Thursday, October 30, 2014
படைப்பாக்கம் : சீனு
பல கூறுகளாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில், சமூகம் உங்களை எந்த அடுக்கில் வைத்து அழகு பார்க்கிறது என்பதைப் பொறுத்தே ஒரு புத்தகம் உங்களினுள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஏற்படுத்தாமல் போவதற்குமான சாத்தியங்களைக் கொண்டுள்ளன. நீங்கள் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றால் ஒரு மத்திய குடும்ப சூழலை, நீங்கள் தினசரி அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நாவல் உங்களினுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியில்லை அதற்கான அவசியமும் இல்லை. இதுவே இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு உலகத்தை அதில் நடமாடும் மக்களைப் பற்றிய வாழ்வியலை அந்த எழுத்தாளர் அறிமுகப்படுத்துகிறார் என்றால் அதனால் ஏற்படும் தாக்கம் வேறுவிதமாய் இருக்கும். கிட்டத்தட்ட இந்த சகுந்தலா வந்தாள் கூட அப்படியான ஒரு நாவல் தான்.
கல்பனா என்னும் சிறுமி தன் இரண்டாவது அப்பாவால் சீரழிக்கப்பட அவளை விபச்சார விடுதியில் கொண்டு சேர்க்கிறாள் ஏற்கனவே பாலியல் தொழிலாளியாக இருக்கும் அவள் அம்மா. பருவம் அடைந்த சில நாட்களிலேயே விபச்சார விடுதில் சேர்க்கப்படும் கல்பனா, அங்கே தன் நாட்கள் எப்படி நகருகிறது, என்ன மாதிரியான மனிதர்களைச் சந்திக்கிறாள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதில் இருந்து வளர்கிறது கதை. கதையில் மொத்தமும் நான்கே நான்கு மையக் கதாப்பாத்திரங்கள்தான். கல்பனா, ஜானி, சகுந்தலா பின் கமலக்கண்ணன். இதில் கிட்டத்தட்ட கதாநாயக அந்தஸ்து கொண்ட நபர் திருவாளார் கமலக்கண்ணன்.
கல்பனா பாலியல் தொழிலாளியாவதற்கு முன்பே அவளுக்கு ஜானி என்றொரு காதலன் இருந்துள்ளான், தன்னை ஒருதலையாய்க் காதலித்தவன்தான் என்றபோதிலும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தான் வசிக்கக்கூடிய விபச்சார விடுதியில் வைத்தே ஜானியை சந்தித்து விடுகிறாள் கல்பனா. தான் உருகி உருகி காதலித்த பெண், பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்பதை ஏற்றுகொள்ள முடியாமல் தவிக்கிறான் ஜானி. அவளுக்காக காத்திருந்த நாட்களையும் காதலித்த நாட்களையும் அவளிடம் கூறி தன்னோடு வந்து மணமுடித்துக் கொள்ளும்படி கேட்கிறான். இவளோ தான் ஒரு பாலியல் தொழிலாளியாகவே மாறிவிட்டதாகவும் தனக்கு குடும்பம் நடத்தத் தெரியாது என்றும் கூறுகிறாள். அதாவது இத்தனை நாட்களில் அவள் இருக்கும் நான்கு சுவற்றைத் தாண்டி என்ன இருக்கிறது என்பதையே அவள் அறிந்திருக்கவில்லை. அல்லது அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை. கல்பனாவின் பார்வையில் அவள் கூறுவது மிகச்சரியே, இருந்தும் அதனை ஜானியால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
இந்தக் காதல் தோல்வியில் இருந்து மீள ஜானுக்கு உடனே வேறொரு பெண் தேவையை இருக்கிறாள். இந்நேரத்தில் தற்செயலாக ஜெராக்ஸ் கடையில் பார்க்கும் ஒரு பெண்ணின் மீது மையல் கொள்கிறான். அந்தப் பெண்தான் சகுந்தலா. இவர்களுக்கு இடையேயான காதல் என்பது இதுநாள் வரை நா(ம்)ன் அறிந்திராத கொச்சை மொழியில் எழுதப்பட்ட காதல். ஜான் எடுத்த உடனேயே அவளிடம் கொச்சை மொழியில் பேசத்தொடங்குகிறான், மெல்ல சகுந்தலாவும் அதை விரும்பத் தொடங்குகிறாள். மொபைல் போன் மூலம் மெல்ல வளருகிறது இவர்கள் காதல். ஒரு கட்டத்தில் தனது பிறந்தநாள் பரிசாக தன்னையே ஜானுக்கு அளிக்கிறாள் சகுந்தலா.. ஜானிக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காதலையும் ஊடலையும் காமத்தையும் கொங்கு மொழியில் ரசிக்கும்படி எழுதியுள்ளார் வாமுகோமு.
இனி கமலக்கண்ணன். இவர் தன்னுடைய புலம்பல்களின் ஊடாகவே நம்மிடம் அறிமுகமாகிறார். முதலில் அவர் என்ன பேசுகிறார் ஏன் இப்படி பிணாத்துகிறார் என்பது புரியாவிட்டாலும் மெல்ல ஒவ்வொரு முடிச்சாக அவிழ அவிழ அனைத்தும் புரியத் தொடங்குகிறது. தற்சமயம் கமலக்கண்ணன் ஒரு நல்ல முதலாளியிடம் நல்லா விசுவாசியாக இருந்து வேலையை இழந்தவர். மனைவி தன்னுடன் சண்டையிட்டு இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு அப்பன் வீட்டுக்குப் போய்விட்ட மன வருத்தத்தில் இருப்பவர். போதாக்குறைக்கு சகுந்தலா என்னும் தன்னுடைய அத்தைப் பெண்ணின் மூலம் வந்த தேவையில்லாத பிரச்சனைகள்.
