Showing posts with label ஜோதிடம் புரியாத புதிர். Show all posts
Showing posts with label ஜோதிடம் புரியாத புதிர். Show all posts
Thursday, February 20, 2014
நடிகர் ராஜேஷ் - பலவற்றைக் கற்றுத் தெளிந்தவர். நிறைகுடம் நீர் தளும்பாது என்பதற்கான உதாரணம் இவர். பகுத்தறிவாளரான இவர் ஜோதிடத்தைப் பகுத்துப் பார்த்ததில் ஜோதிடம் மெய் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். பின்னர் எதற்காக "ஜோதிடம் புரியாத புதிர்" என்று தலைப்பு வைக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலோ அச்சவுணர்வின் அடிப்படையிலோ ஜோதிடத்தை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை, தானாகக் களமிறங்கி மரத்தடி ஜோதிடர் முதல் மாளிகையில் இருக்கும் ஜோதிடர் வரை அனைவரிடமும் ஆய்வு செய்து ஜோதிடத்தை உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ராணி வார இதழில் வெளியான தொடரின் தொகுப்பை 336 பக்க நூலாக்கி இருநூறு ரூபாய்க்கு நமக்குத் தந்தவர்கள் கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை.
நூலுக்கு வாழ்த்துரை எழுதிய தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் கொஞ்சமாகவும் கவிஞர் பிறைசூடன் அவர்கள் மிகுதியாகவும் சிலாகித்திருக்கிறார்கள். அது அவர்கள் ஆசிரியரின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கூட இருக்கலாம்.
"நம் நாட்டில் பலர் வெளியே இப்படிப் பகுத்தறிவு வேஷம் போட்டுக்கொண்டு திரைமறைவில் ஜோதிடம் பார்த்து பரிகாரம், பூஜை, யாகம் என்றெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப் போலியான பகுத்தறிவு முகமூடியை அணிவதற்கு விருப்பமில்லை. என் பகுத்தறிவுக்கு ஜோதிடம் உண்மையென்று விளங்குகிறது. எனவே அதன் சார்பாக நான் பேசுகிறேன்" என்ற வரிகளில் ஆசிரியர் தான் தேர்ந்த பகுத்தறிவாளர் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறார். மேலும் அவர் பல புத்தகங்களைப் படித்தவர் என்பதை உணர்த்துவதற்கு சர்ச்சில், ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்றவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டுகிறார்.
முதலாவது கட்டுரையில் நட்சத்திரக் குறியிட்டு ஆசிரியர் கேட்டுள்ள கேள்விகள் உண்மையிலேயே நம்மையும் ஆழ்ந்து யோசிக்கவைக்கின்றன. உதாரணத்துக்கு
* ஒருவேளை இறைவன் நம்மைவிட கோடிக்கணக்கான சக்திகளைப் படைத்துள்ளாரா? அந்த சக்தியும் இந்த பிரபஞ்ச சக்திக்குள் அடக்கம் தானா?
* ஹிட்லர் கொலை செய்தது ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர்கள். இவ்வளவு போரையும் கொலை செய்த ஹிட்லருக்கு தண்டனை அவர் செய்துகொண்ட தற்கொலை மட்டும்தானா?
நாடி ஜோதிடம் ஜப்பானில் எப்படி பிரபலம் ஆனது என்பதற்கு சரியான காரணங்களை அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து நமக்கு சொல்கிறார் ஆசிரியர். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த தியாக குறிஞ்சி செல்வன் என்பவர் தலைநகர் டோக்கியோவில் நாடி ஜோதிட நிலையம் ஒன்றை ஆரம்பித்துவைத்திருக்கிறார் என்ற தகவலையும் தருகிறார்.
