Sunday, March 30, 2014

தேவதைகளின் மூதாய் - த. விஜயராஜ்புத்தகம் வாங்குவது என்பதும் ஒரு கலை தான். ஒரு புத்தகத்துக்கு உயிர் கொடுப்பது முகப்பு பக்க வடிவைமப்பும், தலைப்பும் தான். வெறும் தலைப்பை வைத்தே புத்தகம் வாங்கும் ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். ஈர்ப்பான தலைப்பும், கவர்ச்சியான அட்டைப்படமும் கொண்டு ஒன்றுக்கும் உதவாத குப்பைகளும் புத்தகமாய் சமயங்களில் வெளிவருவதுமுண்டு. வழக்கமாக பெரிய படைப்பாளிகளின் படைப்புகளை தவிர்த்து வெளிச்சம் பெறாத எண்ணற்ற படைப்பாளிகளின் புத்தகங்களை தலைப்பை பார்ப்பேன், கவர்ந்திழுத்தால் வாங்கிடுவேன், அப்படி வாங்கிய ஒன்று தான் இந்த "தேவதைகளின் மூதாய்"

வண்ணத்துப் பூச்சி அழகு, அதோடு கவிதை சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை உங்களின் இரசனைக்கே விட்டுவிடுகிறேன். அதன் சிறகுகளை போன்ற மென்மையான கவிதைகளை கொண்டது தான் இந்நூல்.

தேவதைகளின் மூதாய் யாராக? இருக்குமென்ற பெருத்த ஆவலில் இருந்த என்னை ஏமாற்றவில்லை இந்நூலின் ஆசிரியர் விஜயராஜ் . நல்ல படிப்பாளியால் தான் இப்படி ஒரு படைப்பை வழங்க முடியும் என்பது என் நம்பிக்கை. 

"கடவுளர்கள் ஒளித்துவைத்த இரகசியங்களை 
குழந்தைகள் திருடி 
ஊருக்குச் சொல்லினர் 
வண்ணத்துப் பூச்சிகள் பிறந்தன"  

வண்ணத்துப் பூச்சிகள் பிறந்ததாய் சொல்லும் கற்பனை கவர்ந்திழுக்கிறது  நம்மை அடுத்தடுத்த பக்கங்களுக்கு...

"மரங்களின் மேலே பறக்கிறாய் 
உன் நுகர் குழல்களில் 
வனங்களின் வேர்கள்"  

"சலுகைகள் அதிகம் தான் 
நீ கடவுளின் கள்ளக்காதலி"

"திருவிழா சுற்றி ஓய்ந்த ராட்டினம் 
நீ அமர்கிறாய் 
மீண்டும் திருவிழா"  

"வலிக்க வலிக்க 
மனம் தின்னும் கழுகும் நீ 
சில போது"

 இப்படி எண்ணற்ற குறுங் கவிதைகளாக நிரம்பி வழிகின்றன, குறுங்கவிதைகள் என்றாலும் கூர்மையான ஊசி முனைகள் போன்று மனதை தைக்கின்றன, அந்த அளவில் இது பேசப்படவேண்டிய தொகுப்பு தான்!

"கடவுள் 
கவிஞன் ஆனபோது 
பூக்கள் படைத்தான் 
பைத்தியமான போது 
வண்ணத்துப் பூச்சிகள் படைத்தான்"

இதுதான் இவரின் உச்சமாக கருதுகிறேன், இந்த நான்கு வரிகளில் எவ்வளவு விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார்.

"புறா இறகில் 
காது குடைகிற புளகிப்பை 
கண்களும் உணர்கின்றன 
நீ நெருங்கி பறக்கையில்"

இப்படி ஒரு வர்ணிப்பை கண்டு வண்ணம் கொள்கின்றன மனது. இப்படி வெறும் வண்ணத்துப் பூச்சிகளாகவே பிரசவித்து இருக்கும்  கவிஞரை பாராட்ட வண்ணத்துப் பூச்சியினையே தான் அழைக்கணும். 

இப்புத்தகத்தை வாசிக்க அரைமணி நேரங்கூட தேவையில்லை, ஆனால் உணர்ந்து இரசிக்க ஓராண்டு கூட போதாது என்பது என் எண்ணம். 

இப்படியொரு மூர்க்கமான காதலை வண்ணத்துப் பூச்சியிடம் வைத்திருப்பார் என்று நம்ப முடியாத அளவுக்கு சொற்களின் பிரயோகம். பார்க்கும் ஒவ்வொன்றையும் வண்ணத்துப் பூச்சியாகவே பார்த்திருப்பதாக தோன்றுகிறது வாசித்து முடிக்கையில். 

ஒரே கவிதை பல வடிவங்களில் இருப்பதாக தோன்றுகிறது. நூலின் அளவு அருமையாக இருந்தாலும், உள் பக்கங்களில் நிறைய இடங்கள் வெற்றிடங்களாக இருக்கின்றன. இப்படி சின்ன சின்ன குறைகளை தவிர்த்து பார்த்தால் தரமான புதுக்கவிதை நூல்.

நெடு நேரம் வாசித்துவிட்டு புத்தகத்தை மூடுகையில் வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்கள் விரல்களில் ஒட்டியிருக்கிறதா? என்று பார்க்கும் அளவிற்கு மனதை நிறைக்கின்றன வண்ணத்துப் பூச்சிகளின் அழகிய கவிதைகள்! வண்ணத்துப் பூச்சியினை வாங்குங்கள் உங்களை திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன்.   மொத்த பக்கங்கள் : 112                               வெளியீடு :2011 நவம்பரில்


பதிப்பகம  :                  அகரம்                             பேச :       04362-239289
                                        1, நிர்மலா நகர்,
                                        தஞ்சாவூர் - 613007

விலை :                       ரூபாய் 70/-


படித்து சொன்னது ...

அரசன்
karaiseraaalai.blogspot.in

9 comments:

 1. வாங்க நான் ரெடி.. எப்ப கொடுக்கறீங்க? ;-)

  ReplyDelete
  Replies
  1. கொடுக்க நான் ரெடி, எப்ப சென்னை வரீங்க ...

   Delete
 2. //திருவிழா சுற்றி ஓய்ந்த ராட்டினம்
  நீ அமர்கிறாய்
  மீண்டும் திருவிழா" //

  மிகவும் ரசித்தேன்..

  ReplyDelete
 3. எடுத்துச் சொல்லியிருக்கும் கவிதைகள் அனைத்துமே ரசனையின் உச்சம். அவசியம் படிச்சிடணும் அரசன். கவிதை நூல்கள் பெரும்பாலானவற்றில் வெறும் மூன்று அல்லது நான்கு வரி அச்சிட முழுப் பக்கத்தை வீணடிக்கின்றனர். (ஒரு படம்கூட போடாமல் சிலசமயம்) என்ன வேண்டுதலோ...?

  ReplyDelete
 4. கவிதைகள் அசத்துகிறது! நல்லதொரு விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. எடுத்துக் காட்டியிருக்கும் கவிதைகள் அருமை... முழுவதாய் படிக்க தூண்டுகிறது....

  ReplyDelete
 6. இனிய கவிதை எடுத்துக் காட்டுகளுடன் அழகிய நூல் விமர்சனம் தந்தீர்கள்!
  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  ReplyDelete
 7. இங்கே சொன்ன கவிதைகள் முழுப் புத்தகத்தையும் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன அரசன்.....

  நல்லதோர் புத்தகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 8. கவிதைகள் அசத்துகிறது! நல்லதோர் புத்தகம் என தோன்றுகிறது ... நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!