அல்லது சகுந்தலா எப்போது கமலக்கண்ணனின் வாழ்க்கைக்குள் குறுக்கிட்டாளோ அப்போதிருந்தே பிரச்சனைக்குள் தள்ளப்படுகிறான் கமலக்கண்ணன். சகுந்தாலவிற்கு ஒரு கறுப்புப் பக்கம் இருக்கிறது, அதில் இருந்து அவளை மீட்பதற்காக உதவி செய்கிறார் கமலக்கண்ணன், சகுந்தலாவிற்கு உதவக் கூடாது என்று அவன் மனைவியும் அம்மாவும் எவ்வளவோ மறுத்தும் கூட கேட்காமல் சகுந்தலா என்னும் அந்த குழிக்குள் போய் விழுகிறான் கமலக்கண்ணன். இங்கே கமலக்கண்ணனுக்கும் அவன் மனைவிக்கும், கமலக்கண்ணனுக்கும் சகுந்தலாவிற்கும் இடையே நடக்கும் காட்சி நகர்வுகளை அற்புதமாக நகர்த்தியிருப்பார் வாமுகோமு. கமலக்கண்ணனின் மனைவி கணவனை தன்னுள் வைத்து ஆள நினைக்கும் ஒரு பெண், சாதாரணமாகத் திட்டுவது என்றாள் கூட பச்சை பச்சையாகத்தான் திட்டுகிறாள்.
ஆனால் சகுந்தலாவோ சரியான காரியக்காரி. தன்னுடைய அந்த நிமிட உல்லாசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவள். கற்பிலிருந்து கருவறை வரை அனைத்தையும் விற்கத் துணிந்தவள். இவர்கள் இடையேயும் மாட்டிக் கொண்டு கமலக்கண்ணன் புலம்புவதைப் பார்க்க நமக்கே பாவமாய் இருக்கும். சில சமயம் சகுந்தலா மீது கோபம் வருவதற்குப் பதிலாக கமலக்கண்ணன் மீது கோவம் வருகிறது. தன் இயலாமையால் தன்னைத்தானே நொந்து கொள்பவனை யாருக்குத்தான் பிடிக்கும். ஆனால் இது ஒன்றும் எதார்த்தத்தை மீறிய நிகழ்வு இல்லையே. நிகழ்வாழ்வில் உங்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உங்களில் ஒருவராகவோ கூட அந்தக் கமலக்கண்ணன் உலவக்கூடும். மொத்தத்தில் 'சகுந்தலா வந்தாள்' வாழ்வில் ஏதோ ஒர் இடத்தில் நாம் சந்திக்கக் கூடிய நான்கு மனிதர்களின் மிக அருகில் சென்று அவர்களுக்குள் இருக்கும் அந்தரங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி இன்னார் இப்படித்தான் இருப்பார்கள் என்பதோடு முடிகிறது.
வாமுகோமு எழுதியவற்றில் நான் படிக்கும் முதல் நாவல் இதுதான். கொங்கு மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் சில இடங்களில் சில வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை, சிலவற்றை வாக்கியத்தின் கட்டமைப்பின் மூலம் இதுவாக இருக்குமோ என்று அவதானிக்க வேண்டியிருக்கிறது. மேலும் கமலக்கண்ணன் புலம்பும் மிக சில இடங்களைத் தவிர்த்து நாவல் மொத்தத்தையும் அலுப்பு தட்டாமல் நகர்த்தியிருக்கிறார் வாமுகோமு.
சிறிய எச்சரிக்கை. ஒருவேளை நீங்கள் பாலியல் சம்மந்தமான வார்த்தைகளைக் கொண்ட ஒரு புத்தகம் படிப்பதை உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் விரும்பாது போனாலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாரேனும் படிப்பதை நீங்கள் விரும்பாது போனாலோ அதற்கான முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் சகுந்தலாவை வரவழைக்கவும், ஏனெனில் இவளும் இவளோடு பழகுபவர்களும் கொஞ்சம் மோசமானவர்கள்.
பாலியல் சார்ந்த வார்த்தைகள் சம்பவங்கள் அனைத்தும் அப்படிக்கு அப்படியே எழுதப்பட்டுள்ளதால் உங்களில் எத்தனை பேருக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை வாசிக்கத் தொடங்கினீர்கள் என்றால் புத்தகம் முழுவதையும் முழுமூச்சில் வாசித்து முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம், காரணத்தை விளக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறன். வேண்டுமானால் இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம்.
