Wednesday, March 12, 2014

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

வா.மணிகண்டன். துள்ளலான அதே சமயம் எளிமையான எழுத்துநடைக்கு சொந்தக்காரர். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தான் அவரது பதிவுகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். கருத்திட்டதில்லை. காரணம் அனைவரும் அறிந்ததே. இந்த வருட புத்தகத் திருவிழாவின்போது இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அன்றே மாலை - டிஸ்கவரி புக்பேலஸ் - ஸ்டாலுக்கு வெளியே தன்னந்தனியாக நின்றிருந்த அவரை நானும் சீனுவும் அறிமுகப்படுத்திக் கொண்டோம். "நான் சரவணன், ஸ்கூல் பையன் என்ற பெயரில் எழுதுறேன்" என்று சொல்லவும், "ஓ, தெரியுமே" என்றார். கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "எப்படி?" என்றேன். "பாலகணேஷ் சொல்லியிருக்கார், நீங்க என்னோட பதிவுகளை நிறைய பேருக்கு ஷேர் பண்ணுவீங்களாம்" என்றார். சீனு அவரிடம், "எப்படி தினம் ஒரு பதிவு எழுத முடிகிறது?" என்று கேட்க, "தினமும் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பைக்கில் போகிறேன். ஏதாவது content கிடைக்கும். பயணத்தினூடே மனதில் வார்த்தை வடிவம் கொடுத்துவிடுகிறேன். வீட்டுக்கு வந்ததும் எழுதிவிடுகிறேன்" என்றார்.இது புத்தக விமர்சனம் என்பதால் ஆசிரியரைப் பற்றிய வளவளாக்களை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இனி புத்தகம் பற்றி:

லிண்ட்சே லோஹன் என்பவர் யாரென்று தெரியாமல் தான் இருந்தேன். இந்தப் புத்தகம் பற்றிய பதிவுகளைப் படித்ததும் யாரென்று தெரிந்துகொள்ள கூகிளிடம் கேட்டேன். அவர் நடிகையாம். அப்படியென்றால் மாரியப்பனுக்கு எப்படி மனைவியாக முடியும் என்று பல நாள் கேள்விகளுடன் இருந்த எனக்கு விடை தந்தது இப்புத்தகத்தின் கடைசிக்கதை. இந்தப் புத்தகத்திலேயே என் மனம் கவர்ந்த கதையும் இதுவே.

முதல் கதையான "சாவதும் ஒரு கலை"யிலேயே ஆசிரியரின் துள்ளலான நடை தெரிந்துவிடுகிறது. ஏனோ கதையின் முடிவைப் படித்ததும் - ஹெல்மெட் போடாமல் போகும் ஜான் எனும் சிறுவன் போகும் வழியில் விபத்தில் இறந்து, அதே சமயம் வீட்டிலிருப்பவர்கள் ஆவிகளுடன் பேச முயலும்போது முதல் ஆவியாகத் தோன்றி தன பெயர் ஜான் என்றும் தனக்கு ஹெல்மெட் வேண்டுமென்றும் சொல்லும் - எப்போதோ படித்த கதை ஞாபகத்துக்கு வந்தது.

"சரோஜா தேவி" என்ற கதை கொஞ்சம் சுமாராகவே தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் கதை முடிவில் மனதைத் தைக்கிறது. சரோஜா தேவி என்பவள் ஒரு கதாபாத்திரம்தான் என்றாலும் நாட்டில் சில பெண்கள் இப்படியும் இருக்கிறார்கள் என்ற உண்மை வேதனைப்பட வைக்கிறது.

"காமத்துளி" கதையின் கடைசி பத்தியில் சஸ்பென்ஸ் உடைகிறது. "நந்தினியின் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது" - கொஞ்சம் அனுபவங்களும் கலந்து எழுதியிருப்பார் போல. ஆரம்பத்தில் கொஞ்சம் புன்முறுவல் பூக்க வைக்கும் கதை கடைசியில் அழவைக்கிறது. இந்த இடத்தில் ஆசிரியரிடம் ஒரு கேள்வி: கதையை விவரிக்கும் மனிதர் புத்தகம் படிக்க இருளடைந்த கோவிலுக்குத்தான் போவாரா? அதிலும் நாடு ராத்திரியில் - வீட்டில்தான் அனைவரும் உறங்கிவிடுகிறார்களே! வீட்டிலேயே படிக்கலாமே!

