Friday, March 25, 2016

ஆரஞ்சு முட்டாய் - கார்த்திக் புகழேந்தி


கார்த்திக் புகழேந்தியின் முதல் தொகுப்பான 'வற்றாநதி' ஏற்படுத்திய தாக்கத்தினால் இவரின் எழுத்துக்களை தீவிரமாக பின்தொடர ஆரம்பித்தேன். குறிப்பாக இவரின் வழக்குச் சொல் நிறைந்த எழுத்துக்கு ரசிகன். வற்றா நதிக்குப் பின் இவரின் எழுத்துலக செயற்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், "கதை சொல்லி"யை மீண்டும் வெளிவரச் செய்தது. கடந்த டிசம்பரில் சென்னை வாசிகளுக்கு மரண பயத்தைக் காட்டிச் சென்ற தொடர் மழையில் இவரின் நேரடி களச் செயற்பாடுகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. வெறும் எழுத்தோடு மட்டும் நின்றுவிடாமல் இம்மாதிரியான மனித நேயமிக்க செயற்பாடுகள் காலம் கடந்தும் பெயர் சொல்லும். உனது ஈரமிக்க செயற்பாடுகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் நண்பா.



வற்றா நதியை வாசித்துவிட்டு கா. பு. விடம் அரை மணி நேரத்துக்கு மேலாக அந்நூலைப் பற்றி உரையாடினேன். பெரும்பாலும் எழுத்தாளர்களோடு உரையாடுவதை விட அவர்களின் எழுத்துக்களோடு சிநேகம் கொள்வதைத் தான் விரும்புவேன், ஆனால் மனிதர், தன் எழுத்துக்களைப் போன்றே பழகவும் எளிமையாக இருக்கிறார். வாருங்கள் ஆரஞ்சு முட்டாயைப் பற்றி பார்ப்போம்.

'வெட்டும் பெருமாள்' கதையில், ஆரம்ப சொல்லாடல்களே நம்மை கதைக்குள் இயல்பாக ஒன்றவைத்துவிடுகிறது. கொஞ்சம் கவனம் சிதறினாலும் மீண்டும் வாசிக்க வேண்டிய கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் வாசித்து முடிக்கையில் 'வெட்டும் பெருமாள்' நெஞ்சின் ஆழத்தில் குடி கொள்கிறான்.

'தேனடை' கதையில் சிறுவர்களின் இயல்பான உரையாடலோடு, தோட்டத்துக்காரனுக்கும், வாத்துக்காரிக்கும் உள்ள வரம்பு மீறிய உறவை துள்ளலாக சொல்லியிருக்கிறார், வாத்துக்காரியின் நிறத்தை வர்ணிக்கும் இடம் பட்டாசு. ஒரு நிகழ்வினை ஆழமான உள்வாங்குதல் இல்லையெனில் இம்மாதிரியான கதைகளை புனைவது வெகு சிரமம்.

அடுத்து, 'சிந்து பூந்துறை'யில் கணவனின் முன்னாள் காதலியைப் பற்றி தமது பிள்ளைகளுக்கு கூறிவிட்டு வெளியூருக்கு கிளம்பியதும் சுரீரென ஒரு திருப்பத்தைக் கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார் கா. பு. போகிற போக்கில் கதை நிகழும் இடங்களின் மனிதர்களின் வாழ்வியல் கூறுகளை எழுத்தில் மிக நுணுக்கமாக பதிவு செய்யவும் தவறவில்லை.

'இரயிலுக்கு நேரமாச்சி' கதையில் தமிழகத்தின் இண்டிடுக்கில் ஒரு தடகள வீராங்கனை படும் இன்னல்களையும், அவளை வார்த்தெடுக்க அருணாவின் தந்தை படும் அவமானங்களையும், அதன் வலிகளையும் மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். நிறைவான பதிவு.

அதே போல் 'தெம்மாங்கு பாட்டக் கேட்டு' கதையில் கொஞ்சம் கொஞ்சமாய் நவீனத்துக்கு மாறிக்கொண்டிருக்கும் நிகழ்வுதனை பதிவு செய்துகொண்டே ஊடாக ஒரு காதலை பதிவு செய்வதும் ஆசிரியரின் நுணுக்கமான எழுத்துக்கு சான்று. லதா - மணிகண்டன் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்வதா இல்லை கண்டனம் கூறுவதா என்பதை வாசகனிடமே விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார்.

'தோழியென்றோருத்தி" கதையில் வரும் சுஹா போன்ற தோழி நமக்கும் வாய்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது வாசித்து முடிக்கையில்.

இப்படியாக கவனம் ஈர்க்கும் கதைகள் நிறைய இத்தொகுப்பில் இருக்கிறது, சட்டென்று கவனம் ஈர்த்த கதைகளை மட்டும் இங்கு குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன்.

கார்த்திக் புகழேந்தியின் கதைகள் அனைத்தும் நாம் எளிய மனிதர்களின் வாழ்வியல் கூறுகள் தான், அவற்றை மிக நேர்த்தியாய் கதையாக்கியிருக்கிறார், அதற்கு பெரிய பூங்கொத்து.

சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இடறும் சிறு கல் போல, இவரின் பேச்சு வழக்கு எழுத்துக்கு இடையிடையே வரும் எழுத்து வழக்கு நடை. விறுவென விறுவென நகருகையில் வேகத்தடையை போட்டது போன்ற உணர்வைத் தருகிறது. வற்றா நதியோடு தொடர்பு படுத்தி பார்க்க கூடாது என்று நினைத்தாலும் தவிர்க்க முடியவில்லை. 'வற்றாநதி' நூலை வாசித்து முடிக்கையில் ஏற்படும் பூரிப்பில் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது இந்த 'ஆரஞ்சு முட்டாய்'.

தொடர்ந்து ஆக்கமுடன் இயங்கும் நண்பன் கார்த்திக் புகழேந்தியிடம், விரைவில் துள்ளலும், எள்ளலும் நிறைந்த ஒரு நாவலைத் தருமாறு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

நட்புடன்

அரசன்




  

3 comments:

  1. நிச்சயம் வாசிக்கணும். :-)

    ReplyDelete
  2. .//...............கவிதை என்ற சொல்லின் மீதிருந்த மரியாதையை, சம காலத்திய இளம்படைப்பாளிகள் கொத்துக்கறி போட்டு ......//

    //மொன்னையிலும் மொன்னையாக தொடர்ந்து எழுதி, ....///

    பொட் என உடைத்துவிட்டீர்கள்.
    தெருமுனை பிள்ளையார் கோவில் முன்
    தேங்காய சிதறுவது போல .

    தேங்காய் சிதறினாலும்
    தங்குவது சுவை.
    தேனினும் இனிய சொற்கள் உடையும்போதோ
    தாங்காது தலை.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. ஆரஞ்சு முட்டாய்... இந்த பெயர் எல்லோருக்கும் பிடித்த பெயராக மாறிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை !!! ... இதே பெயர் youtube சேனலிலெல்லாம் தடம்பதித்து உள்ளன.. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!