Saturday, June 6, 2015
இமையம் அவர்களைப் பற்றி பெரிதும் அறிந்திடாத எனக்கு, இந்த வீடியோ மாரியம்மன் என்ற தலைப்புத்தான் என்னை வாங்கத் தூண்டியது. ஒருவித தயக்கத்துடன் தான் இந்த நூலை திறந்தேன், கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை, இப்புத்தகத்தை வாங்குகையில், என்ன மதிப்பீடு உள்மனதில் இருந்ததோ அதையும் தாண்டி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நேரடி அனுபவங்களை கதையாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கிறது, இமையம், அதையெல்லாம் தகர்த்து எறிந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரின் பெரும்பான்மையான கதைகள் உண்மை நிகழ்வுகளாக இருக்க கூடும் என்று நம்புகிறேன். கதை நகர்வும் அதன் மாந்தர்கள் பற்றிய விவரிப்பும் அப்படித்தான் இருக்கிறது.
கதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு, சமூகத்துக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் இயல்பின் வரம்பு மீறாமல், வாசகனின் முடிவுக்கு கதையை விட்டுவிட்டு ஒதுங்கி கொள்கிறார் திரு. இமையம். அறிவுரை சொல்லவில்லை என்பது சற்று ஆறுதல். இருப்பினும் கதையை வாசித்து முடித்துவிட்டு அதன் மையக் கருத்து என்னவென்று சிந்திக்க துவங்கினால், ஒவ்வொரு கதையும் பெரிய வகுப்பெடுத்துச் செல்கிறது. ஆசிரியர் என்பதினால் இந்த நெளிவு சுளிவு வந்திருக்குமோ என்னவோ? உண்மையில் ஒவ்வொரு கதையும் ஒரு சுயபரிசோதனை செய்யத் தூண்டும் அளவிற்கு வலுவான முடிச்சுக்கள் கொண்டுள்ளன!
இக்கதைகள் அனைத்துமே, கிராமத்து மனிதர்களையும் அவர்களின் தினசரி வாழ்வியலை பற்றி பேசுவதினால், அதே சூழலில் வளர்ந்த என்னால் வெகு எளிதாக கதையுடன் ஒன்றிவிட முடிந்தது. மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் பல முன்னணி இதழ்களில் வெளி வந்திருக்கின்றன! அவற்றில் இரண்டு மூன்று கதைகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்!
உயிர்நாடி:
தனியார் கம்பெனிக்காரன் அதிக விலை கொடுத்து விவாசய நிலங்களை வாங்கி கொண்டிருக்க, ஒரு கிழவர் மட்டும் விற்க மனமில்லாமல் இருக்கிறார், ஊரில் எல்லோரும் விற்று விட்டார்கள் உனக்கு மட்டும் விற்க ஏன் மனசு வரமாட்டேங்குது என்று சண்டை போடும் புள்ளைக்கும், அப்பனுக்குமான நிகழ்வு தான் கதை. எளிதான சம்பவம் தான் என்று கடந்து போக முடியாது அதனுள் அவ்வளவு உணர்வுகளை புதைத்து வைத்திருக்கிறார். காலம் மாறிக்கொண்டு இருக்கிறது, ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்குமான இடைவெளி எப்படி உருவாகிறது, அதன் நன்மை தீமைகள் என்ன? என்று அழுத்தமாக சொல்லிருக்கிறார். விவசாயத்தையே உயிரென நேசித்த ஒரு கிழவனின் மனசை சிதறு தேங்காயைப் போல் உடைத்து, எழுத்துக்களாய் நம்முன் வைத்திருக்கிறார்.
