Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, May 5, 2016

முனியாண்டி விலாஸ் - யுகபாரதி


கவிதை என்ற சொல்லின் மீதிருந்த மரியாதையை, சம காலத்திய இளம்படைப்பாளிகள் கொத்துக்கறி போட்டு வைத்திருப்பதினால், கவிதை நூல்கள் வாங்குவதையும், கவிதைகள் வாசிப்பதையும் கூட வெகுவாய் குறைத்து விட்டேன், காரணம் சொல்ல நிறைய இருந்தாலும், பொதுவாக சொல்ல வேண்டுமெனில் சமூக வலைத்தளப் பெருக்கத்தினால் எல்லோரும் கவிதை எழுத கிளம்பியது தான். ஆரம்ப கால எழுத்துக்கள் சல்லையாக இருந்தாலும் போக போக தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு எழுதப் பழகாமல், மொன்னையிலும் மொன்னையாக தொடர்ந்து எழுதி, காசு வாங்கிக்கொண்டு அதையும் புத்தகமாக்கி தரும் சில அயோக்கிய பதிப்பகங்களும் செவ்வனே செய்து கொண்டிருப்பமையால் கவிதை என்றாலே கண்டுக்காத மாதிரி கழண்டு விடுவேன். இப்படியான குப்பைகளுக்கு மத்தியில் யுகபாரதியின் 'முனியாண்டி விலாஸ்' எனும் தரமான கவிதை நூல் வந்திருக்கிறது.



ஒரு கவிதை, வாசிப்பவனை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும், அவன் எண்ண ஓட்டங்களை செழுமை படுத்தி, சிந்தனைகளை சீர் செய்யத் தூண்ட வேண்டும், அப்படியான கவிதைகள் தான் காலம் கடந்தும் பெயர் சொல்லும். அப்படியான கவிதைகள் நிறைந்த புத்தகம் தான் இந்த 'முனியாண்டி விலாஸ்'. தனது கோபங்களை, சமூகம் பற்றிய பார்வைகளை, அரசியல் கோமாளித்தனங்களை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை, மக்களின் அறியாமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் யுகபாரதி.

இதுவரை தனது மென்மையான வரிகளினால் தமிழ் பாடல்களுக்கு பெருமை சேர்த்த யுகபாரதியின் கவிதைகள் கடுமையான காரமாக இருக்கிறது, அது தேவையாவும் இருக்கிறது என்பது காலத்தின் கட்டாயம்!

'மினி ஸ்கர்ட் நடிகை' எனும் கவிதையில் அவளின் அழகினை வர்ணித்து விட்டு இறுதியாக
"வேண்டுமானால் பாருங்கள்,
நாளை அவளுக்காக நீங்கள்
ஓட்டுப் போடுவீர்கள்" என தமிழக நிலைமையைக் கூறி செவிட்டில் அறைந்துச் செல்கிறார் கவிஞர்.

"வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்." என 'மனைவியிடம் சொன்னவை' என்ற கவிதையில் யாதார்த்த வறுமையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்.

"நம்முடைய தலைவருக்கு இது போதாத காலம்" என்ற கவிதையில் கருணாநிதியை கிழி கிழியென்று கிழித்து தொங்கப்  போட்டிருக்கிறார். இக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் கருணாநிதியின் மனசாட்சி போல் பேசி மிரள வைக்கிறது. இன்ன பிற கவிதைகளில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

"வேதாளத் தேவதை" எனும் கவிதையில் ஜெயலலிதாவின் சுய ரூபத்தை சமரசமில்லாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார். அவரின் முரட்டுக் குணத்தை செவ்வனே பதிவு செய்திருக்கிறார்.

தனது பாடல்களில் மெல்லினத்தைக் கையாளும் யுகபாரதி, கவிதைகளில் வல்லினத்தைக் கையாண்டிருக்கிறார். சாதாரணக் குடிகளின் வாழ்வியல் அவலங்களை உலகுக்கு உரக்க சொல்லும் கவிதைகளால் நூலை கட்டமைத்திருக்கிறார்.

'முனியாண்டி விலாஸ்' எனும் கவிதைக்காகவே இந்நூலை காசு கொடுத்து வாங்கலாம், அவ்வளவு நெகிழ்வான கவிதை.
"முனியாண்டிகளாய்த் தங்களை 
உணராதவர்கள் அக்கடைக்கு வருவதில்லை
முனியாண்டிகளை உணராதவர்களும்" 
இப்படி முடித்திருக்கும் இக்கவிதை பேசும் உண்மை வலியது. நாகரீக பெருக்கத்தினால் தனது அடையாளத்தை இழந்து வரும் நமது சமூகத்தை என்ன சொல்லி திருத்துவது, எல்லாத்தையும் இழந்த பின்பு சிறிய அனுதாபத்தில் கடந்து போகும் தலைமுறையிடம் என்ன சொல்லி கெஞ்சினாலும் செவியிலேறப் போவதில்லை.