ஒன்று முழுக்க முழுக்க காமரசம் சொட்டும் ஓரளவிற்கு ஆபாச வார்த்தைகள் குறைந்த சில பாலியல் சம்பவங்கள் அடங்கிய புத்தகம். இரண்டாவது உளவியல் ரீதியாக பாதிகப்பட்ட ஒருவன் அல்லது எதையுமே எதிர்த்துக் கேட்கத் துணிவில்லாத நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளகூடிய ஒருவனின் மன ஓட்டங்களின் உளவியல் சார்ந்த புத்தகமாகவும் இதனைக் கொள்ளலாம். இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாக உருவெடுத்திருப்பது தான் சகுந்தலா வந்தாள். இதில் எந்தப் பகுதியை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளபோகிறீர்கள் என்பது உங்களுக்கு விடப்பட்ட சவால். ஆனால் கதை முடியும் போது நிச்சயமாய் இரண்டின் தாக்கமும் உங்களிடம் இருக்கும் என்பதே சகுந்தலா வந்தாளின் வெற்றி. மணவாழ்க்கையில் நுழைந்தவர்கள் நுழைய இருப்பவர்கள் என்று இரு தரப்பினரும் படிக்க வேண்டிய புத்தகம்.
ஆசிரிய பற்றி:
வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். திருப்பூரைச் சேர்ந்தவர், பெரும்பாலும் தான் கையாளும் படைப்புகளில் கொங்கு மொழியைப் பிராதனமாகக் கொண்டு எழுதி வருகிறார். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.
ஆசிரிய பற்றி:
வா.மு.கோமு தன்னுடைய வித்தியாசமான, துணிச்சலான சிறுகதை மற்றும் கவிதை முயற்சிகளுக்காகப் பெரிதும் கவனம் பெற்று வருபவர். திருப்பூரைச் சேர்ந்தவர், பெரும்பாலும் தான் கையாளும் படைப்புகளில் கொங்கு மொழியைப் பிராதனமாகக் கொண்டு எழுதி வருகிறார். கலாச்சாரரீதியான மனத் தடைகளை, மொழியின் குதூகலமும் அங்கதமும் கொண்ட இவரது மொழி வெகு இயல்பாகத் தாண்டிச் சென்றுவிடுகிறது. எதார்த்த உலகின் அழுத்தமான காட்சிப்படுத்தல்கள் சட்டென அதீதப் புனைவுகளுக்குள் கரைந்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.
*****
நடுகல் வெளியீடு புத்தகங்கள்
1.வாமுகோமுவின் வழக்கமான நடையில் இல்லாமல் வித்தியாசமான முறையில் உள்ள வயது வந்தோருக்கான நாவல் - சகுந்தலா வந்தாள் - வாமு கோமு - ரூ 150
2.தஞ்சை ஓவியத்தின் மறுபக்கத்தை சொல்கின்ற தமிழின் முக்கியமான நாவல், கள்ளம்-தஞ்சை ப்ரகாஷ் -ரூ210
3.கொங்கு வட்டார கிராம மக்களின் வாழ்வியல் கலந்த பலரின் பாராட்டுகளைப் பெற்ற நாவல் குருத்தோலை-செல்லமுத்து குப்புசாமி - ரூ150
4.சாதாரண மொழியில் புனையப்பட்ட சிறு குறிப்புகள் அடங்கிய சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற அழகான தொகுப்பு அப்புச்சி வழி - வாமு கோமு(நினைவோடைக் குறிப்புகள்
மூன்று நாவல்கள் மற்றும் ஒரு நினைவோடைக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் மொத்தம் 610ரூபாய் வருகின்றது நான்கும் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் ஒன்று, இரண்டு, வாங்குபவர்களுக்கு 30 ரூபாய் மட்டும் கூரியர் செலவு சேர்த்து அனுப்ப வேண்டும் தேவைப் படுபவர்கள் வீடு சுரேஷ் குமார் அவர்களைத் தொடர்பு கொள்ளவும். அழைக்க : 98439 41916
பணம் அனுப்ப வேண்டிய விவரம்
Sureshkumar.K
A/NO :622302010009565,
IFSE CODE : UBIN0562238,
PN ROAD BRANGE,
TIRUPUR-2.
BANK : UNION BANK OF INDIA
Monday, October 20, 2014
'சொல் ஆளுமை' என்பதை
நண்பர்கள் பேசுகையில் சில நேரம் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்த சமயங்களில்
உணர்ந்ததுண்டு. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டே இருக்க மாட்டார்களா என்ற எண்ணிய
தருணங்கள் அவை. நேரில் பாவனைகளுடன் நம்மை ஈர்ப்பது கடினமான பணியென்றால்
சிறுகதைகளின் வாயிலாய் நம்மை கட்டிப்போட்டு இடம், காலம் இவற்றையெல்லாம் மறந்து
நம்மை கதைகளினூடே பயணிக்க செய்யும் எஸ்.ரா வின் ஆளுமையை இந்த சிறுகதை தொகுப்பின் முதல்
கதையான "காந்தியோடு பேசுவேன்" எனும் கதையிலிருந்தே உணர முடிந்தது.
பால்ய வயதிலேயே ஒரு
'முரட்டு' கணவனுடன் திருமணமான ஒரு பெண், பெரும்பாலும் தனிமையிலியே காலத்தை கடத்தும்
நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு சூழ்நிலையில் கைக்குழந்தையை கூட விட்டுவிட்டு காந்திஜியை
காணக் கிளம்பிவிடுகிறாள். அவளுடைய உணர்வை புரிந்து கொள்ள முயற்சிக்கும் அவள்
பிள்ளை கதை சொல்வதாக பின்னப்பட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான பதிவு இது.
