில புத்தகங்கள் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன அப்படி ஒன்று தான் இந்த மாங்கொட்ட சாமி. வழக்கம்போல் ஒரு ஞாயிறின் அந்தியில் டிஸ்கவரி புக் பேலசின் புத்தக வரிசைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் சிக்கியது இந்நூல். உண்மையில் இந்த மாதிரி புத்தகத்தைத் தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், முதல் பக்க எழுத்து நடை அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ள வாங்கி வந்த கையோட படித்தும் முடித்தாயிற்று. 

மொத்தம் பதிமூன்று கதைகளைக் கொண்ட இந்நூல் பழைய பாக்கெட் நாவல் சைசில் இருக்கிறது. எவ்வித அலங்காரமும், புனைவுமற்ற எழுத்து நடை. ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கையில் அருகில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கதையாக சொன்ன உணர்வை தருகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் மனிதர்களோடு சில காலம் பழகிய மன நிறைவை தருகின்றன இக்கதைகள். வாழ்ந்து சலித்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை எந்த சலிப்புமில்லாமல் சொல்லுவதில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்  இந்நூலின் ஆசிரியர் திரு. புகழ்.

கிராமங்களில் முன்னோர்கள் சொல்லும் செவி வழி கதைகளை கூர்ந்து கவனித்தால் அதிலொரு நேர்த்தி இருக்காது. அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். கதை சொல்லிகள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி உயர்த்திச் சொல்வர். புகழின் கதைகளைனைத்தையும் செவி வழி கதைகளின் அச்சுப் பதிவாக காண்கிறேன். இதிலொரு நேர்த்தி இருக்கிறது. இவரின் கதை மாந்தர்கள் அவ்வளவு வலுவாக புனையப்பட்டிருக்கின்றனர். இக்கதைகளைனைத்தையும் புனைவு என்று எளிதில் கடந்து விட முடியாது, உதாரணமாக,  "செங்காட்டு ஜோசியன்", "தொங்கட்டான் கெழவி" என்ற இரண்டு கதைகளையும் சொல்லலாம்.

தொங்கட்டான் கெழவி எனும் கதையில், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்த பெண்ணொருத்தி தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காடுகரையில் கூலி வேலைசெய்து அவனை வாத்தியார் வேலைக்கும் படிக்க வைத்து விட்டதாகவும், பிறகு அந்தப் பையன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து கிராமத்தில் நிலபுலன்களை வாங்கி, சொந்தங்களில் பெண் தருவதாக சொல்லியும், தனக்கு தெரிந்த பக்கத்தூரில் வறுமை நிறைந்த குடும்பத்திலிருந்த பெண்ணை பையனுக்கு கட்டி வைத்திருக்கிறாள். இறுதியாக, முப்பது நாளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த கெழவி தன் மகனின் முகத்தை பார்த்ததும் உயிர் பிரிந்ததாக கதையை எளிதாக முடித்திருக்கிறார். வழமையான கதைதானே, இதிலென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கதையில் ஒரு நாவலுக்குண்டான விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார். கிராமப்புற இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும், ஒப்பாரி வைக்கத் தெரியாத இளம் பெண்களுக்கு எப்படி ஒப்பாரி என்று வகுப்பெடுப்பதையும், பேருந்து நடத்துனரின் தில்லு முல்லுகளையும் அதற்கு கெழவி செய்த அறிவுக் கூர்மையான செயல்களையும் ;தொகுத்து சொன்னால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு விசயங்களை உள்ளடக்கி குறுங்கதையாக்கியிருக்கும் எழுத்தாற்றல்.