பெரும்பாலான கதைகள் அசுபமாகவே முடிகின்றன. Tragedy. ஒரு மணி நேரத்திலோ ஒன்றரை மணி நேரத்திலோ படித்துவிட்டு புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்றால் முடியாது. சில கதைகளின் முடிவுகள் நெஞ்சைப் பிசைகின்றன. ஜீரணித்துக்கொண்டு அடுத்த கதையைப் படிக்க ஆயத்தமாவதற்கே அரை மணி நேரம் ஆகிறது. அவ்வளவு மோசமான Tragedy. மேலும் மிகப்பெரிய மைனஸ் - எந்தக்கதையிலும் மருந்துக்குக்கூட நகைச்சுவை இல்லை. "எனக்கு பிரம்மச்சாரி ராசி", :மழையில் முளைத்த காமம்" மற்றும் "காசுக்கு வாங்கிய காதல்" போன்ற கதைகளை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கலாம். ஆசிரியரின் எழுத்துநடையே அப்படித்தான் என்கிறபோது வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

எனக்குப் பிடித்த கதைகள்: 

சாவதும் ஒரு கலை
போலி'ஸ் என்கவுண்டர்
சில்க் ஸ்மிதா
எனக்கு பிரம்மச்சாரி ராசி
அசைவுறாக் காலம்
ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்
லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

மற்ற கதைகள் பிடிக்காது என்பதில்லை. ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப மாறுபடலாம். "சூனியக்காரனின் முதலிரவு", "நடுப்பாளையம் ஜமீனின் சேட்டைகள்", "பறவளவு" போன்ற கதைகளில் ஏனோ மனம் லயிக்கவில்லை.

மொத்தத்தில் நீங்கள் புத்தகம் படித்தீர்கள் என்பதைவிட வா.மணிகண்டன் எனும் நபர் உங்கள் முன்னால் அமர்ந்து கதை சொன்னார் என்று சொல்லலாம். எழுத்துக்களால் நம்மைக் கட்டிப்போடும் வித்தை தெரிந்த ஆசிரியருக்கு ஒரு சபாஷ். நிச்சயம் படிக்கத் தகுந்த புத்தகம்.

17 comments:

 1. வா.ம.வின் எழுத்துக்கள் இந்தப் புத்தகத்தை வடிவமைத்ததன் மூலமே அறிமுகம் எனக்கு. அவரும்தான்... ஆனாலும் பல கதைகளின் கருப்பொருளும் அவர் கையாண்டிருந்த விதமும் மிகப் பிடித்திருந்தது எனக்கு. சரியான விமர்சனம் ஸ்.பை.

  நம்ம தளத்தில் எந்தப் புத்தகம் பற்றிய அறிமுகம் வந்தாலும் கூடவே தகவலும் வந்தால் நலம். புத்தகம் 104 பக்கங்கள்., விலை ரூ.90, வெளியிட்டது யாவரும் டாட் காம். yaavarum1@gmail.com டிஸ்கவரி புக் பேலஸ் விற்பனை உரிமை பெற்றுள்ளது போன்ற தகவல்கள்.

  ReplyDelete
 2. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. yes...!

  வாத்தியாரின் தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 3. புத்தக கண்காட்ச்சியின் போது முகநூலில் அடிக்கடி தென்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று... இப்படி நிறைய பேர் பேசும் அளவுக்கு என்னதான் இருக்கிறது இதில்?... வாங்கி படிக்க வேண்டும் என்று யோசிக்க வைத்தது... என்ன இருக்கிறது என்பதை இப்பொழுது நீங்கள் சொல்லிவிட்டீர்கள்....