காந்தியைப் பின்புலமாக கொண்ட கதைகள் எல்லாவற்றிலும் இது தனித்தே நிற்கிறது.
'கடக்க முடியாத
பாலம்' என்னும் சிறுகதை சாதி, மதத்தின் பெயரால் வன்முறை விளைவிப்போரை சாடும் கதை.
கதை சொல்ல எடுத்தாண்ட சொற்கள் ஒவ்வொன்றும்
காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது. ஒரு கட்டத்தில் படிப்பதை மறந்து நாம்
பாத்திரமாகவே மாறி வன்முறையாளர்களின் வெறிச்செயலுக்கு பலியாவது நாம்தான் என்ற
மாயபிம்பத்தை தோற்றுவிப்பதே எழுத்தாளரின் தேர்ந்த எழுத்துக்கு சாட்சி. இந்த
தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை 'பாதியில் முடிந்த படம்' . நிருபமா
என்ற பெண்ணை திரைப்பட விழா ஒன்றில் சந்திக்கும்
ஒரு பத்திரிக்கையாளன், அவளுடன் நட்பாகி பின் அவளிடம் தன் மனதை தவணை முறையில்
கொடுத்துவிட்டு தவிக்கும் தவிப்பை கதையின் கடைசி வாக்கியங்கள் அழகாய்
எடுத்தியம்பும்,
எழுத்தாளர் 'லியோ டால்ஸ்டாய்' அவர்களின்
வாழ்க்கை சம்பவம் ஒன்றை சுவைபட சொல்லியிருக்கும் கதை 'அஸ்தபோவில் இருவர்'. முதுமையில்
தன் காதல் மனைவி சோபியாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு புறப்படும் டால்ஸ்டாய் அதற்கான
காரணங்களையும், பின் குடியானவன் ஒருவனின் பேச்சில் தன் தவறை உணர்ந்த போதும் தான்
இறக்கும் வரை தன் மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலே போகுமிடத்தில் மனம்
கொஞ்சம் நெகிழ்ந்துதான் போகிறது.
'அருவிக்கு
தெரியும்', 'பிடாரனின் மகள்', 'ஷெர்லி அப்படித்தான்' 'இடைப்பட்ட நாட்கள்' ஆகிய கதைகள்
ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. 'நிகழ்காலத்தின் சுவர்கள்' என்ன நடக்கப்போகிறதோ என்ற
பதைபதைப்பை மூன்று பக்கங்கள் முடியும் வரை நீட்டிச் செல்கிறது. 'பசித்தவன்' என்ற
கதையில் திடியனின் வாழ்கையோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் ஆசிரியர். 'ஒற்றை
முள்' எனும் கதையில் கண்டிப்பான தந்தையை வெறுக்கும் தனயன் கடைசியில் தன் தந்தையின்
நேசத்தை உணரும் கதையில் அந்த உடைந்த இசைத்தட்டுக்கு பின்னால் இருக்கும் இரகசியத்தை
படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள நினைக்கும்படி சுவாரஸ்யமாய்
சொல்லியிருப்பது அருமை.
எஸ்.ரா அவர்களின் சிறுகதைகள் பல
வாசித்திருக்கிறேன் என்ற போதும் அவருடைய நாவல்கள் இதுவரை வாசித்ததே இல்லை. இந்த
'காந்தியோடு பேசுவேன்' என்ற தொகுப்பை படித்தவுடன் உடனே அவருடைய நாவல் ஏதாவது ஒன்றை
படித்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. வாசகர்கூட நண்பர்களிடம் என்ன
இருக்கிறது என்று பார்த்து உடனே ஆரம்பிக்க வேண்டும்.
நூலின் பெயர் : காந்தியோடு பேசுவேன்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பக்கங்கள் : 152
விலை : ரூ. 120
பதிப்பாளர் : உயிர்மை பதிப்பகம்,
11/29,சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 600 018
தொலைபேசி - 044-24993448
Wednesday, October 8, 2014
படைப்பாக்கம் : சீனு
கதை
காலச் சக்கரத்தின் சுழற்ச்சியில் எங்கோ ஒரு மூலையில் எப்படியோ பாதிக்கபட்ட சிலர் அதற்குப் பழிவாங்குவதற்காக தங்கள் வேட்டையைத் தொடங்கினால் அதில் அவர்களின் சுழற்சியும் காலச் சக்கரத்தின் சுழற்சியும் எவ்வாறு இருக்கும் என்பதை நமக்கு அறிமுகம் செய்வதே இந்த காலச் சக்கரத்தின் கதை.
நான்கு வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறுவதாக நகர்கிறது இக்கதை.