அடுத்து செங்காட்டு ஜோசியன் என்னும் கதை, செமத்தியான தீனி. கிராமப் புற மக்கள் இன்னும் ஜாதகம் ஜோசியம் ன்னு திரிந்து கொண்டிருக்கிறார்கள். செங்காட்டில் ஜோசியன் ஒருத்தன் உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதகாவும் அதனால் பலரின் அந்தரங்கள் வெளிப்பட்டு மனைவி மார்களிடம் விளக்கு மாறு அடிவாங்குவதாக சொல்கிறார். கல்யாணம் பண்ணி நாலு மாசம் கூட இருந்துவிட்டு வெளிநாடு போன ஒருத்தன் நாலு வருஷம் கழிச்சி வந்து மனைவி குழந்தையோடு வந்து ஜோசியம் பாக்க சென்றிருக்கையில் இது உன் புள்ளையே இல்லை எப்படிப்பா நான் ஜாதகம் பார்ப்பது என்று உண்மையை போட்டு உடைக்க, மிரண்டு போனவன் ஆத்திரத்தில் ஜோசியக்காரனை அடிக்கப் போக, ஜோசியன் மீண்டும் ஆணித்தரமாக சொல்ல, வெளிய எழுந்து வந்து மனைவியை போட்டு மிதிக்க, அவள் வலி தாங்காமல், நாலு மாசம் கூட படுத்துவிட்டு நீ வெளிநாடு போய்டுவே, நாலு வருஷம் நான் சும்மா இருப்பதா ? எங்க நீ இருந்து பாரேன் ன்னு காட்டுக் கத்தலா கத்தியதாக சொல்லியிருக்கிறார். ஒலச்சான் எனும் பாத்திரம் ஜாதகம் நீட்ட, நீ என்னைக்கு உன் கள்ளத்தொடர்பை விடுறியோ அன்னைக்கு நல்லா இருப்பே ன்னு போட்டு உடைக்க அது ஓலச்சானின் பொண்டாட்டி தெரிஞ்சி குடும்பத்தில் சண்டையாகிப் போக கடுப்பில் மறு வாரம் வேறொரு ஜாதகத்தை தூக்கி கொண்டு போயி அவனிடம் இது என் மகள் ஜாதகம் எப்ப கல்யாணம் நடக்கும்னு பாரு என்று சொல்லிருக்கார் ஓலச்சான். செங்காட்டு ஜோசியன் வாங்கிய ஒடனே, இந்த புள்ளையோட அம்மாக்காரி எப்படி எவன் கூடவோ ஓடிப்போயி மூணு மாசம் கழிச்சி திரும்பி வந்து நல்லபடியா குடும்பம் நடத்துறாளோ, அப்படித்தான் இந்தப் புள்ளையும் கல்யாணத்துக்கு முந்தி யார் கூடவோ ஓடிப்போயி ஆறு மாசம் கழிச்சி மீண்டும் வந்து நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தும் னு சொல்லிட்டு ஜாதகத்தை மூடி கீழ வைச்ச ஜோசியனை பார்த்து இது எம்மகள் ஜாதகம் இல்ல உன் மகள் ஜாதகம் டா ன்னு சொல்லிட்டு இன்னொரு ஜாதகமும் இருக்கு பாக்குறியா ? ன்னு சொல்லிட்டு ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வெளிய வருவதாகவும், அதிலிருந்து ஜோசியன் தன் தொழிலை விட்டதாக  கதை முடியும். ஒவ்வொரு கதையின் முடிவில் செம சுவையான முடிவு காத்திருக்கிறது.

இதுமாத்திரமில்லாமல் இதிலிருக்கும் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவையில் மனதை தைக்க கூடிய விஷயம் அடங்கியிருக்கும். கொடுக்கும் காசிற்கு நிச்சயம் மன நிறைவை அடைவீர்கள்.

பக்கங்கள் : 152

பதிப்பகம் : க்ரியா 

வெளியீடு : 2009

விலை : ரூபாய் 125/-   


படித்துச் சொன்னது 

அரசன் 
http://www.karaiseraaalai.com/
   

 

