Sunday, February 15, 2015

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்

படைப்பாக்கம் : சீனு 


இந்தப் புத்தகத்தை வாங்கியதற்கான மிக முக்கியமான காரணமாக நான் நினைப்பது ஜெயமோகன் என்பதையும் கடந்து புத்தகத்தின் தலைப்பு தான். ஆன்மீகக் கதைகள், சாமிக் கதைகளை விடவும் பேய்க்கதைகளின் மீது இயல்பாகவே நமக்கொரு ஈர்ப்பு இருக்கிறது. ஒன்று 'பேய் இருக்கிறதோ' என்ற பயமாக இருக்கலாம். இல்லையேல் 'பேய் இருந்துவிடுமோ' என்ற அச்சமாகவும் இருக்கலாம். ஆனால் பேய் என்றால் உள்ளுக்குள் எங்கோ ஓர் மூலையில் நம்மையும் அறியாமல் ஏதோ ஒன்று எட்டி உதைக்கத் தான் செய்கிறது. அதுவும் பனி சூழ்ந்த நள்ளிரவுகளில் என்றால் கேட்கவே வேண்டாம். நம்முடைய முதுக்குப் பின்னால் யாரோ ஒருவர் அமர்ந்து கொண்டு நம்மையே வெறித்து நோக்குவது போல வெகு எளிதாக கற்பனை செய்ய முடிகிறது. அது பொய் என்பது பகுத்தறிவுக்குத் தெரிந்தாலும் ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. எதிர்பாராத ஒரு அச்சத்தை, புகை போன்ற உருவத்தை வெகு இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 

அந்த திகிலை இன்னொருவரின் அனுபவங்களின் வாயிலாக, கதைகளின் மூலமாகப் படிக்கும் போது ஒன்று இவன் என் இனம் என்று தோன்ற வைக்கிறது. இல்லையேல் பேய் பயம் நமக்கு மட்டும் இல்லை அது ஒரு பொதுச்சொத்து என அகமகிழத் தோன்றுகிறது. 'பேய் இருக்கு இல்ல' என்ற தர்க்க ரீதியான ஆராய்ச்சிகளையும் தாண்டி பேய்க்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கவர்ச்சி அது. 

பேய்க்கதைகளைப் படித்து வெகுநாட்கள் ஆகிறது. சிறுவர்மலரிலும், தங்கமலரிலும் அம்புலி மாமாவிலும் படித்த கதைகள் வளர்ந்து பெரியவனானதும் எங்குமே படிக்கக் கிடைக்கவில்லை. அதையும் மீறி பேய்க்கதை போன்ற ஒன்றைப் படித்தேன் என்றால் அது கொலையுதிர்க் காலம். சிற்சில இடங்களில் சுஜாதா மிரட்டியிருப்பார். அவ்வளவுதான் பேய்க்கதைகளுக்கும் எனக்குமான தொடர்பு. 

ஆனால் பேய் குறித்த அனுபவக் கதைகள் இன்னும் அலாதியானது. பள்ளிகாலங்களில் தொடங்கி இன்று வரைக்கும் என்னோடு பயணிப்பது. மாதத்தில் ஒருவராவது பேயைப் பற்றி பேசிவிடுகிறார்கள். ஆட்டோவில் பேய், இரவுக் கட்சி முடிந்து வீடு திரும்பும் போது வழி கேட்கும் பேய், வெள்ளிகிழமை எ,.ஆர். கிணத்துப் பேய் என்று பேய் சார்ந்த அனுபவங்கள் கதைகளை விட மிக சுவாரசியமானவை. எங்கே இந்த வரியை என்னோடு சேர்ந்து கூடவே ஒரு பேயும் வாசித்துக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்துப் பார்த்தால் அது கூட சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு பேய்க்கதைகளின் பின்னணியிலும் ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் இருக்கும் என்கிறார் ஜெமோ. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் சிறுகதைத் தொகுதி கூட அப்படியாகப் பின்னப்பட்ட ஒன்று தான். இத்தொகுதியில் மொத்தம் பத்து கதைகளை இருக்கின்றன. அவற்றில் சில உயிர்மை இதழிலும் இன்னும் சில வேறு இதழ்களிலும் வெளிவந்தவை. நிழல்வெளிக் கதைகள் என்ற தலைப்பில் உயிரமைப் பதிப்பகம் மூலம் வெளிவந்த புத்தகம் தற்போது மறுபதிப்பாக 'பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்' என்ற தலைப்பில் கிழக்கு வெளியீடாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.



இமையோன் - விடுமுறை தினத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் களிக்கச் செல்லும் நாயகன், திடிரென அடித்துப் பெய்யும் பெரு மழையில் வழி தவறி ஒரு பாழடைந்த வீட்டினுள் தஞ்சம் புகுகிறான். அங்கு நடப்பது எல்லாமே இயல்பாக இருந்தாலும். 'என்ன இயல்பாகவே முடியப் போகிறது' என்று யோசிக்கும் நொடியில் கதையின் போக்கை மாற்றுகிறார் ஜெமோ. அகம் சார்ந்த வர்ணனைகள் ஜெமொவிடம் எப்போதும் இயல்பாகவும் ரசனை மிக்கதாகவும் வெளிப்படும். அவ்வகையில் இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதை முக்கியமானது. மலைகள், மலைகளில் நிகழும் கணங்கள் பற்றிய ஜெமோவின் விவரணை அழகானது.

