Monday, August 31, 2015
இதற்கு முன்னரே வீடியோ மாரியம்மன் என்ற நூலின் வாயிலாக எழுத்தாளர் இமையத்தைப் பற்றி அறிந்திருந்தாலும், அதன் பிறகு வாங்கிய "ஆறுமுகம்" என்ற நூலை வாசிக்காமல் கிடப்பில் போட்டிருந்தமையால் , இமையத்தின் புதிய வெளியீடான "எங் கதெ" நாவலை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டினேன், ஒருநாள் சந்திப்பின் போது, "தலைவரே, "எங் கதெ" வாங்கிட்டிங்களா? எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க, நீங்க வாங்கவில்லை என்றால் நான் வாங்குகிறேன்" என்று சொன்ன தோழர் சீனுவை சாந்தப்படுத்தி, நான் வாங்கிவிடுகிறேன் என்று சொல்லி, அதே வாரத்தின் இறுதியில் டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி வந்தேன்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து, எழுத்தாளர் அபிலாஷ், இந்து தமிழ் நாளிதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்ததை படித்ததும், வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூலை மூடி வைத்துவிட்டு, அந்த வெற்றிடத்திற்குள் இந்த "எங் கதெ" யை புகுத்திக் கொண்டேன். நண்பனை சந்திக்க கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருந்தேன், அவன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும், வசதியான இருக்கையாய் பார்த்து அமர்ந்து இந்நூலை வாசிக்க துவங்கினேன். அந்த நண்பர் வருவதற்குள் நூலில் பாதியை வாசித்து முடித்திருந்தேன். நூலின் நகர்வு அவ்வளவு விறுவிறுப்பு! சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்!
பொதுவாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் இருக்கும் அலாதி வேறெதிலும் இருக்காது, அப்படியொரு தீவிரம் காட்டுவார்கள் நம்மவர்கள், இந்த நம்மவர்களில் அடியேனும் அடக்கம்! அப்படியான ஒரு தனி நபரின் அந்தரங்கம் தான் கதையே! முதல் நான்கு பக்கங்களை வாசித்தாலே போதும் கதையின் வடிவத்தை யூகித்து விடலாம். சில நேரங்களில் கதையின் விறு விறு நகர்வை வட்டார எழுத்து நடை சிதைத்து படிக்கிற ஆர்வத்தை குறைத்து விடும். அப்படியொரு நாவல் ஒன்று எனது புத்தக அடுக்கில் மூன்று வருடங்களாக தூங்கி கொண்டிருக்கிறது. நல்லவேளை அம்மாதிரியான சிக்கல் இந்த புத்தகத்திற்கு இல்லை. கடலூர் வட்டார வழக்கில் புனையப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கான சிக்கல்கள் ஏதுமில்லை!
விபத்தில் கணவனை இழந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிட்ட, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு வருகிறாள் கமலா! ஊரிலிருக்கும் இளசிலிருந்து, பெருசு வரை எல்லோரும் அவளின் கவனத்தை ஈர்க்க படாத பாடுபட , அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இக்கதையின் நாயகனுக்கு கிட்டுகிறது. அதன்பின்பு குடும்பத்தை மறந்து, தங்கைகளை மறந்து, ஊரார்களை மறந்து, கடைசியில் தன்னை மறந்து இறுதியாக என்னவாகிறான் என்பதே மொத்தக் கதை. இம்மாதிரியான கதைகளையும், நிகழ்வுகளையும் அதைச்செய்யும் மாந்தர்களையும் நேரிடையாக பார்த்து வளர்ந்த சூழல் கொண்ட எனக்கு, இக்கதை பெருத்த அதிர்வை கொடுக்கவில்லை என்றாலும், உணர்வுகள் ததும்பிய எழுத்து நகர்வு மனக் கிளர்ச்சியை தூண்டுகிறது.