இம்மாதிரியான கவிஞர்களின் பங்களிப்பு இன்றைய சூழலில் அவசியம் தேவை, இருந்தும் மக்கள் ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் சோரம் போகையில் விழலுக்கு இறைத்த நீராக போகையில் மனம் கவலை கொள்கிறது. மக்கள் சுயத்தை புரிந்து தவறை கலையட்டும், அதற்கு இக்கவிதைகள் சிறு தூண்டுகோலாக அமையட்டும்... வாழ்த்துகள் யுகபாரதி ...

========================================================================
பதிப்பு: 2014

மொத்தப் பக்கங்கள்: 176

வெளியீடு: நேர்நிரை

விலை: 160/-

தொடர்புக்கு : 98411 57958
27A, S1, கிருஷ்ணா நகர் அனெக்ஸ்
மதுரவாயில், சென்னை - 95.

========================================================================

வாசித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/

Tuesday, June 17, 2014

புறாக்கள் மறைந்த இரவு - பழநி பாரதி


பேஸ் புக்கின் மூலமாக அனைவரும் கவிஞர்களாக உருமாறி வரும் வேளையில் ஒரு நல்ல கவிதை நூலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். சிறந்த படைப்பாளியும், திரைப்பட பாடல் ஆசிரியருமான திரு. பழநி பாரதி அவர்களின் "புறாக்கள் மறைந்த இரவு" எனும் கவிதை தொகுப்பில் புதைந்திருக்கும் அழுத்தமான, ஆவேசமான சமூக கோபத்தை நூலை வாசிக்கையில் நீங்களும் உணரலாம்!



மாய கோவ்ஸ்கி அவர்களின் சிறந்த கருத்தோடு முதல் பக்கம் வரவேற்கிறது, 

"அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் 
அப்போது சாவுமங்கே அழிந்து போகும் 
மிச்சத்தைப் பின் சொல்வேன்"  என்று இரண்டாம் பக்கத்தில் முண்டாசு கவிஞன் நம்மை மிரட்டலுடன் வரவேற்கிறார்!

கீழ்த தட்டு மக்களின் நியாயமான கோபங்களில் தொடங்கி, சுனாமியின் நீ(ள)ல நாக்கையும், கோத்ரா படுகொலையையும், ஈராக் மக்களின் அவல வாழ்வையும் நடு மண்டையில் இறக்குகிறார் எழுத்தாணி கொண்டு. 

"உருகிய தார்ச்சாலையில் 
பதிந்து கிடக்கிறது 
தலைச் சுமையைத் 
தாங்க முடியாமல் நடந்த 
யாரோ ஒருத்தியின் 
பாதச் சுவடு"

இப்படி வெயிலை பற்றி எழுதியிருக்கும் எட்டுக் கவிதைகளும் நம்மை சுய பரிசோதனை செய்ய வைக்கும் வல்லமையை தாங்கி நிற்கிறது!

"வெளியிலிருந்து 
வந்த கிளியை 
வீட்டுக்குள் 
வளர்க்கத் தொடங்கினோம்

அது எங்கள் மொழியைப் 
பேசுவது 
இனியமையாக இருந்தாலும் 
வருத்தம் தான் 
தாய் மொழியை மறந்தது"


"குழந்தை இல்லாதவளின் 
இரவை 
மேலும் இருட்டாக்குகிறது 
நடுநிசிப் பூனைகளின் 
குழந்தைக் குரல்"

இப்படி சின்ன சின்ன கவிதைகள் சொல்லும் வலிகளும், வாழ்க்கையின் இரணங்களும் ஏராளமாக இருக்கிறது. புத்தகத்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக வாசித்து முடித்துவிடலாம். ஆனால் இப்புத்தகம் தரும் சுமையை இறக்கி வைப்பது என்பது கடினம் தான், அந்த அளவுக்கு அழுத்தமான கருத்துக்கள் நிரம்பிய இந்த "புறாக்கள் மறைந்த இரவை" வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி வாசித்து விடுங்கள்.

குமரன் பதிப்பகம் 
19, கண்ணதாசன் தெரு, தி. நகர் ,
சென்னை - 17. 
இரண்டாம் பதிப்பு : 2008 டிசம்பர் 

பக்கங்கள் - 72
விலை : ரூ. 50/-

படைப்பாக்கம்: அரசன் 
http://karaiseraaalai.blogspot.in/

  

Sunday, March 30, 2014

தேவதைகளின் மூதாய் - த. விஜயராஜ்



புத்தகம் வாங்குவது என்பதும் ஒரு கலை தான். ஒரு புத்தகத்துக்கு உயிர் கொடுப்பது முகப்பு பக்க வடிவைமப்பும், தலைப்பும் தான். வெறும் தலைப்பை வைத்தே புத்தகம் வாங்கும் ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். ஈர்ப்பான தலைப்பும், கவர்ச்சியான அட்டைப்படமும் கொண்டு ஒன்றுக்கும் உதவாத குப்பைகளும் புத்தகமாய் சமயங்களில் வெளிவருவதுமுண்டு. வழக்கமாக பெரிய படைப்பாளிகளின் படைப்புகளை தவிர்த்து வெளிச்சம் பெறாத எண்ணற்ற படைப்பாளிகளின் புத்தகங்களை தலைப்பை பார்ப்பேன், கவர்ந்திழுத்தால் வாங்கிடுவேன், அப்படி வாங்கிய ஒன்று தான் இந்த "தேவதைகளின் மூதாய்"

வண்ணத்துப் பூச்சி அழகு, அதோடு கவிதை சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்களின் இரசனைக்கே விட்டுவிடுகிறேன். அதன் சிறகுகளை போன்ற மென்மையான கவிதைகளை கொண்டது தான் இந்நூல்.