பாதைகள் - பேய் நடமாட்டம் உள்ளதாக அஞ்சப்படும் வீட்டிற்கு ஒரு ஓவியர் குடி வருகிறார். அந்த வீடு முழுவதும் தன் ஓவியத் திறமையின் மூலமும் வெறும் கதவுகளையும் ஜன்னல்களையும் தத்ரூபமாக வரைகிறார். அவை மாயக்கதவுகள். எங்கு நுழைந்தால் எங்கு வெளிப்படுவோம் என்பதை அறியமுடியாத மாயச் சுழலை உருவாக்கக் கூடியவை. அந்தச் சுழலினுள் நாயகன் சிக்கிக் கொள்கிறான். அந்த வீட்டில் பேயாக நடமாடுபவர்களை அச்சுழலினுள் சந்திக்க நேர்கிறது. அங்கிருந்து அவன் வெளிப்பட்டானா இல்லையா என்பது தான் கதை. இந்தத் தொகுதியை நள்ளிரவில் படித்தேன் என்பதால் பேய்க் கதைகளின் அதீத்தை இக்கைதையின் மூலம் உணர முடிந்தது.  

அறைகள் - கொஞ்சம் வித்தியாசமான கதை. வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவசியம் இல்லாமல், அடங்கா பாசத்தினை வெளிபடுத்தக் கூடிய கதை. ஆனால் இதன் முடிவு பின்நவீனத்துவத்தின் பாணி என்பதால். முடிவு அவரவர் அவதானிப்பில். 

யட்சி, ஏழுநிலைப் பந்தல் சுவாரசியமான வாசுப்பனுபவத்தைத் தரக்கூடியவை. தம்பி, ஐந்தாவது நபர் வழக்கமான பழிவாங்கும் கதைகள் என்றாலும் சுவாரசியமானவை. இவையல்லாமல் குரல், ரூபி இந்த இரு கதைகளும் மனிதர்கள் விலங்குகளின் மூலம் வேட்டையாடப்படுதலாக அமைந்த கதைகள். 

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பத்து கதைகளுமே ஆசிரியர் கதை கூறுவது போல் அல்லாமல் கதையின் நாயகன் தன்னிலையில் இருந்து கதையை விவரிப்பது போல் கூறப்பட்டவை. அதுவே இந்தக் கதைகளுக்கு கூடதல் சுவராசியத்தை அளிப்பதாக உணர்கிறேன். மேலும் ஒவ்வொரு கதையிலும் ஒரு கடந்தகாலம் இருக்கிறது. கடந்தகாலம் நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்ளும் போது அந்த ஒரு அநீதி ஒரு துரோகம் ஒரு அடங்காத மோகம் என்ற புள்ளியில் வந்து தன்னை இணைத்துக் கொள்கிறது. அங்கு பேய்களும் தேவதைகளும் உயிர்பெற்று உச்சம் அடைகிறார்கள்.,

பெரியவர்களுக்கு சிறப்பான வாசிப்பனுவத்தையும் குழந்தைகளுக்கு அட்டகாசமான பேய்க்கதைகளை கூற உகந்த கதைகளையும் கொண்ட தொகுதியாக இத்தொகுப்பைப் பார்க்கிறேன். மேலும் வெறும் பேய்கதைத் தொகுதியாக அல்லாமல், ஒவ்வொரு சிறுகதையிலும் ஜெமோ முன்வைக்கும் நுணுக்கமான விளக்கங்கள் விவரணைகள் ஒரு சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்கூறுவதையும் உணர முடிகிறது. நேரத்தை வஞ்சம் தீர்க்காத புத்தகம் என்பதால் நிச்சயம் படிக்கலாம்.  

பெயர் : பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : 100



4 comments:

  1. ஜெயமோகன் கதைகள் இதுவரை வாசித்ததில்லை. வாசிக்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்...

    இ.செளந்தர்ராஜன் அவர்களின் கதைகள் கொஞ்சம் வாசிப்பதால் கொஞ்சம் தைரியம் வந்துள்ளது....:) அப்படியும் ராஜேஷ்குமார் அவர்களின் ”காற்று உறங்கும் நேரம்” தனியாக வாசிக்க பயந்து கொண்டு ரொம்ப நாள் வைத்திருந்து என்னவர் விடுமுறையில் வந்த போது வாசித்தேன்...:)) கொலையுதிர் காலமும் பேய்க்கதை போல் தான் என்று சொன்னார். இன்னும் படிக்கவில்லை....:)

    ReplyDelete
  2. இதுக்குக் கொடுத்த கருத்து "இரவு" கதை விமரிசனத்தில் தவறுதலாகக் காப்பி, பேஸ்ட் ஆகி விட்டது! பேய்க்கதை என்பதாலும் திகிலூட்டும் நிகழ்வுகள் இருப்பதாலும் இரண்டையும் கிடைச்சால் படிக்கணும். :))))

    ReplyDelete
  3. என்னாது ... பேய் கதையா ... வேணா சாமி ... ஆளைவிடுங்க . >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!