Showing posts with label தங்கர் பச்சான். Show all posts
Showing posts with label தங்கர் பச்சான். Show all posts

Thursday, February 27, 2014

குடி முந்திரி - தங்கர் பச்சான்


பொதுவாக திறமை இருப்பவர்கள்  பொது வெளியில் அதிகம் பேச மாட்டார்கள், அப்படி பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நழுவுகின்ற திறமைசாலிகளுக்கு மத்தியில், நேர் எதிர் குணம் கொண்டவர் தான் இந்நூலின் ஆசிரியர் திரு. தங்கர் பச்சான். அதிகம் பேச மாட்டார், மீறி பேசினால் "அதிகம் பேசப்படுவார்!"

பன்முகம் கொண்ட திறமைசாலி, திரைத்துறையில் இவரைப்பற்றிய பிம்பங்கள் எப்படி இருந்தாலும், தமிழ் எழுத்துலகில் இவருக்கென தனி இடம் இருக்கிறது! உணர்வுகளை மையப் படுத்தியே படைப்புகளை உருவாக்குவார்!


கற்பனைக் கலவைகளை தவிர்த்து, வாழ்வியலை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் மிகுந்தவர். வாசித்து முடிக்கையில் நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும் இவரின் எழுத்துக்கள்! அதற்கு சான்று இந்த குடி முந்திரி எனும் சிறுகதை தொகுப்பு.                                            


1) குடி முந்திரி 

2) பெரு வழியில் 
ஒரு கூத்து மேடை 

3) வளர்க தமிழ்!

4) பசு 

5) வக்கிரம் 

6) சக மானுடங்களும், 
தரச் சான்றிதழ் 
கிட்டாத அறவாழி 
என்கிற ஒரு 
தமிழ் எழுத்தாளனும்!







மேற் சொன்ன தலைப்புகளில் ஆறு சிறுகதைகள் உள்ளடங்கி இருக்கின்றன, ஒவ்வொன்றும் தனி இரகம்! வாழ்ந்த வாழ்வியலை, பழகிய மக்களின் பழக்க முறைகளை, மக்களின் மொழியிலே கொடுத்திருப்பது தான் இந்நூலின் கூடுதல் அழகு! இதில் சிறப்பு என்னவெனில் கதையின் மையக்கருவோடு, கதை நடைபெறும் சூழலையும் போகிறப் போக்கில்  பொட்டில் அறைந்த மாதிரி சொல்லியிருப்பதும் தான்!  

முதல் கதையான "குடி முந்திரியில்" படிப்பறிவு இல்லா தன் வம்சத்தில் தன் மகன் வாங்கப் போகும் பட்டத்திற்காக/ மகனின் ஆசைக்காக, குல சொத்தான குடி முந்திரியை விற்பதை எத்தனை நுணுக்கமுடன் பதிவு செய்திருக்கிறார் என்பதை அந்த சூழலில் வளர்ந்தவன் என்கிற முறையில் நன்கு உணர முடிந்தது, படித்துப் பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள்!

அடுத்து "பசு" எனும் தலைப்பில், மனித உணர்வுகளை, எண்ணங்களை மிக அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார்! ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்த ஒருவனின் தவிப்பை,  மன ஓட்டங்களை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கும் இந்த தொகுப்பில் உள்ள அனைத்தும், நினைவில் பதியும் தன்மை கொண்ட அழகிய படைப்புகள்! ஒரு பானைக்கு இந்த இரண்டு பருக்கைகளே போதுமென்று நம்புகிறேன்! வாய்ப்பு கிட்டும்போது வாங்கி வாசித்துப் பாருங்கள், கொடுக்கும் காசுக்கு மனம் நிறைவடையலாம்!
வெளியீடு :



செம்புலம் 
50, 5வது தெரு, அச்சுதன் நகர்,
ஈக்காட்டுதாங்கல், சென்னை - 97.
மின் அஞ்சல் : sempulam @ yahoo.com   




வெளிவந்த ஆண்டு : 2003, விலை : 75