Wednesday, February 25, 2015

பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம் - திலகவதி


   பிறக்காத குழந்தைக்கு இவள் எதற்காக கடிதம் எழுத வேண்டும் !!, அதுவும் நாவல் நீளத்திற்கு பெரிய கடிதம் !!. மேற்கத்தியக் கலாச்சார வாழ்க்கையில் திருமணத்திற்கு முன்பே இணை சேர்தல் என்பது மிகச்சாதாரணமாகிவிட்டது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தின் வசத்தால், அசந்தர்ப்பவசமாக அவள் கர்ப்பமாகிறாள், அவளது கர்ப்பத்திற்கு காரணமானவன் அவளை கண்டுகொள்ளாமல்,அவளை கவனித்துக்கொள்ளாமல் அந்த எதிர்பாரா கருவை கலைக்கச் சொல்கிறான், அந்த கரு ஒரு அவசியமற்றது , அவமானகரமானது என்று சொல்லி காணாத இடத்திற்கு மறைகிறான்.

               அவளது வாழ்வுக்கு பொருள் சேர்க்க அவள் பார்க்கும் வேலைக்கு அந்த கரு தேவையற்றது எனவும், இப்போது அவளிருக்கும் நிலையில் அந்த கரு தேவையில்லை எனவும் அலுவலக முதலாளியும் கலைக்கச்சொல்கிறார். கலைக்காமல் காத்து அந்த கருவை குழந்தையாக்கி உலகத்திற்கு தர வேண்டும் , “ஏதுமறியா கருவை நான் ஏன் கொலை செய்ய வேண்டும்” என்று அதை குற்றவுணர்வு சிறிதுமின்றி “ஒரு தாயாக இருக்கறதுங்கறது ஒரு வியாபாரமில்லை, ஒரு கடமை கூட இல்லை, அது பல உரிமைகள்ள ஒண்ணு...” என தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையாக மாறக் காத்திருக்கும் அந்த கருவுக்கு தத்துவம் சொல்லியபடி அதை சுமக்க ஆயத்தமாகிறாள்,சுமந்து கொண்டும் திரிகிறாள்.

           அந்த கருவின் வளர்ச்சியோடு சேர்ந்தே கதையும் வளர்கிறது.அவள் டாக்டரிடம் செல்கிறாள், ஸ்கேனிங்க் செய்து கொள்கிறாள், வேலைக்குச் செல்கிறாள் , அவளது மணமாகாத கனவன் அவளோடு பேசுகிறான், ... கதையில் நிகழ்கிற எல்லாவற்றையும் தனது கருவுக்கு கடிதமாக சொல்வது மாதிரியே கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டயரிக்குறிப்பு மாதிரி அவ்வப்போது தனக்கு தோன்றுவதையெல்லாம் தனக்குள் உருவாகிக்கொண்டிருக்கும் அந்த குழந்தையோடு வார்த்தைகளால் ஊடாடிக்கொண்டே செல்கிறாள். அந்த கரு ஆணா, பெண்ணா என்று தெரிவதற்கு முன்பே , உலகம் எவ்வளவு மோசமானது என்றும்,  பெண்ணாக பிறந்தால் உலகை எவ்விதமாக எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் பயமுறுத்துகிறாள், அல்லது அது ஆணாகப் பிறந்தால் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கூறி, பெற்றுக்கொள்வதற்கு முன்பே அதை வளர்க்க ஆரம்பிக்கிறாள்.

          “ஒரு ஆணாக இருக்குறதுங்கறது முன்னால ஒரு வாலோட இருக்குறது மட்டுமில்லனு உனக்குச் சொல்ல நான் முயற்சி செய்யறேன்,அது நீ ஒரு ‘நபரா’ இருக்கறதுல இருக்கு என்னைப் பொறுத்த அளவுல நீ ஒரு நபரா இருக்கறதுங்கறது எல்லாத்தையும்விட முக்கியமானது நபர்ங்கறது ஒரு அற்புதமான வார்த்தை, ஏன்னா அதுக்கு ஆண்,பெண் ங்கிற வரையறை இல்ல, வால் இருக்குறவங்களுக்கும், இல்லாதவங்களுக்கும் அது எல்லையை வகுக்கிறதில்ல. இதயத்துக்கும், மூளைக்கும் பாலியல் வேறுபாடு கிடையாது, இதயமும், மூளையும் கொண்ட நபரா நீ இருக்கனும்னா ஆணுன்னும் பொண்ணுன்னும் இருக்கறதால ஒருத்தர் இப்படியிப்படித்தான் இருக்கனும்னு வற்புறுத்துறவங்கள்ள ஒருத்தனா நிச்சயம் நீ இருக்கக் கூடாது...