  ReplyDelete
 4. நானும் சீனுவும் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.///

  அருகே ஆவி இருந்ததை மறந்துட்டீங்களா? எங்க ஊர்க்காரர்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேனே.. ஞாபகம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா நீங்களும் இருந்தீங்க.. ஓ நீங்களும் நம்மூருதானுங்களா ன்னு நீங்க அறிமுகமாகிட்டத நான் பார்த்தேன்.. :-)

   Delete
 5. //லிண்ட்சே லோஹன் என்பவர் யாரென்று தெரியாமல் தான் இருந்தேன். // நிஜமாவா..அது தெரியாமலே இவ்வளவு காலம் ஒட்டிட்டீங்களா? ;-)

  ReplyDelete
 6. //முதல் ஆவியாகத் தோன்றி தன பெயர் ஜான் என்று//

  'ஆவி' கதையா, அப்ப நல்லாத்தான் இருக்கும் ;-)

  ReplyDelete
 7. //"சரோஜா தேவி" என்ற கதை கொஞ்சம் சுமாராகவே தொடங்குகிறது. //

  சமீபத்தில் இந்தப் பெயருக்கு ஒரு புது விளக்கம் கேள்விப்பட்டேன்.. இது அதுவா இருக்காதுன்னு நம்பறேன்..

  ReplyDelete
 8. //அதிலும் நாடு ராத்திரியில்//

  நாடு உறங்கும் ராத்திரியா, இல்லை நடுராத்திரியா? ;-)

  ReplyDelete
 9. // ஜீரணித்துக்கொண்டு அடுத்த கதையைப் படிக்க //

  GELUSIL ஒண்ணு போட்டிருக்கலாமே? ;-)

  ReplyDelete
 10. //நிச்சயம் படிக்கத் தகுந்த புத்தகம்.//

  சரி, புக்க எப்ப அனுப்பறீங்க?

  ReplyDelete
 11. நேர்மையான நடுநிலையான விமர்சனம் ஸ்பை.. ஆவி வெளியீட்டிற்கு வரும் போது புத்தகத்தை தொலைத்துவிட்டேன்.. தொலைத்துவிட்டேனா இல்லை யாரிடமும் கொடுத்ததை மறந்துவிட்டேனா தெரியவில்லை.. முதல் மூன்று கதை மட்டும் படித்தேன்.. நிசப்தம் தொடர்ந்து படித்து வருவதால் ஆசிரியர் எழுத்துநடை வெகு பரிட்சியம்... நீங்கள் கூறியது போல் அவரே நம்முடன் அமர்ந்து கதை கூறியது போல் இருக்கும்..

  பிரபா ஏற்கனவே ஒருமுறை குறிப்பிட்டிருந்த்தார், அவருடைய எழுத்துக்கள் ஒரே பாணியில் அமைந்திருப்பதாக, நானும் உணர்ந்துள்ளேன்.. அதை மட்டும் அவர் மாற்றினால் சிறப்பாக இருக்கும்...  ReplyDelete
 12. நான் இவரின் படைப்புகள் படித்ததில்லை. ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள் ஸ்பை.

  ReplyDelete
 13. வா.மணிகண்டனின் எழுத்துக்களை விகடனில் படித்து இருக்கிறேன்! சில மாதங்களாக அவரது வலைப்பக்கத்தை வாசித்து வருகிறேன்! இந்த புத்தகம் வாசிக்க வில்லை! அருமையான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம் ஸ்.பை..... இவரது படைப்புகளை படித்ததில்லை. படிக்கிறேன்.

  ReplyDelete
 15. லிண்ட்சே லொஹன் நடிகையா ? இது தெரியாம போச்சே ...!

  மணிகண்டனை நானும் சந்தையில் பார்த்தேன் தனியாத்தான் நின்னுட்டு இருந்தார் நமக்கு நிசப்தம் எப்பவாது படித்தாலும் பெரிய அறிமுகமில்லை அதனால் ஒதுங்கி கொண்டேன்!

  ஸ்கூல் பையன் முதுகலை பட்டம் வாங்கிய மாதிரி உணர்வை தருகிறது எழுத்து ... அந்த அளவுக்கு முதிர்ச்சி ,.....

  ReplyDelete
 16. மின்னல் கதைகள் தொகுப்பு பற்றிய விமர்சனம் அருமை ! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!