அம்மா :
குடும்பத்தோடு நகரத்துக்கு குடிப்பெயர்ந்துவிட்ட ஒரு தாழ்த்தப் பட்ட இளைஞன், ஊரில் ஒரு நிகழ்விற்காக வந்திருக்கையில் தனது ஆதங்கங்களை கொட்டி தீர்க்கும் தாயின் உரையாடலே அம்மா எனும் கதை. "நீ, மாறிட்டே, உன் பொண்டாட்டி சொந்தம் தான் முக்கியமுன்னு போயிட்டே" என்று சொல்லுகையில் கூட பாசத்தின் ருசி, வாசிக்கும் நமக்கும் தெரியுமளவிற்கு எழுதியிருப்பார் திரு. இமையம். "கருவாடுன்னா உனக்கு ரொம்ப புடிக்குமென்று எடுத்து வைச்சேன், நான் ஒருத்தி மட்டும் தின்னு என்ன பண்ண போறேன், எடுத்துக் கொண்டு போய் வைச்சி கொடுக்க சொல்லி சாப்புடு " என்று ஓடிப்போய் அடுக்குப்பானையில் இருக்கும் கருவாட்டை அள்ளி கடுதாசியில் போட்டு அனுப்பி வைப்பாள் அந்த தாய். கதை முழுக்க தொண தொணவென்று பேசிக்கொண்டு இருப்பதாக காட்டியிருந்தாலும் அதிலொரு அழுக்குப் பாசம் ஒளிந்திருக்கும்.
கணவனை பறிக்கொடுத்த ஒருத்தி, அதிகாலையில் எழுந்து பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தன்னோட காட்டில் விளைந்து நிற்கும் கொத்த மல்லியை அறுத்தெடுக்க செல்லுவதை பயணமென்று கதையாக எழுதி இருக்கிறார். எழுத துவங்கியிருக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுமளவிற்கு நேர்த்தியான கதை. இப்படி ஒவ்வொன்றும் ஒருவித உணர்வின் குவியல் தான்.
இந்த மூன்றுகதைகளும் என்னை வெகுவாய் பாதித்தது, மற்ற கதைகளும் ஆணிவேராய் உள்ளுக்குள் இறங்கும் வல்லமை கொண்டவைகள் தான். வாசிக்க வேண்டிய புத்தகம், தவற விடவேண்டாம் என்பது எனது கருத்து.
ஆசிரியரைப் பற்றி:
கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை என்று இயற்பெயரைக் கொண்ட திரு. இமையம் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். சமகாலத்திய படைப்பாளிகளில் முதன்மையானவர்கள் வரிசையில் வரக்கூடியவர். அதிகம் எழுதவில்லை என்றாலும் இவரது கதைகள் பெரும்பாலனாவைகள் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டு வருகின்றன. முதல் நாவலான "கோவேறு கழுதைகள்" 1994 வெளிவந்துள்ளது அதிலிருந்து அவ்வப்போது சிறுகதை தொகுப்பும், நாவலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன!
மேலும் தகவலுக்கு: http://www.writerimayam.com/
===========================================================
மொத்த பக்கங்கள் : 227
பதிப்பகம் : க்ரியா
விலை : 150/-
============================================================
படித்துச் சொன்னது
அரசன்
Tuesday, May 26, 2015
ஒரு எழுத்து எல்லா வகையான வாசகர்களையும் திருப்தி படுத்தாது என்பதை தீவிரமாக நம்புகிறவன் நான், சமீபகாலமாக, கலவையான எழுத்துக்களை பெரிதும் விரும்ப துவங்கியிருக்கிறேன் அதுவும் வட்டார வழக்கு என்றால் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க விழைகிறேன். நண்பர்களின் மூலமாக இதுவரை அறிந்திருந்த திரு. நாஞ்சில் நாடனை அவரின் எழுத்தின் வாயிலாக அறிய முற்பட்டு, இந்த எட்டு திக்கும் மதயானை நூலை வாங்கினேன். இவரைப் பற்றி எவ்வாறெல்லாம் அறிமுகப் படுத்தி வைத்திருந்தார்களோ, அதற்கும் சற்று கூடுதலாக அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.
வெறும் புனைவுதானென்று கடந்து விட இயலவில்லை, அதனுள் அறிந்து, புரிந்துகொள்ள ஏகப்பட்ட செய்திகளை, வழக்குகளை, மக்களை, அவர்களின் வாழ்வியலை எதார்த்தம் பிறழாமல் பதிவு செய்திருக்கிறார். கற்பனைகளை கட்டவிழ்த்து விடாமல், தினந்தோறும் சந்திக்கும் எளிய மனிதர்களை, அவர்களின் இன்னல்களை அதன் இயல்பு மீறாமல் அப்படியே எழுத்துக்களாக்கி இருக்கிறார். கட்டுபாடுகளற்ற சுதந்திரம் ஒரு மனிதனை எப்படில்லாம் உருமாற்றுகிறது, அவன் எவ்வாறெல்லாம் திசை மாறி சிதைந்து போகும் அபாயம் இருக்கிறது என்று பேசுகிறது நாவல்!