               என்னை நிராகரித்து விட்டுச்சென்றுவிட்டு உன்னைக் கலைக்கச்சொல்லும் உன் அப்பனை போல அல்லாமல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிறாள்.  உலகத்தின் சாலைகள் எப்படிப்பட்ட கரடுமுரடான கற்களாலும், முற்களாலும் ஆனது, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறாள், பயமுறுதலோடு நின்று கொள்ளாமல் எதற்கும் அஞ்சாமல் தைரியமாக உலகை எதிர்கொள்ள வேண்டும் என தைரியமூட்டுகிறாள். “எனது பேச்சை வேறு யாராவது கேட்டால், எனக்கு கிறுக்கென்று குற்றஞ்சாட்டுவாங்களா” என உங்களுக்குள் அந்தக் கேள்வி தோன்றுவதற்கு முன்பே முந்திக்கொள்கிறாள். தத்துவங்கள் சொல்கிறாள், தன் வாழ்வை கதையாக்கி, அந்த கருவுக்கு சில கதைகள் சொல்கிறாள்.. பேசிக்கொண்டே இருக்கிறாள்.

       இந்த புத்தகத்தில் கடைசி சில பக்கங்களில் வாழ்வின் எதார்ததத்தை, கற்பனைக்கும் நிதர்சனத்திற்குமான வேறுபாட்டை தன் கண்களுக்குத் தெரியும் அந்த குழந்தையிடம் அந்த தாய் பேசுகிறாள், இந்த உரையாடலை இந்த புத்தகத்தின் இதயம் என்று சொல்வேன் நான்., அந்த இதயத்தின் துடிப்புகளை கேட்டவன் என்ற முறையில் சொல்கிறேன், நீங்களும் கூட அந்த துடிப்புகளை கேட்க முடியும். அவள் அந்த குழந்தையைப் பெற்றுக்கொள்வாளா?  அந்த குழந்தை எப்போது பிறக்கும் ?, அதன் அப்பா அவளோடு சேர்வானா ? , என வினாக்களின் விரட்டல்கள் கதையோடு சேர்த்து  நம்மை ஓடச் செய்கின்றன.

        இந்த படைப்பு ஒரு சமூக நாவலா, தத்துவ விளக்க நாவலா, கடிதமா, திரில்லரா, என வகைகளுக்குள் . யோசிக்கிற போது இது ஒரு புதுவித படைப்பாக்கம். இந்நாவல் இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஓரியானா ஃபெல்லாசி எழுதிய “Lettera a un bambino mai nato” என்ற புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம். பிற பயமுறுத்தும் வார்த்தைக்கோர்வை மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் போலன்றி , இந்நாவலை திலகவதி பேச்சுத்தமிழ் வழக்கில் மிக அழகாக மொழியாக்கம் செய்துள்ளார்.  திருமணத்திற்கு முன்பே கிடைத்துவிட்ட எதிர்பாராத கர்ப்பத்தை சுமந்து திரியும் , பெண்ணிய சிந்தனையுள்ள, வேலைக்குச்செல்லும் ஒரு  பெண் தன் கருவோடு புலம்பும் புலம்பல்கள்.  வலி, வேதனை, ஆழ்மன அலைகளின் ஆழமான பதிவு.

-விஜயன் துரைராஜ் 


சில குறிப்புகள்:

இத்தாலிய மூலம் :              Lettera a un bambino mai nato
படைப்பு:                              Oriana Fallaci (இத்தாலிய எழுத்தாளர்)
இத்தாலிய மூலம் 
பதிப்பிக்கப்பட்ட வருடம்:   1975
தமிழ் மொழியாக்கம் :        திலகவதி 
பதிப்பகம்:                           அம்ருதா, சென்னை