வெங்கட்ராம ஐயர் என்னும் ஜோதிடர் நூலாசிரியரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு 1990ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று முப்பதுக்குள் அவரது வீட்டில் தீ விபத்து நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே பெரிய அளவில் தீ விபத்தும் நடக்க உடனடியாக தீயை அணைத்திருக்கிறார்கள். இதுபற்றி ஜோதிடரிடம் ஆசிரியர் கேட்டபோது அந்த நேரத்தில் சனி வக்கிரமாகிறது, பெரிய பிரச்சனை ஒன்றைக் கொடுக்கும் என்றிருக்கிறார். ஆசிரியரும் அடுத்த நாளே பிர்லா கொலரங்கத்துக்குச் சென்று சனி கிரகம் வக்கிரமாவதைக் கண்டு வியந்திருக்கிறார்.
நண்பன் கொலை பற்றிய கட்டுரையில் நடந்ததை ஆசிரியர் விவரிக்கும் விதத்தில் நமக்கு முதுகுத்தண்டு ஜிலீர் என்கிறது. வடபழஞ்சி சாமியார் பற்றிய கட்டுரையிலும் நடிகர் சிவகுமார் அவர்களது தந்தை பற்றிய கட்டுரையிலும் நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லும் அதே நேரத்தில் பல இடங்களில் வளவளவென்று வார்த்தைகளை இழுத்து நம்மைக் கொட்டாவி விடவைக்கிறார்.
நல்லவேளையாக இது தொடர்கதை இல்லை, இருந்திருந்தால் தொய்வான சில கட்டுரைகளையும் படித்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்போம். சில கட்டுரைகளை அதன் தலைப்புகளே சுமாராகவே இருக்கும் என்று உணர்த்துகின்றன. சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் ஒரு கோர்வை இல்லை. 1983-ஆம் ஆண்டு நடந்த அனுபவங்களை சொல்கிறார். அடுத்த கட்டுரையில் தனது பால்ய காலத்தில் நடந்த நிகழ்வுகளை சொல்கிறார். அடுத்த கட்டுரையில் தான் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். நாடி ஜோதிடத்தைப் பற்றி சொல்லும்போது அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வரிசையாக வருவதுபோல் கொண்டுவந்திருக்கலாம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.
எழுதப்பட்ட கட்டுரைகள் பலவற்றில் நூலாசிரியரின் சொந்த அனுபவங்களே நிறைந்திருக்கின்றன. அவரது தாத்தா, மாமா, தாய், தந்தை, மகன், மகள் மற்றும் உறவினர்கள், திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள் பலரது வாழ்வில் ஜோதிடம் குறுக்கிட்டதை நேரில் கண்ட சாட்சியாக நமக்கு விவரிக்கிறார். ஊமை ஜோதிடன், குட்டி ஜோதிடன், சிங்கப்பல் குழந்தை, புகைப்பட ஆரூடம், வெற்றிலை ஜோதிடம் முதல் ஒரு ஜோதிடரிடம் தன்னுடையது என்று தனது நண்பரது ஜாதகத்தைக் காட்டி பல்பு வாங்கிய இடங்கள் என்று அனைத்து கட்டுரைகளும் அனுபவங்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன.
ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கோ ஜோதிடம் பற்றித் தெரிந்துகொள்வதற்கோ ஓரிரு விஷயங்கள் தவிர இந்த நூலில் எதுவும் இல்லை. தனது வாழ்வில் ஜோதிடத்துடனான உறவுமுறை எப்படித் தோன்றியது, தான் எப்படியெல்லாம் ஆய்வு செய்திருக்கிறார், என்னென்ன மாதிரியான ஜோதிடர்கள் இருக்கிறார்கள் என்று பல கட்டுரைகளில் சுவாரஸ்யமாகவும் சில கட்டுரைகளில் தொய்வாகவும் எழுதியிருக்கிறார். ஒரு பகுத்தறிவாளருக்கு எப்படி ஜாதகம், ஜோதிடம், ஆரூடம் போன்றவற்றில் நம்பிக்கை வந்தது என அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் படிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)