அழகிய காஷ்மீரகத்தின் ஒரு பகுதியான ரஸ்கம் என்ற பகுதியை எதிரிகள் கைப்பற்ற முயல, அதனால் அங்கு வசிக்கும் பண்டிதர்கள் அனைவரும் தங்கள் சொத்து சுகங்களை இழந்து இந்தியப் பகுதிக்குள் அகதிகளாக நுழைகிறார்கள். இவர்களில் ஷ்ரத்தா என்ற சிறுமி மட்டும் தன் தந்தையின் ஆலோசனையின் படி ஸ்ரீசக்கரம் என்ற சக்கரத்தைத் தேடி புறப்படுகிறாள். நிகும்பலை என்ற காளி இலங்கையின் காவல் தெய்வம், அவள் அங்கு இருக்கும் வரை யாராலும் ராவணனை வெல்ல முடியாது. ஆகவே விபீடணன் நிகும்பலையை ஹனுமனின் உதவியுடன் தமிழகத்தில் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்கிறான். இயல்பாகவே நிகும்பலை மிகவும் மூர்க்கமான காளி என்பதால் அவளின் கோபத்தை மக்களால் தாங்க முடியவில்லை. அதனால் ஆதிசங்கரர் காஸ்மீரின் ரஸ்கத்தில் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு தமிழகம் வருகிறார். அந்த ஸ்ரீசக்கரத்தின் உதவியுடன் நிகும்பலையை அடக்கி யாருமறியா பாதுகாப்பான இடத்திலும் வைக்கிறார். அந்த ஸ்ரீசக்கரம் காஷ்மீரகத்தில் இருந்து வெளியில் சென்றதனால் தான் காஷ்மீருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படுகிறது, பிரச்சனை மேல் பிரச்சனை வருகிறது என நம்பி அந்த ஸ்ரீசக்கரத்தை மீண்டும் காஷ்மீருக்கே கொண்டு வருவது என்ற சபதத்துடன் ரஸ்கத்தில் இருந்து கிளம்புகிறாள் ஷ்ரத்தா.
டெல்லியில் வசித்துவரும் மிக முக்கியமான மகாராணியின் குடும்பம் வசுந்தராவின் உடையது. அவளுக்கு இரண்டு மகன்கள். சமீப காலமாக ஒரு பயங்கரமான வடிவம் கொண்ட ஒரு பெண் அவளை கொல்லப் போவதாக மிரட்டுகிறாள். இதனால் குழப்பமும் பயமும் அடையும் வசுந்தரா தன் குடும்ப நண்பர்களான ஒரு தீட்சிதரையும் சுவாமிஜியையும் நாடுகிறாள். மேலும் வசுந்த்ராவிற்கு உதவுவதற்காக ஒரு தாந்த்ரீகரும் கேரளத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார். அவரது தலைமையில் பிரசன்னம் பார்க்கபடுகிறது. அதில் கிடைக்கும் சில புதிரான பதில்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையைத் தருகிறதே தவிர இன்னதென்று தெளிவாக கூறமறுக்கிறது. மேலும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க வேண்டுமாயின் அவருக்கு ஸ்ரீசக்கரம் தேவைப்படும் என்றும் கூறுகிறது எப்படியேனும் ஸ்ரீசக்கரத்தைக் கண்டுபிடித்து அந்த மர்மப் பெண்ணை கண்டுபிடிப்பதாக சபதம் செய்கிறார் தாந்த்ரீகர். ஆனால் அதிலிருந்து சில தினங்களில் யானை மிதித்து மரணம் அடைகிறார் தாந்த்ரீகர்.
கும்பகோணத்தின் அருகில் இருக்கும் கும்பை என்ற கிராமத்தில் ஆஸ்டானமான பிராமணக் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. பட்டப்பாவிற்கு மூன்று மகள் ஒரு மகன் மற்றும் இறந்து போன தன் தம்பியின் மகனான சங்குவையும் வளர்த்து வருகிறான். சங்கு முறையாக சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றவன் என்ற போதிலும் அவனுடைய நாட்டமெல்லாம் தாந்த்ரீகத்திலும் பில்லி சூனியம் கற்பதிலுமே இருக்கிறது. இந்நிலையில் லாடன் என்ற இளைஞன் சங்குவுக்கு தாந்த்ரீகம் கற்றுத் தருகிறான். அதைக் கொண்டு கும்பேஷ்வரரின் அருளைப் பெறுகிறான் சங்கு. மேலும் அந்த கிராமத்தில் தன்னுடைய பெரியப்பாவால் பில்லி சூனியத்திற்கு ஆட்பட்ட ஒரு பெரியவரை அதிலிருந்து விடுவிக்கிறான். அவர் மூலம் அதுநாள் வரை தான் அறியப்படாத தகவல்களை எல்லாம் அறிந்து கொள்கிறான்.
சங்குவின் அப்பா வாரணாசி சென்றபோது ஸ்ரத்தா என்ற பெண்ணை சந்தித்ததாகவும், ஸ்ரீசக்கரத்தைக் கண்டுபிடிக்க தனக்கு உதவும்படி கேட்டதாகவும், பின் இருவரும் காதலில் விழுந்து பலத்த எதிர்ப்புக்குப் பின் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறுகிறார். சங்கு பத்து மாத சிறுவனாக இருந்த போது சங்குவும் அவனது அப்பா அம்மாவும் டெல்லி செல்கிறார்கள். அங்கு ஷ்ரத்தா தொலைந்து போக, அதனால் பித்துப்பிடித்த சங்குவின் அப்பா அவனை அவனது பெரியப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார். ஆனால் தொலைந்து போன அவன் அம்மா மட்டும் திரும்ப வரவேயில்லை. அதற்குப் பின் உலகை ஆளும் தாந்த்ரீகன் ஆக ஆசைப்படுகிறான். அப்படி ஆக வேண்டுமானால் அதற்கு அந்த ஸ்ரீசக்கரம் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவன் அதனைத் தேடத் துவங்குகிறான்.