அச்சை வைத்து இயங்கும் சக்கரத்தைப் போல, கமலாவை சுற்றி தான் கதை நகர்கிறது. தன்னோட 28 வது வயதில் அவளிடம் தன்னை தொலைக்கிறான், 38 வயதில் தெளிவு பெறுவதாக முடித்திருக்கிறார். கமலாவை மிகத் தெளிவான பாத்திரமாக புனைந்து, அவளின் காலில் விழுந்து கிடக்கும் நாயை போல நாயகனை புனைந்திருப்பது அதகளம்! தனக்கே தனக்கு சொந்தமாக இருந்தவள் திடீரென பணி இடமாறுதலாகி போன இடத்தில் வேறொருவனிடம் வழிவதாக அமைத்து, இவனின் நிலை என்ன? இத்துணை வருடங்களாக என்னவாக இருந்தோம் என்ற சுய புரிதலை துவக்கி வைப்பது தான் எதார்த்தத்தின் உச்சம்!
ஓரிடத்தில் அவன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை தெரிய வைக்க, ஒரு நிகழ்வை சொல்லியிருப்பார். அதுதான் என்னைக் கவர்ந்த அம்சம். கமலாவிடம் அவமானப் பட்டு, அதன் விரக்தியில் வந்து வீட்டின் கொட்டகை கட்டிலில் குப்புற கிடக்கையில், ஊரிலிருந்து வந்திருந்த தங்கச்சிகளின் பிள்ளைகள் வந்து பொங்கல் காசு கொடு மாமா என்று கேட்கையில் பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு பசங்களை விரட்டிவிட்டு அவனின் அம்மா பாக்கெட்டில் பணம் வைப்பதும், அவனின் தங்கைகள் சும்மா பாக்கெட்டை செக் செய்வது போல் ஆளுக்கு கொஞ்சம் பணம் வைப்பது போல் வைத்து அந்தக் காட்சி கண்ணெதிரே வந்துப் போகுமளவிற்கு எழுத்தில் அனல் காட்டியிருப்பார் திரு. இமயம்.
ஊடாக, கமலாவின் கணவன் பின்புலத்தையும், அவரின் போராட்ட மனப்பான்மை பற்றியும், இவனை சித்தப்பா பையன் ஒருவனைக் கொண்டு இவனின் செய்கைகளை எடுத்துரைத்து இதெல்லாம் தவறு என்று சொல்வதாகவும், எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக நான் கமலா எனும் கடலினும் விழுந்து கிடக்கிறேன், தப்பென்று தெரிந்தும் அதிலிருந்து மீள மனமில்லாமல் கிடக்கும் ஒருத்தனின் வாழ்வை சினிமாவாக கண்ட திருப்தியை கொடுக்கும் இந்த நாவலை வாசித்து முடித்தால்!
இந்த மாதிரியான வகையறா கதைகளுக்கு முடிவு என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தாலும் கதையின் நகர்வு அதை மறைத்து விடுகிறது. தான் சொல்ல வந்ததை அறுபது எழுபது பக்கங்களில் சொல்லிவிட்டாலும், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே பக்கங்களை இழுத்தது சற்று இழுவையாக இருந்தது. இப்படி சின்ன சின்ன தொய்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த "எங் கதெ" எல்லோருக்குமான கதை தான்!
இவரின் முந்தைய படைப்பான வீடியோ மாரியம்மன் பற்றி வாசிக்க இங்கு கிளிக்கவும்
========================================================================
புத்தகத்தின் பெயர்: எங் கதெ (நாவல்)
வெளியீடு: க்ரியா
ஆண்டு: 2015
பக்கங்கள் : 110
விலை : 110/-
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்: creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்: creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
========================================================================
Wednesday, August 5, 2015
டிஸ்கவரியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்த ஆவி 'சீனு இத வாங்கிருங்க என்றார்', ஜீரோ டிகிரிக்கு பக்கத்திலேயே காமரூப கதைகளும் ஒளிந்து கொண்டிருந்தது. 'பாஸ் இதை ஏன் விட்டுடீங்க, இதையும் வாங்கிரலாமே' என்றேன். மொதல்ல இதப் படிச்சிப் பார்ப்போம் நல்லா இருந்தா அதை வாங்குவோம் என்றார். ' இல்ல பரவாயில்ல ரெண்டையும் வாங்கிருவோம். மனசு மாறிட்டா கடைசி வரைக்கும் வாங்கவே மாட்டோம்' என்றேன்.