திக்கற்ற பயணம், அதனுள் நிறைந்திருக்கும் புதிர்கள், புரட்டு மனிதர்களின் சீரற்ற வாழ்வியல், அதனை எதிர்கொள்ளும் மனவுறுதி, காமம், காமம் சார்ந்த மனிதர்கள், காமத்தினால் வரும் படிப்பினைகள், களவு, நயவஞ்சகம், கொலை, வன்மம், பிரிவு, மூரக்கமான குடி, நட்பு, ஏமாற்றம், துணிச்சல், சிறை, ஏற்றம், இறக்கம், யாருமற்ற பரிதவிப்பு, துக்கம், வன்புணர்ச்சி, வழக்கு, அடைக்கலம், கையில் சல்லிக்காசு இல்லாவிடினும் பிடிமானமுள்ள நகர்வு, கடின உழைப்பு, குற்ற உணர்ச்சி, உறக்கமற்ற இரவொன்றில் சுய புரிதலுக்கான தேடல் இப்படி இத்தனையையும் பேசியிருக்கிறார், இடையிடையே நாட்டின் நிலை பற்றிய தன் வேதனையை பதிவு செய்த விதம் நறுக்கென்று விழும் சவுக்கடி!
வாசிக்க எடுத்துக்கொண்ட பத்து நாட்களும் ஒரு உணர்வுச் சுழலில் சிக்குண்ட மாதிரி தான் இருந்தேன்!
நாடோடி போல் திரியும் ஒருவனின் வாழ்வை, அவன் எதிர்கொள்ளும் சூனியமான காலங்களை இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்ததை இப்போது தான் படிக்கிறேன், அதுவும் இரவு நேர இரயில் பயணங்களை விவரித்திருக்கும் அழகே தனி, அதன் தாக்கம் எனக்குள்ளும் இப்படியொரு நீண்ட ரயில் பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசையை முன்னிறுத்துகிறது. பார்ப்போம் காலங்கள் அனுமதிக்க வேண்டுமே?
கதைச்சுருக்கம்:
பூலிங்கம் எனும் குயவ குடும்பத்து பையன், படித்து வருகிறான், தான் செய்யாத குற்றத்திற்காக அந்த ஊரின் பெருந்தனத்துக்காரரின் ஆட்களிடம் அடிவாங்கி, அதனால் ஏற்பட்ட அவமானத்தில் அவரின் வைக்கோல் போருக்கு தீ வைத்து விட்டு, அதன் காரணமாக ஊரை விட்டு ஓடுகிறான்! ஓடியவன் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான். முதலில் ராய்ச்சூரில் தங்கி ஐஸ் கிரீம் விற்கிறான் அங்கு ஏற்பட்ட ஒரு மோதலில் ஒருவனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து வருகையில் தமிழ் லாரிக்காரனின் சிநேகம் கிடைத்து, அந்த லாரி டிரைவர் கோவாவில் ஒரு சேட்டிடம் வேலைக்கு சேர்த்துவிட்டு செல்ல, அங்கு சில நாட்கள் தங்கி இருக்கிறான் பூலிங்கம். சேட் ஊரில்லாத சமயம் பார்த்து வீட்டினுள் நுழைந்து பீரோவை துழாவி மாட்டிக்கொண்டு, அங்கிருந்து லோண்டா விற்கு ஓடுகிறான். அங்குதான் அவனுக்கு கெட்டசகவாசம் ஆரம்பிக்கிறது. கோவாவிலிருந்து கம்மியான விலைக்கு சரக்கு வாங்கிவந்து கொடுப்பதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நாட்களை கழித்துக் கொண்டிருக்க, ஒருநாள் போலீசிடம் மாட்டிக்கொள்ள ஜெயிலினுள் போலிஸ் ஒருவர் வெளிய வந்து என்னைப் பார் உன்னை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறேன் என்று வாக்குறுதி அளிக்க, அதன்படி அவரை சந்திக்கிறான், அந்த காவல் அவனுக்கு கஞ்சா, பிரவுன் சுகர் கைமாற்றும் தொழிலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதில் கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி கொண்டிருக்கையில் வெளியூர் பயணத்தில் ஒருவன் கூல்ரிங்க்கில் மயக்க மருந்து கலந்து கொடுத்து "சரக்கை" அபகரித்துக் கொள்ள, வருத்ததுடன் சென்று முதலாளியிடம் சொல்ல, அவனை நம்பாமல் நாயை அடிப்பது மாதிரி அடித்து துரத்தி விட மும்பையில் தஞ்சமடைகிறான். அங்குதான் அவனுக்கு சாராய தொழில் செய்யும் தமிழ் அண்ணாச்சி அறிமுகம், பிறகு தொழிலில் சிறந்து விளங்குகிறான். யாரால் ஊரைவிட்டு ஓடிவந்தானோ அதே பெண்ணை அவன் மும்பையில் சந்திக்கிறான் பிறகு அவளின் நிலையை விவரித்து அவளையே அழைத்துக் கொண்டு சென்று புதிய வாழ்க்கையை துவங்குவது போல் முடிகிறது நாவல். நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கமான கதை தான், இதில் ஏகப்பட்ட கதை மாந்தர்கள் உலவுகிறார்கள், அவர்கள் கதைக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.