தேவதைகளின் மூதாய் யாராக? இருக்குமென்ற பெருத்த ஆவலில் இருந்த என்னை ஏமாற்றவில்லை இந்நூலின் ஆசிரியர் விஜயராஜ் . நல்ல படிப்பாளியால் தான் இப்படி ஒரு படைப்பை வழங்க முடியும் என்பது என் நம்பிக்கை. 

"கடவுளர்கள் ஒளித்துவைத்த இரகசியங்களை 
குழந்தைகள் திருடி 
ஊருக்குச் சொல்லினர் 
வண்ணத்துப் பூச்சிகள் பிறந்தன"  

வண்ணத்துப் பூச்சிகள் பிறந்ததாய் சொல்லும் கற்பனை கவர்ந்திழுக்கிறது  நம்மை அடுத்தடுத்த பக்கங்களுக்கு...

"மரங்களின் மேலே பறக்கிறாய் 
உன் நுகர் குழல்களில் 
வனங்களின் வேர்கள்"  

"சலுகைகள் அதிகம் தான் 
நீ கடவுளின் கள்ளக்காதலி"

"திருவிழா சுற்றி ஓய்ந்த ராட்டினம் 
நீ அமர்கிறாய் 
மீண்டும் திருவிழா"  

"வலிக்க வலிக்க 
மனம் தின்னும் கழுகும் நீ 
சில போது"

 இப்படி எண்ணற்ற குறுங் கவிதைகளாக நிரம்பி வழிகின்றன, குறுங்கவிதைகள் என்றாலும் கூர்மையான ஊசி முனைகள் போன்று மனதை தைக்கின்றன, அந்த அளவில் இது பேசப்படவேண்டிய தொகுப்பு தான்!

"கடவுள் 
கவிஞன் ஆனபோது 
பூக்கள் படைத்தான் 
பைத்தியமான போது 
வண்ணத்துப் பூச்சிகள் படைத்தான்"

இதுதான் இவரின் உச்சமாக கருதுகிறேன், இந்த நான்கு வரிகளில் எவ்வளவு விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார்.

"புறா இறகில் 
காது குடைகிற புளகிப்பை 
கண்களும் உணர்கின்றன 
நீ நெருங்கி பறக்கையில்"

இப்படி ஒரு வர்ணிப்பை கண்டு வண்ணம் கொள்கின்றன மனது. இப்படி வெறும் வண்ணத்துப் பூச்சிகளாகவே பிரசவித்து இருக்கும்  கவிஞரை பாராட்ட வண்ணத்துப் பூச்சியினையே தான் அழைக்கணும். 

இப்புத்தகத்தை வாசிக்க அரைமணி நேரங்கூட தேவையில்லை, ஆனால் உணர்ந்து இரசிக்க ஓராண்டு கூட போதாது என்பது என் எண்ணம். 

இப்படியொரு மூர்க்கமான காதலை வண்ணத்துப் பூச்சியிடம் வைத்திருப்பார் என்று நம்ப முடியாத அளவுக்கு சொற்களின் பிரயோகம். பார்க்கும் ஒவ்வொன்றையும் வண்ணத்துப் பூச்சியாகவே பார்த்திருப்பதாக தோன்றுகிறது வாசித்து முடிக்கையில். 

ஒரே கவிதை பல வடிவங்களில் இருப்பதாக தோன்றுகிறது. நூலின் அளவு அருமையாக இருந்தாலும், உள் பக்கங்களில் நிறைய இடங்கள் வெற்றிடங்களாக இருக்கின்றன. இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து பார்த்தால் தரமான புதுக்கவிதை நூல்.

நெடு நேரம் வாசித்துவிட்டு புத்தகத்தை மூடுகையில் வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் விரல்களில் ஒட்டியிருக்கிறதா? என்று பார்க்கும் அளவிற்கு மனதை நிறைக்கின்றன வண்ணத்துப் பூச்சிகளின் அழகிய கவிதைகள்! வண்ணத்துப் பூச்சியினை வாங்குங்கள் உங்களை திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன்.   



மொத்த பக்கங்கள் : 112                               வெளியீடு :2011 நவம்பரில்


பதிப்பகம  :                  அகரம்                             பேச :       04362-239289
                                        1, நிர்மலா நகர்,
                                        தஞ்சாவூர் - 613007

விலை :                       ரூபாய் 70/-


படித்து சொன்னது ...

அரசன்
karaiseraaalai.blogspot.in