சாருவின் பத்தி எழுத்துக்களை மட்டுமே வாசித்து வந்த எனக்கு அவருடைய நாவல்களை வாசிக்க வேண்டும் என்பது நெடுநாள் அவா. அவருடைய புதிய எக்சைலைக் கூட முன்வெளியீட்டுத் திட்டத்தின் போதே வாங்கி பத்திரமாக பூட்டி வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய புத்தகமும் அதுதான். புதிய எக்சைலை படிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே மயிலன் ஒரு தகவல் அனுப்பி இருந்தார் 'ராசலீலா படிக்காமல் புதிய எக்சைலை படிக்க வேண்டாம்' என்று.
டிஸ்கவரியில் முதலில் கேட்டது ராசலீலாவைத் தான், அன்றைக்கு பார்த்து ஸ்டாக் இல்லை. அதனால் காமரூப கதைகளை நானும் ஜீரோ டிகிரியை ஆவியும் வாங்கிக் கொண்டோம்.
**
ஐந்து வருடங்கள் இருக்கும். அண்ணா நகரில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். சாருவின் ஜீரோ டிகிரியை அண்ணன் வாங்கி வந்திருந்தான். அப்போது நான் சாருவை அறிந்திராத பிள்ளைப் பருவத்தில் இருந்தேன். அண்ணனோ விகடன் காலத்தில் இருந்தே சாருவின் வாசகன் என்பதால் அவரின் எழுத்துக்களில் மயங்கி ஜீரோ டிகிரியை வாங்கி இருந்தான்.
'யாரு இது புது ரைட்டரோ'
'போடா லூஸு, இவர் எவ்ளோ பெரிய ரைட்டர் தெரியுமா. அதான் விகடன்ல கூட நிறைய எழுதி இருக்காரே'
'இல்ல நான் படிச்சது இல்லை'
'நீ எல்லாம் என்னத்த விகடன் படிச்சு கிழிச்சியோ'
'கத, ஜோக்ஸ், ஹாய் மதன் அப்புறம் எதாவது எனக்கு புடிச்சது இருந்தா படிப்பேன், இவரோடது படிச்சது இல்ல'
அதற்கு பின் சாருவைக் குறித்து என்ன என்னவோ கூறினான். சுவாரசியமாக எழுதுவதில் வல்லவர். அடுத்த சுஜாதா அது இது என்று. சரி இவ்ளோ விஷயம் பேசுறான், படிச்சுதான் பார்ப்போம் என்று ஜீரோ டிகிரியைக் கையில் எடுத்தேன். முதல் பக்கத்தைக் கூடத் தாண்ட முடியவில்லை. என்ன எழுதி இருக்கிறார். என்ன கூற வருகிறார் எதுவும் புரியவில்லை.
'ஏ என்னடே புக்கு இது'
'ஏன் என்னாச்சு'
'இத நீ தான் படிக்கணும், ஒண்ணும் வெளங்கல'
அப்படியே நாட்கள் நகர நகர, அந்தப் புத்தகம் மேஜையிலேயே கிடக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் படிச்சியா படிச்சியா என்று கேட்பேன் 'ம்கும்' என்று தலையசைப்பான்.
ஒருநாள் என்னிடம் வந்து 'ஒருவழியா முடிச்சிட்டேன்' என்று கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தேன்.
'புரிஞ்சதா'
'ம்ம் புரிஞ்சது, அது ஒரு வித்தியாசமான புக்கு. ஆனா இப்போதைக்கு அதப் படிக்காத' என்று மட்டும் கூறினான்.
அன்றைக்கு மேஜையில் இருந்து காணாமல் போன புத்தகம் இன்றைக்கு வரைக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே ஒளித்து வைத்துள்ளான் என்பது அவனுக்குத்தான் வெளிச்சம் .