ஆசிரியரைப் பற்றி:
சுப்ரமணியம் என்ற இயற்பெயரை கொண்ட திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் இதுவரை ஆறு நாவல்களும், நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 5 கட்டுரை தொகுப்புக்களும், 2 கவிதை நூல்களும் வெளியிட்டிருக்கிறார். இவரின் "தலைகீழ் விகிதங்கள்" என்ற நாவல் தான் "சொல்ல மறந்த கதை" என்ற பெயரில் இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். "எட்டு திக்கும் மதயானை" நாவலையும் "படித்துறை" என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகின்றனரவாம்!

வட்டார வழக்கு சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துவதை தவிர்த்து இதில் குறையாக சொல்லிக்கொள்ள எனக்கு எதுவும் தோன்றவில்லை! பலதரப்பட்ட எழுத்துக்களை விரும்புவர்களுக்கு இந்த நூல் மிகச்சிறந்த தீனி யாக இருக்குமென்று நிச்சயமாக நம்புகிறேன்!
===========================================================
மொத்த பக்கங்கள் : 270
மூன்றாம் பதிப்பு : 2012
வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை. 0422-2382614.
விலை : 140/-
===========================================================
படித்துச் சொன்னது
அரசன்
http://www.karaiseraaalai.com/
Monday, May 4, 2015
இந்த நூலை வாங்கி சுமார் பதினைந்து மாதங்கள் ஆனதினால் படித்தே தீர வேண்டிய நெருக்கடி வரிசையில் சேர்த்து ஒருவழியாக வாசித்தும் முடித்து விட்டேன். நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு சவ சவ வகையறாவை படித்த உணர்வைத் தருகிறது இந்த "ஆண்பால் பெண்பால்". சின்ன சின்ன சுவராசியத்தை தவிர்த்து இந்த நூலில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றுமில்லை. எழுத்து நடையும் மேலோட்டமான புனைவுகள் தான். அங்கங்கு தூவிய ஆண்/பெண் உறவுகள் சார்ந்த விவரிப்புகள் சில இடங்களில் சிந்திக்க வைப்பதை தவிர்த்து வேறு எந்தவித சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
கதைச் சுருக்கம்:
மொத்தம் நாற்பது அத்தியாயங்கள் கொண்ட இந்நூலில் முதல் இருவது அத்தியாயங்களை பிரியா சொல்வதாக டாக்டர் பிரமிளா எழுதுவதாகவும், அடுத்த இருபது அத்தியாயங்களை அருண் சொல்வதாக ரகு எழுதியதாகவும் எழுதியிருக்கிறார் திரு. தமிழ் மகன்!
பழைய செய்திகளை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தில் ஒரு உயரிய பொறுப்பிலிருக்கும் பெண்ணை, அவளுக்கு வெண் புள்ளி துவங்கியதை மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியப் படுத்தாமல் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். மாப்பிள்ளை ஒரு எஞ்சினீயர்! அவருக்கு ஒரு அக்கா, அவளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. சரி மகனுக்காவது விரைவில் குழந்தை பிறக்கவேண்டும் என்று தவிப்பில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையின் குடும்பம்.
திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கோ MGR ன் ஆவி புகுந்து கொண்டு பாடாய் படுத்தி எடுக்கிறது, எப்போதும் MGR நினைவாகவே கடத்தி கொண்டிருக்கிறாள், மனைவியின் பார்வையில் கணவன் ஒரு காம வெறி கொண்ட மிருகம் போலவும், கணவனின் பார்வையில், மனைவிக்கு உறவில் தீராத மோகமிருந்தும் அவ்வளவு எளிதில் உடன்படாமல் கணவன் தொடர்ந்து வற்புறுத்தினால் மட்டுமே உடன்படுவது போல நடிப்பதாகவும் அதனால் தானொரு தியாகி போல அவளிடம் மன்றாடுவதாக சொல்லியிருக்கிறார் திரு. தமிழ் மகன்!
இறுதியில் அந்த பெண்ணுக்கு முற்றிலும் மனநலம் பாதிக்கப் பட்ட பைத்தியம் போல காண்பித்து, அதனால் இருவருக்கும் மிக எளிதில் விவகாரத்து வாங்குவது போல சொல்லி முடித்திருக்கிறார் இந்த நாவலை! இறுதியாக அந்த நாவலில் சில திருப்பங்களை வைத்து சுபம் போட்டிருக்கிறார் திருவாளர் தமிழ் மகன்! எதைச் சொன்னாலும் ஆடியன்ஸ் கைத்தட்டி விசிலடிப்பான் என்று நம்பி பேரரசு வைக்கும் கோமாளித்தனமான காட்சிகளுக்கும், இந்த திருப்பங்களுக்கும் நூலிழை வித்தியாசம் கூட இல்லை என்பது தான் சிறப்பு!
பாராட்டப்பட வேண்டிய இடங்கள்:
இந்த நூலை அப்படியே ஒதுக்கியும் வைத்து விடமுடியாது, அதனுள்ளும் சில தகவல்களை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லியிருக்கிறார்.
1) மனைவியென்பவள் வெறும் படுக்கையறை தோழியல்ல, அவளிடம் விவாதிக்க நிறைய இருக்கிறது என்பதையும், பெண்ணென்பவள் எந்த மன நிலையில் இருப்பாள் என்பதை ஓரளவேனும் சொல்லியிருப்பதும்,
2) ஒரு ஆணுடன் பெண் எவ்வாறு மாறுபட்டு சிந்திக்கிறாள், தான் அடைய விரும்பியதை அடைய எப்படியெல்லாம் முயலுகிறார்கள் என்று நிறுவ முயன்றிருக்கிறார்.
3) உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு காரணத்தின் துவக்கம் படுக்கையறை என்பதை மிக அழுத்தமாக உணர்த்த முயன்றிருக்கிறார்!
அதே போல்,
4) கணவனை வெறும் காம இச்சை கொண்ட படுக்கையறை வெறியனாக பார்ப்பதை தவிர்க்க வேண்டுமென்றும்,
5) கணவனின் முழுக்கவனமும் நம்மில் இருக்கவேண்டுமென்று மனைவி ஆசைப்படுவதும் அது கிடைக்காத பட்சத்தில் அதை மனதில் வைத்துக் கொண்டு படுக்கறையை பழி தீர்த்துக் கொள்ளும் களமாக பயன்படுத்த கூடாது என்பதையும்,
6) சின்ன சின்ன தவிர்ப்புகள் எவ்வளவு பெரிய பிரச்சினைகளில் முடியுமென்று சொல்ல முயன்றிருக்கிறார்!
இந்நூலின் பிரச்சினைகளாக எனக்கு தோன்றியவைகள்:
உளவியல் ரீதியான பிரச்சினைகளை தொடுகையில் அதீத கவனம் தேவை, அது இந்த நூலில் மிஸ்ஸிங். வெறும் MGR ன் ஆவியை வைத்து நகர்த்துவது ஆரம்பத்தில் ஈர்ப்பாக இருந்தாலும் அதுதான் கடைசியில் செம தொய்வு.
பொதுவான விசயங்களைப் பற்றி இந்நூலில் அதிகம் பேசவே இல்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடந்த பிரிவனை நிகழ்வுகளை மட்டுமே பேசி இருந்தாலும், இது பொதுவான ஆண்/பெண் மனநிலையை சித்தரிக்குமோ என்ற ஐயத்தை தருகிறது.