இதற்கிடையில் ஜாங்கிரி சுற்றி பிழைப்பு நடத்தும் ஜாங்கிரி ஜம்பு என்பவரின் குடும்பத்தை அவர்கள் தற்கொலை செய்து கொள்வதில் இருந்து காப்பாற்றுகிறாள் ஒரு மர்மப்பெண், பின்னர் அவளே அந்தக் குடும்பத்தை வழிநடத்துவும் தொடங்குகிறாள். அந்தப் பெண் வேறு யாரும் இல்லை, ஷ்ரத்தாதான். பின்னர் சில காலங்களில் ஷ்ரத்தா தன் மகனான சங்குவையும் கண்டுபிடித்து அவர்கள் இருவருமாக ஸ்ரீசக்கரத்தைத் தேடத் துவங்குகிறார்கள். இதில் அவர்கள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கிறார்கள். இறந்து போனவனின் உதரத்தில் இருந்து பிறந்த ஒருவனாலேயே அந்த ஸ்ரீசக்கரத்தை அடைய முடியும் என்று கண்டுபிடித்து, தங்கள் காய்களை அதன்பொருட்டு நகரத்துகிறார்கள்.
இந்நிலையில் மகாராணி வசுந்தராவின் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவராக மரணிக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த மர்மப் பெண் தான் என்று அஞ்சுகிறாள் வசுந்தரா. பின் வசுந்தரா என்ன ஆனாள். எதற்காக அவளுடைய குடும்பம் பழிவாங்கப்படுகிறது. இறந்து போனவனின் உதிரத்தில் இருந்து குழந்தை பிறந்ததா, அந்த ஸ்ரீசக்கரம் கிடைத்ததா என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கூறியபடி நிறைவடைகிறது காலச்சக்கரம்.
விமர்சனம்
படிப்பவர் யாராயினும் அவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிய நடையில் எழுதப்பட்ட நாவல். மேலும் பல்வேறு தளங்களிலும் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்தாலும் என கதை எந்த வருடத்தில் நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை குழப்பம் ஏற்பட்டாலும் அத்தியாங்களின் தலைப்பைப் பார்த்தால் அந்தக் குழப்பங்களைப் போக்கிக் கொள்ளலாம். காரணம் ஒவ்வொரு அத்தியாயங்களும் அவை நடக்கும் வருடங்களுடன் தான் தொடங்குகிறது. அதனால் இந்த நாவலில் இடம்பெறும் வருடங்கள் அவ்வளவு முக்கியமானவை. இருந்தும் வருடங்களைக் குறிப்பதில் ஒரேஒரு இடத்தில் மட்டும் பிழை ஏற்பட்டுள்ளது. பதினான்காவது அத்தியாயத்தில் 1974 என்று இருக்கவேண்டிய வருடம் 1984 என்று இருக்கிறது.
இந்த நாவல் முழுக்க முழுக்க பில்லி சூனியம் ஏவல் மாந்த்ரீகம் தாந்த்ரீகம் யோகம் என்று வருவதால் உங்களிடம் இருக்கும் பகுத்தறிவு வாதங்களைக் கழற்றி ஒரு ஓரமாக வைத்திவிட்டு இந்த நாவலைத் தொடவும், இல்லையென்றால் உங்களுக்கும் நாவலுக்கும் இடையே ஏதோ ஒரு பெரிய இடைவெளி இருந்து இருந்து கொண்டே இருக்கும். நாவலின் முதல் சில அத்தியாயங்கள் கதையை நமக்கு அறிமுகம் செய்வதற்காக நகர்வதால் அவற்றைப் படிக்க மிகபெரிய பொறுமை வேண்டும், அதற்குப் பின் நாவல் நல்ல வேகம் எடுத்து தன்போக்கில் பறக்கத் தொடங்குகிறது. இது இலக்கிய வாசகர்களுக்கான நாவல் அல்ல. அனைத்து தரப்பிலும் இருக்கும் வாசகர்களுக்கானது. பில்லி சூனியம் ஏவலில் நம்பிக்கை இருந்தாலோ அல்லது அதை சார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ தவறாது படிக்கலாம்.
ஆசிரியர் குறிப்பு
எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மூத்த பத்திரிக்கையாளர் டி.ஏ.நரசிம்மன். தற்போது தி இந்து ஆங்கில தினசரியில் தமிழ்நாட்டு பிரிவின் செய்தி ஆசிரியராகவும், சீனியர் அசிஸ்டென்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை திரைப்பட இயக்குனர் சித்ராலயா கோபு. தாய் நாவலாசிரியை திருமதி கமலா சடகோபன்.
ஆசிரியர் : நரசிம்மமா
புத்தகம் : காலச்சக்கரம்
விலை : 120
பதிப்பகம் : வானதி
Tuesday, September 30, 2014
Posted by
arasan
at
4:11 AM
Labels:
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்,
ஜி. நாகராஜன்
6
comments
சில மாதங்களுக்கு முன் நண்பர்கள் குழாமுடன், டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்க , எஸ். ரா. அவர்கள் நடத்திய ஒரு நாள் இலக்கிய முகாமில் தான் ஜி. நா வை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எஸ். ரா சொன்ன துக்க விசாரணை சிறுகதை பற்றியே அன்றைய நாள் முழுவதும் என் சிந்தனைகள் சுழலத் தொடங்கின என்று சொன்னால் மிகையல்ல! சில வாரங்கள் கழித்து ஒரு மதிய வேளையில், காலச்சுவட்டின் நவீன தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசையான இந்த "டெர்லின் ஷர்ட்டை" வாங்கி வந்தேன்!