**
காமரூப கதைகளை முதல் இணைய நாவல் என்று குறிப்பிடுகிறார் சாரு. சாரு ஆன்லைனில் அவர் எழுதிய 108 குட்டிக் கதைகளை தொகுத்து நாவல் என்ற பெயரில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
குட்டி என்றால் சிறிய என்றும் வல்லிய பெண்குட்டி என்று பொருள்படும். புத்தகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்குட்டிகள் தான். சாருவின் வாசகனாக படித்தால் கொண்டாட்டம், கலாச்சாரக் காவலராகப் படித்தால் அத்தனையும் ஆபாசம் ;-).
சாரு ஆன்லைனை தொடர்ந்து வாசித்து வருவதால் அவருடைய எழுத்தின் ரசிகனாவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. இதில் இன்னொரு ப்யூட்டி என்னவென்றால் சாரு ஆன்லைன் வாசகன் ஆவதற்கு முன்னரே சாரு விமர்சகர் வட்டத்தின் வாசகன் ஆகிவிட்டேன். அது எவ்வளவு நல்ல விஷயமென்பது காமரூப கதைகளை படிக்கும் போதுதான் புரிந்தது.
கண்ணாயிரம் பெருமாள், மீரா, விஷால், நிக்கி, அலெக்ஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், மதனா, ஷாலினி, அர்பனா, நந்தினி, ஜெஸ்சி என்ற பல பாத்திரங்களால் நிறைந்தது தான் இந்தக் குட்டிக் கதைகள். இதில் வரும் பெரும்பாலான குட்டிகளை பெருமாள் & கோ சுவைத்துள்ளார்கள் அல்லது குறைந்தபட்சம் ஓரல் செக்சாவது உண்டு.
பெருமாள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியாக பதிவு செய்திருக்கிறார். இதில் எந்த அளவு நிஜம் என்பது பற்றி தெரிந்துகொள்ள பெருமாளின் ரூபமான சாருவைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க குறிகளாலும் குறியீடுகளாலும் நிறைந்த புத்தகம். இந்தப் புத்தகம் எழுதிய காலகட்டத்தில் உத்தம தமிழ் எழுத்தாளன் மீது அப்படி ஒரு கோவத்தில் இருந்திருக்கிறார் போலும். இப்போது அப்படி இல்லை சக உதிரனாகி விட்டார்கள்.
பெருமாளின் வாழ்க்கை கொண்டாட்டமானது என்ற ஒற்றை வரியைத் தவிர பெருமாளைப் பற்றி தொடர்ந்து எழுவது என்னால் இயலாத காரியமாக உள்ளது. இதுதான் பெருமாள் என்று அவருடைய பிம்பத்தை என்னால் ஒரு வரையறைக்குள் கட்டமைக்க முடியவில்லை. அவருக்கு தோன்றியது அத்தனையும் நியாயம். அவர் எதிர்ப்பது அத்தனையும் அநியாயம் என்பதால் இங்கே எனக்குத் தோன்றுவது அவருக்கு எதிராகத் தோன்றிவிட்டால்!
பெருமாள் தன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் மட்டும் அல்லாமல் தன்னை பாதித்த அயல் தேசத்து மனிதர்களையும் குறித்து எழுதியுள்ளார், அதில் பெரும்பாலனவர்கள் இசை சார்ந்தவர்கள். இது ஒரு இணைய நாவலாக இருவம் பெற்றது என்பதால் ஆங்காங்கு யுட்யுப் சுட்டியும் கொடுத்துள்ளார். பின்னொருநாள் அதனை சாவகாசமாக கேட்டு உய்ய வேண்டும்.