போகிற போக்கில் சொன்ன உணர்வை மட்டுமே தருகிறது, கொஞ்சம் அழுத்தமாக அதே நேரத்தில் சுவராசியமாக சொல்லியிருந்தால் இன்றைய அவசரக் குடுக்கை இளசுகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும், அந்த வகையில் இதில் தோல்வியை தழுவியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்!
இப்படியொரு மொன்னையான முன்னுரையை இதுவரை படித்ததே இல்லை, யாரிடமாவது இந்தப் புத்தகத்தை வாசிக்க கொடுக்க நேர்ந்தால் தமிழ் மகனின் முன்னுரையை நிச்சயமாய் கிழித்து விட்டுத்தான் கொடுக்கலாமென்ற எண்ணத்தில் இருக்கிறேன்.
இந்தப் புத்தகத்திற்கு ரூபாய் 200/- என்பது மிக அதிகம் தான்!
===============================================================
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை
ஆண்டு: 2011
மொத்தப் பக்கங்கள்: 255
விலை: 200/-
===============================================================
Sunday, April 5, 2015
சுஜாதாவின் கதைகளை படித்து வாசிப்பு பழக்கத்தை துவங்கிய எனக்கு கி.ரா. அவர்களின் 'கோபல்லகிராமம்' தான் ஊர் வழக்கில் நான் வாசித்த முதல் புத்தகம். படிப்பதற்கு சற்றே சிரமப்பட்ட போதும் எழுத்தின் சுவை உணர்ந்த போது எல்லாம் எளிமையானது. இளம் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களின் வற்றாநதி சிறுகதை தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்த போதும் கிட்டத்தட்ட அதே போன்ற உணர்வு. அந்த தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்து முடிக்க சில மாதங்கள் தேவைப்பட்டது. எனக்கு பிடித்த சில கதைகளை மீண்டும் மீண்டும் வாசித்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
'வற்றாநதியில்' நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதை... அது கதை அல்ல கடிதம். 'வணக்கத்திற்குரிய ' என்ற பெயரில் ஒருவர் பி.டி. வாத்தியாரான தன் வருங்கால மாமனாருக்கு எழுதும் கடிதம். அம்மா, அப்பா, தம்பி தங்கை, காதலி, மனைவிக்கு எழுதிய கடிதங்களை கூட கேள்விப் பட்டிருக்கிறேன். இது கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் இருந்தது, இதில் ஒரு இடத்தில் 'சுவாதியிடம் நீங்கள் கொடுத்தனுப்ப வேண்டியதெல்லாம் அன்பையும், இந்த தலைமுறை இழந்துவிட்ட பாசத்தையும் தான்' என்று சொல்லி இன்றைய தலைமுறையினருக்கு ஆசிரியர் ஒரு குட்டும் வைக்கிறார்.
விடலைப் பருவ காதலை சொல்லும் 'பச்ச', மனதை கனக்க வைக்கும் 'அப்பாவும் தென்னை மரங்களும்' , மனம் கரைய வைக்கும் 'பிரிவோம் சந்திப்போம்' என ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு அனுபவச் சிதறல்களாய் நம்முன் கொட்டிக் கிடக்கிறது. ஆசிரியரின் எழுத்தை வாசிக்கையில் நெல்லையில் எங்கோ ஓரிடத்தில் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாய் ஓர் உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும், தொய்வின்றி கதை சொல்லும் பாங்கும், இயல்பாய் அந்தக் கதைக்கு ஒரு முடிவு அமைப்பதும் கார்த்திக் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தை விரைவில் பிடிப்பார் என்பதையே சொல்கிறது.
'சிவந்திப்பட்டி கொலை வழக்கு' ஒரு குறும்படத்திற்கான கதை போன்று நேர்த்தியாக இருக்கிறது, 'லைட்ஸ் ஆப்' மனதை நெருடிச் செல்லும் எதார்த்த கதை. 'நிலைக்கதவு' சிறுகதை நிச்சயம் நம்மில் பலருக்கும் தன் வாழ்க்கையில் கூட இது போன்று நடந்திருக்கக் கூடும். பால்ய கால 'சைட்' பற்றி சொல்லும் 'ஜெனி', திகிலோடு முடியும் 'டெசி கதை' என படிப்பவர்களுக்கு சுவையான படையலை படைத்திருக்கிறார் ஆசிரியர்.