பதினேழு குறுங்கதைகளால் நிரம்பிய இப்புத்தகத்தில் அறிந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் பொதிந்துள்ளன. போகிற போக்கில் காட்சிகளை அறிமுகப்படுத்திச் செல்லும் வல்லமை கண்டு வியக்கும் அதே வேளையில் குறுங்கதைகளாக இருந்தாலும் ஒன்றை கூட முன்கூட்டியே யூகித்து விட முடியாத அளவிற்கு கதையும் அதன் திருப்பங்களும், முடிவும் இருப்பது ஆசிரியரின் எழுத்தாளுமையை பறைசாற்றுகிறது!
பெரும்பாலான கதைகள் பாலியலை மையமாய் வைத்தே துவங்கி முடிகிறது, இருந்தும் அதிலிருக்கும் விரசமற்ற எழுத்து நடை வாசிப்பவர்களை நிச்சயம் முகம் சுழிக்க வைக்காது. பாலியலையும், அதைச் சார்ந்த எளிய மனிதர்களையும் மட்டுமே மையப் படுத்துகிறது இவரின் படைப்பு. அவர்களின் உணர்வுகளை நீங்களும் உணரலாம்!
"தீராக்குறை"யில் மரணப் படுக்கையிலிருக்கும் குடும்பத் தலைவனைப் பற்றிய சிந்தனைகளும், அந்த வீட்டின் சூழல்களையும் மிக கவனமாக பதிவு செய்திருப்பார். சூழலை விவரித்திருக்கும் முறைக்காகவே இரண்டு முறை வாசிக்கத் தோன்றும்!
"நான் புரிந்த நற்செயல்கள்" இந்தக் கதையில் எவ்வித சாயப்பூச்சுமின்றி உள்ளதை உள்ளபடி போட்டு உடைத்திருப்பார். அந்த துணிச்சல் வசிகரீக்க கூடியவை. எதிர்பாராத திருப்பம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்!
"பூர்வாசிரம"த்தில் வரும் ஒரு பெண்ணைப் பற்றிய வர்ணிப்பில் மனம் இலயித்து கிடக்கும். பாலியல் தொழில் புரியும் அம்மா, மகளை சுற்றி சுழலும் கதையில் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தேவையற்ற பீடிகைகளை தவிர்த்து நறுக்கென்று சொல்லியிருப்பார் ஆசிரியர் ஜி. நா.
"துக்கவிசாரணை" இதுக்காகவே இந்த நூலை வாங்கிய என்னை துளியும் ஏமாற்றவில்லை. இந்த சிந்தனைக்கே ஆசிரியருக்கு பெரிய வணக்கம் வைக்க வேண்டும், என்ன நாம் வாழும் காலத்தில் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம்.
இறந்து போன பாலியல் தொழிலாளி வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்வதைப் பற்றி சொல்வது தான் துக்க விசாரணை என்னும் கதை.
பலமும் - பலவீனமும்.
ஜி. நாகராஜனின் பலமென்று நான் வாசித்து உணர்ந்தது என்னவெனில்
1) எளிதில் கதையின் முடிவை யூகிக்க முடியாது.
2) எளிய மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் உணர்வுகளோடு அப்படியே பதிவு செய்திருப்பது.
3) எழுதுவது பாலியல், எந்த இடத்திலும் விரசமில்லை.
4) இலக்கியத் திணிப்பில்லாமல் சாதரணமாக வந்து விழும் வார்த்தைகள்.
பலவீனம்:
1) சில இடங்களில் மறுமுறை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
2) ஒரு கதைக்குள் பல கிளைக்கதைகளால் பிண்ணியிருப்பது.
3) புதிதாய் வாசிக்க துவங்கியிருக்கும் வாசகர்களை எளிதில் சலிப்படைய செய்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.
பதிப்பகம் : காலச்சுவடு
தொகுப்பாளர்: திரு. சுரேஷ்குமார் இந்திரஜித்.
மொத்த பக்கங்கள்: 152, விலை : 120/-
படித்துச் சொன்னது
அரசன்
Wednesday, August 13, 2014
Posted by
aavee
at
10:22 AM
Labels:
oru coffee kudikkalaama,
PKP,
ஒரு காபி குடிக்கலாமா,
பட்டுக்கோட்டை பிரபாகர்
18
comments
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு
என் வாசிப்பு ஆர்வத்துக்கு ஆரம்ப
காலத்தில் வித்திட்டவர்களில் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும்
தமிழ்வாணன் ஆகியோர் முக்கியமானவர்கள். அதிலும் முதலிரண்டு பேர்களின் நாவல்கள்
வெளியாகும் தினம் எல்லாம் எனக்கு தீபாவளி தான். இருவர் எழுத்திலும் இருக்கும் ஒவ்வொரு
தனித்தன்மை எனக்கு பிடிக்கும். விவேக்-ரூபலாவை பிடித்த அளவுக்கு பரத்-சுசீலாவையும்
பிடிக்கும். (கூடவே பட்டுக்கோட்டையாரின் நாவல்களில் இடம்பெறும் பெண்களின் டீ-ஷர்ட்
வாசகங்கள் பிடிக்கும்..) பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நாவல்கள் மட்டுமே இதுவரை
படித்திருக்கிறேன். 'வாத்தியார்' பாலகணேஷ் அவர்கள் ஒருமுறை 'பட்டுக்கோட்டை'
பிரபாகர் அவர்களிடம் அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டார்.
