Showing posts with label வா.மணிகண்டன். Show all posts
Showing posts with label வா.மணிகண்டன். Show all posts

Wednesday, March 12, 2014

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

வா.மணிகண்டன். துள்ளலான அதே சமயம் எளிமையான எழுத்துநடைக்கு சொந்தக்காரர். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தான் அவரது பதிவுகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். கருத்திட்டதில்லை. காரணம் அனைவரும் அறிந்ததே. இந்த வருட புத்தகத் திருவிழாவின்போது இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே மாலை - டிஸ்கவரி புக்பேலஸ் - ஸ்டாலுக்கு வெளியே தன்னந்தனியாக நின்றிருந்த அவரை நானும் சீனுவும் அறிமுகப்படுத்திக் கொண்டோம். "நான் சரவணன், ஸ்கூல் பையன் என்ற பெயரில் எழுதுறேன்" என்று சொல்லவும், "ஓ, தெரியுமே" என்றார். கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "எப்படி?" என்றேன். "பாலகணேஷ் சொல்லியிருக்கார், நீங்க என்னோட பதிவுகளை நிறைய பேருக்கு ஷேர் பண்ணுவீங்களாம்" என்றார். சீனு அவரிடம், "எப்படி தினம் ஒரு பதிவு எழுத முடிகிறது?" என்று கேட்க, "தினமும் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பைக்கில் போகிறேன். ஏதாவது content கிடைக்கும். பயணத்தினூடே மனதில் வார்த்தை வடிவம் கொடுத்துவிடுகிறேன். வீட்டுக்கு வந்ததும் எழுதிவிடுகிறேன்" என்றார்.



இது புத்தக விமர்சனம் என்பதால் ஆசிரியரைப் பற்றிய வளவளாக்களை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இனி புத்தகம் பற்றி:

லிண்ட்சே லோஹன் என்பவர் யாரென்று தெரியாமல் தான் இருந்தேன். இந்தப் புத்தகம் பற்றிய பதிவுகளைப் படித்ததும் யாரென்று தெரிந்துகொள்ள கூகிளிடம் கேட்டேன். அவர் நடிகையாம். அப்படியென்றால் மாரியப்பனுக்கு எப்படி மனைவியாக முடியும் என்று பல நாள் கேள்விகளுடன் இருந்த எனக்கு விடை தந்தது இப்புத்தகத்தின் கடைசிக்கதை. இந்தப் புத்தகத்திலேயே என் மனம் கவர்ந்த கதையும் இதுவே.

முதல் கதையான "சாவதும் ஒரு கலை"யிலேயே ஆசிரியரின் துள்ளலான நடை தெரிந்துவிடுகிறது. ஏனோ கதையின் முடிவைப் படித்ததும் - ஹெல்மெட் போடாமல் போகும் ஜான் எனும் சிறுவன் போகும் வழியில் விபத்தில் இறந்து, அதே சமயம் வீட்டிலிருப்பவர்கள் ஆவிகளுடன் பேச முயலும்போது முதல் ஆவியாகத் தோன்றி தன பெயர் ஜான் என்றும் தனக்கு ஹெல்மெட் வேண்டுமென்றும் சொல்லும் - எப்போதோ படித்த கதை ஞாபகத்துக்கு வந்தது.

"சரோஜா தேவி" என்ற கதை கொஞ்சம் சுமாராகவே தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் கதை முடிவில் மனதைத் தைக்கிறது. சரோஜா தேவி என்பவள் ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் நாட்டில் சில பெண்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்ற உண்மை வேதனைப்பட வைக்கிறது.

"காமத்துளி" கதையின் கடைசி பத்தியில் சஸ்பென்ஸ் உடைகிறது. "நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது" - கொஞ்சம் அனுபவங்களும் கலந்து எழுதியிருப்பார் போல. ஆரம்பத்தில் கொஞ்சம் புன்முறுவல் பூக்க வைக்கும் கதை கடைசியில் அழவைக்கிறது. இந்த இடத்தில் ஆசிரியரிடம் ஒரு கேள்வி: கதையை விவரிக்கும் மனிதர் புத்தகம் படிக்க இருளடைந்த கோவிலுக்குத்தான் போவாரா? அதிலும் நாடு ராத்திரியில் - வீட்டில்தான் அனைவரும் உறங்கிவிடுகிறார்களே! வீட்டிலேயே படிக்கலாமே!

பெரும்பாலான கதைகள் அசுபமாகவே முடிகின்றன. Tragedy. ஒரு மணி நேரத்திலோ ஒன்றரை மணி நேரத்திலோ படித்துவிட்டு புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்றால் முடியாது. சில கதைகளின் முடிவுகள் நெஞ்சைப் பிசைகின்றன. ஜீரணித்துக்கொண்டு அடுத்த கதையைப் படிக்க ஆயத்தமாவதற்கே அரை மணி நேரம் ஆகிறது. அவ்வளவு மோசமான Tragedy. மேலும் மிகப்பெரிய மைனஸ் - எந்தக்கதையிலும் மருந்துக்குக்கூட நகைச்சுவை இல்லை. "எனக்கு பிரம்மச்சாரி ராசி", :மழையில் முளைத்த காமம்" மற்றும் "காசுக்கு வாங்கிய காதல்" போன்ற கதைகளை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கலாம். ஆசிரியரின் எழுத்துநடையே அப்படித்தான் என்கிறபோது வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

எனக்குப் பிடித்த கதைகள்: 

சாவதும் ஒரு கலை
போலி'ஸ் என்கவுண்டர்
சில்க் ஸ்மிதா
எனக்கு பிரம்மச்சாரி ராசி
அசைவுறாக் காலம்
ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்
லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

மற்ற கதைகள் பிடிக்காது என்பதில்லை. ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப மாறுபடலாம். "சூனியக்காரனின் முதலிரவு", "நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்", "பறவளவு" போன்ற கதைகளில் ஏனோ மனம் லயிக்கவில்லை.

மொத்தத்தில் நீங்கள் புத்தகம் படித்தீர்கள் என்பதைவிட வா.மணிகண்டன் எனும் நபர் உங்கள் முன்னால் அமர்ந்து கதை சொன்னார் என்று சொல்லலாம். எழுத்துக்களால் நம்மைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்த ஆசிரியருக்கு ஒரு சபாஷ். நிச்சயம் படிக்கத் தகுந்த புத்தகம்.