நூலின் பெயர் : வற்றா நதி
ஆசிரியர் : கார்த்திக் புகழேந்தி
பக்கங்கள் : 128
விலை : ரூ. 120
பதிப்பாளர் : அகநாழிகை பதிப்பகம்,
#390, அண்ணா சாலை,
KTS காம்ப்ளெக்ஸ்,
KTS காம்ப்ளெக்ஸ்,
சைதாபேட்டை ,
சென்னை - 600 015
தொலைபேசி - 999 454 1010
Thursday, March 26, 2015
Posted by
arasan
at
1:24 AM
Labels:
Novel,
கிராமிய எழுத்துக்கள்,
சமுதாயம்,
சிறு கதைகள்,
புகழ்
2
comments
எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் வாங்கிய சில புத்தகங்கள் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன அப்படி ஒன்று தான் இந்த மாங்கொட்ட சாமி. வழக்கம்போல் ஒரு ஞாயிறின் அந்தியில் டிஸ்கவரி புக் பேலசின் புத்தக வரிசைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் சிக்கியது இந்நூல். உண்மையில் இந்த மாதிரி புத்தகத்தைத் தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன், முதல் பக்க எழுத்து நடை அப்படியே மனசில் ஒட்டிக்கொள்ள வாங்கி வந்த கையோட படித்தும் முடித்தாயிற்று.
மொத்தம் பதிமூன்று கதைகளைக் கொண்ட இந்நூல் பழைய பாக்கெட் நாவல் சைசில் இருக்கிறது. எவ்வித அலங்காரமும், புனைவுமற்ற எழுத்து நடை. ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடிக்கையில் அருகில் அமர்ந்து கொண்டு யாரோ ஒருவர் கதையாக சொன்ன உணர்வை தருகிறது. பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் மனிதர்களோடு சில காலம் பழகிய மன நிறைவை தருகின்றன இக்கதைகள். வாழ்ந்து சலித்த கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை எந்த சலிப்புமில்லாமல் சொல்லுவதில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும் இந்நூலின் ஆசிரியர் திரு. புகழ்.
கிராமங்களில் முன்னோர்கள் சொல்லும் செவி வழி கதைகளை கூர்ந்து கவனித்தால் அதிலொரு நேர்த்தி இருக்காது. அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். கதை சொல்லிகள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி உயர்த்திச் சொல்வர். புகழின் கதைகளைனைத்தையும் செவி வழி கதைகளின் அச்சுப் பதிவாக காண்கிறேன். இதிலொரு நேர்த்தி இருக்கிறது. இவரின் கதை மாந்தர்கள் அவ்வளவு வலுவாக புனையப்பட்டிருக்கின்றனர். இக்கதைகளைனைத்தையும் புனைவு என்று எளிதில் கடந்து விட முடியாது, உதாரணமாக, "செங்காட்டு ஜோசியன்", "தொங்கட்டான் கெழவி" என்ற இரண்டு கதைகளையும் சொல்லலாம்.
தொங்கட்டான் கெழவி எனும் கதையில், இளம் வயதிலேயே கணவனை பறிகொடுத்த பெண்ணொருத்தி தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு காடுகரையில் கூலி வேலைசெய்து அவனை வாத்தியார் வேலைக்கும் படிக்க வைத்து விட்டதாகவும், பிறகு அந்தப் பையன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து கிராமத்தில் நிலபுலன்களை வாங்கி, சொந்தங்களில் பெண் தருவதாக சொல்லியும், தனக்கு தெரிந்த பக்கத்தூரில் வறுமை நிறைந்த குடும்பத்திலிருந்த பெண்ணை பையனுக்கு கட்டி வைத்திருக்கிறாள். இறுதியாக, முப்பது நாளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்த கெழவி தன் மகனின் முகத்தை பார்த்ததும் உயிர் பிரிந்ததாக கதையை எளிதாக முடித்திருக்கிறார். வழமையான கதைதானே, இதிலென்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? கதையில் ஒரு நாவலுக்குண்டான விசயங்களை அடக்கி சொல்லியிருக்கிறார். கிராமப்புற இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும், ஒப்பாரி வைக்கத் தெரியாத இளம் பெண்களுக்கு எப்படி ஒப்பாரி என்று வகுப்பெடுப்பதையும், பேருந்து நடத்துனரின் தில்லு முல்லுகளையும் அதற்கு கெழவி செய்த அறிவுக் கூர்மையான செயல்களையும் ;தொகுத்து சொன்னால் ஒரு நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு விசயங்களை உள்ளடக்கி குறுங்கதையாக்கியிருக்கும் எழுத்தாற்றல்.