அவரிடம் என் 'ஆவிப்பாவை' கொடுத்து ஆசிகள் பெற்றுக்கொண்ட போது முதல் முறை
வந்தததற்கு ஞாபகார்த்தமாய் அவர் எழுதிய இந்த சிறுகதை தொகுப்பை கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று சிறுகதைகளும் ஒரு குறுநாவலும்
இடம்பெற்றிருக்கிறது. இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கையில் மனதிற்குள் ஒருவித
ஆர்வமும், 'க்ரைம் கதை வல்லுநர்' சிறுகதையில் எப்படிப்பட்ட விஷயங்களை எடுத்தாளப்போகிறார்
என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது. ஒவ்வொரு கதையை படித்து முடித்த போதும்
மனதிற்குள் ஒரு நிறைவு. பெரும்பாலான கதைகளில் முடிவு எதிர்பாரா ஒரு திருப்பத்தை
கொண்டிருந்தது. இத்துணை வருட எழுத்து அனுபவம் காட்சியை வாசகர் மனதில் ஓட வைக்கும்
விவரணைகளில் தெரிந்தது. இலக்கிய பாணியில் அல்லாமல் தெளிந்த நீரோட்டமாய் கடைநிலை
வாசகனுக்கும் இனிமையான வாசிப்பனுபவம் கிட்டும் வண்ணம் எழுதியிருந்தது சிறப்பு.
இந்த தொகுப்பில் எனக்கு
மிகவும் பிடித்தது 'ஹலோ நண்பா' என்னும் சிறுகதை. குடித்துவிட்டு தன்
நண்பனுக்கு போன் செய்ய நினைத்து தவறுதலாக வேறொருவருக்கு அழைத்து விட, அந்த ராங்
காலை எடுத்தவர் வேலை இழந்து மனைவியும் கோபித்துக் கொண்டு அவர் அம்மா வீட்டிற்கு
சென்றுவிட்ட கோபத்தில் "மகாதியானத்தில்" ஈடுபட்டிருக்க, இவர்கள்
இருவருக்குள்ளும் நிகழும் சம்பாஷணைகள் தான் கதை. உரையாடலின் முடிவில் நிகழும்
திருப்பம் நிச்சயம் விறுவிறுப்பானது மட்டுமல்ல சிரித்தபடியே நாம் படித்து ரசிக்க
கூடியதும் கூட. ஒரு சிறு சாம்பிள் இங்கே..
தொகுப்பின் முதல் கதையே இன்றைய தலைமுறையின் அவலங்களை குறிப்பாக
"லிவ்விங் டுகெதர் பண்ணலாமா" என்பதை கூட "ஒரு காபி குடிக்கலாமா" என்பது
போல் கேட்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் (?!) நாகரீகத்தை சாடும் கதை. "ஆனந்தவல்லியின்
காதல்" ஒரு சரித்திர குறுங்கதை. ஆங்காங்கே திருப்பங்களுடன் நம்மை புருவம்
உயர்த்த செய்யும். "சிறப்பு விருந்தினர்" கதை நிச்சயம் பல
பேர்களுக்கு பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கிறது. "சிடுமூஞ்சிகள்"
என்னும் சிறுகதை கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வைக்கிறது. அதில் வரும் அம்மாவின்
கதாப்பாத்திரம் கடைசி வரியில் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறது. அதேபோல் "இரண்டு
கடிதங்கள்" படித்து முடிக்கும் போது குடித்துவிட்டு அட்ராசிட்டி செய்யும்
"குடிமகன்களின்" மேல் காறி உமிழத் தோன்றுகிறது. "அவன் பெயர்
கேகே" மனதோரம் கொஞ்சம் சோகத்தை அப்பிவிட்டு செல்கிறது.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு
விதமாய் ரசிக்கும்படி இருந்தது. எந்த ஒரு கதையும் கொஞ்சமும் தொய்வை
ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் இந்தக் காபியை எந்த சுவையை
ரசிப்பவர்களும் குடிக்கலாம்..!
நூலின் பெயர் : ஒரு காபி குடிக்கலாமா?
ஆசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர்
பக்கங்கள் : 152
விலை : ரூ. 100
நூல் வடிவமைப்பு : திரு.பாலகணேஷ்
நூல் வடிவமைப்பு : திரு.பாலகணேஷ்
பதிப்பாளர் : பி.சாந்தி, ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்,
37/1, கெனால் பேங்க் ரோடு, அடையாறு,
சென்னை - 600 020
தொலைபேசி - 044-24415709
37/1, கெனால் பேங்க் ரோடு, அடையாறு,
சென்னை - 600 020
தொலைபேசி - 044-24415709
Subscribe to:
Posts (Atom)