அடுத்து செங்காட்டு ஜோசியன் என்னும் கதை, செமத்தியான தீனி. கிராமப் புற மக்கள் இன்னும் ஜாதகம் ஜோசியம் ன்னு திரிந்து கொண்டிருக்கிறார்கள். செங்காட்டில் ஜோசியன் ஒருத்தன் உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வதகாவும் அதனால் பலரின் அந்தரங்கள் வெளிப்பட்டு மனைவி மார்களிடம் விளக்கு மாறு அடிவாங்குவதாக சொல்கிறார். கல்யாணம் பண்ணி நாலு மாசம் கூட இருந்துவிட்டு வெளிநாடு போன ஒருத்தன் நாலு வருஷம் கழிச்சி வந்து மனைவி குழந்தையோடு வந்து ஜோசியம் பாக்க சென்றிருக்கையில் இது உன் புள்ளையே இல்லை எப்படிப்பா நான் ஜாதகம் பார்ப்பது என்று உண்மையை போட்டு உடைக்க, மிரண்டு போனவன் ஆத்திரத்தில் ஜோசியக்காரனை அடிக்கப் போக, ஜோசியன் மீண்டும் ஆணித்தரமாக சொல்ல, வெளிய எழுந்து வந்து மனைவியை போட்டு மிதிக்க, அவள் வலி தாங்காமல், நாலு மாசம் கூட படுத்துவிட்டு நீ வெளிநாடு போய்டுவே, நாலு வருஷம் நான் சும்மா இருப்பதா ? எங்க நீ இருந்து பாரேன் ன்னு காட்டுக் கத்தலா கத்தியதாக சொல்லியிருக்கிறார். ஒலச்சான் எனும் பாத்திரம் ஜாதகம் நீட்ட, நீ என்னைக்கு உன் கள்ளத்தொடர்பை விடுறியோ அன்னைக்கு நல்லா இருப்பே ன்னு போட்டு உடைக்க அது ஓலச்சானின் பொண்டாட்டி தெரிஞ்சி குடும்பத்தில் சண்டையாகிப் போக கடுப்பில் மறு வாரம் வேறொரு ஜாதகத்தை தூக்கி கொண்டு போயி அவனிடம் இது என் மகள் ஜாதகம் எப்ப கல்யாணம் நடக்கும்னு பாரு என்று சொல்லிருக்கார் ஓலச்சான். செங்காட்டு ஜோசியன் வாங்கிய ஒடனே, இந்த புள்ளையோட அம்மாக்காரி எப்படி எவன் கூடவோ ஓடிப்போயி மூணு மாசம் கழிச்சி திரும்பி வந்து நல்லபடியா குடும்பம் நடத்துறாளோ, அப்படித்தான் இந்தப் புள்ளையும் கல்யாணத்துக்கு முந்தி யார் கூடவோ ஓடிப்போயி ஆறு மாசம் கழிச்சி மீண்டும் வந்து நல்ல படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தும் னு சொல்லிட்டு ஜாதகத்தை மூடி கீழ வைச்ச ஜோசியனை பார்த்து இது எம்மகள் ஜாதகம் இல்ல உன் மகள் ஜாதகம் டா ன்னு சொல்லிட்டு இன்னொரு ஜாதகமும் இருக்கு பாக்குறியா ? ன்னு சொல்லிட்டு ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன் மூஞ்சியில் வீசிவிட்டு வெளிய வருவதாகவும், அதிலிருந்து ஜோசியன் தன் தொழிலை விட்டதாக கதை முடியும். ஒவ்வொரு கதையின் முடிவில் செம சுவையான முடிவு காத்திருக்கிறது.
இதுமாத்திரமில்லாமல் இதிலிருக்கும் கதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவையில் மனதை தைக்க கூடிய விஷயம் அடங்கியிருக்கும். கொடுக்கும் காசிற்கு நிச்சயம் மன நிறைவை அடைவீர்கள்.
பக்கங்கள் : 152
பதிப்பகம் : க்ரியா
வெளியீடு : 2009
விலை : ரூபாய் 125/-

Subscribe to:
Posts (Atom)