மேலும் காமரூபக் கதைகளை படிக்கும் முன் ஜீரோ டிகிரி - ராசலீலா படித்துவிடுவது உத்தமம். அவையிரண்டின் தொடர்ச்சியாகத்தான் இதப் பார்க்கமுடிகிறது. சீக்கிரம் அவற்றையும் படிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாவலும் எதாவது ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தரும். அதில் ஒரு கதை இருக்கும். அந்தக் கதை நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் என்ன கிடைத்து என்று யோசித்தால் தாக்கம் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு நல்லவாசிப்பு அனுபவம். என்ன இந்த நாவலை வாசிப்பதற்கு முன் சாரு விமர்சகர் வட்டத்தை ஒரு எட்டு படித்துவிடுவது நல்லது. பெருமாள் வைக்கும் குறியீடுகள் விளங்க அதை விடச் சிறந்ததொரு இடம் வேறு இல்லை :-)
இதனை நாவலாக ஏற்றுக்கொள்ள மனம் தயங்குகிறது. சாரு நினைத்ததைப் போல 108 குட்டி கதைகள் என்றே பெயர் வைத்திருக்கலாம். நாவல் என்ற அடைமொழி நெருடுகிறது. அல்லது இதனை நாவலாக ஏற்றுகொள்ள நான் இன்னும் வளர வேண்டும் போலும்.
16.05.2008 இல் இருந்து 21.12.2008 வரைக்கும் பெருமாளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அதில் அவர் வைக்கும் குறியீடுகளின், அவர் திட்டிய விதத்தையும், அவர் அனுபவித்த குட்டிகளையும் அது போக அவர் ரசித்த இசையையும் குறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் துணிந்து வாசிக்கலாம். அலுப்பு தட்டாத ஒரு புத்தகம். ஒருவேளை இந்த வகையறா எழுத்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் கேட்டுக்கொள்ள பெருமாள் இருக்கிறார். காரணம் இந்த உலகத்தில் இருக்கும் மொத்த அன்பையும் சேர்த்து தன்னை உருவாக்கிக் கொண்டதாக அவரே ஆங்காங்கு கூறியுள்ளார். ம்யு.
Monday, July 27, 2015
"பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி, படைப்பாளிகளுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன் நான், ஏனெனில் முதல் முறை சறுக்கி, பின் வீறு கொண்ட எழுந்த பலரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் சொதப்பினாலும் மறு கதையின் மூலம் வாசகனின் ஆதர்சனாக முடியும் ஆகையால் ஒரு சோறு பதம் இங்கு எடுபடாது என்றே நம்புகிறேன். ஆனால் திரு. சு. வேணுகோபாலின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துவிடலாம் ஒரு சோறு பதத்திற்குள். நன்றாக நினைவிருக்கிறது, சென்ற தீபாவளிக்கு முந்திய தின இரவினில் தான் திரு. சு. வேணுகோபாலின் "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற நூலை வாசித்தேன், நூலை கையிலெடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன். முதன் முதலில் வாசிக்கும் எவருக்கும் இவரின் எழுத்துகளை பிடித்துப் போகும் அந்தளவிற்கு விறு விறுவென நகரக் கூடிய எழுத்து.
தி. நெருஞ்சி தந்த கிறக்கத்தில், "பால் கனிகள்". "ஆட்டம்" என்று மேலும் இவரின் இரு படைப்புகளை கடந்தப் புத்தக திருவிழாவில் வாங்கி வந்திருந்தேன். அதில் "ஆட்டத்தை" வாசிக்க துவங்கினேன், ஆச்சரியம் என்னவெனில் இந்த நூலையும் ஒரே நாளில் வாசித்து முடித்தது தான். தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும் சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர்.
சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது, இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!
கதைச்சுருக்கம்:
கபடியில் சிறந்து விளங்கிய வடிவேல், அதே ஊரை சார்ந்த கனகம் என்னும் பெண்ணை காதலிக்கிறான், இதற்கு அவனின் சக கூட்டாளிகளும் உதவுகிறார்கள், முதலில் மறுக்கும் கனகம் பிறகு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் வெவ்வேறு சாதியென்பதினால் ஊரை விட்டு ஓடி, பக்கத்து நகரத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் பிறந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் திருப்பமாக, கூட வேலை செய்யும் ஒருத்தனோடு காதல் கொள்கிறாள் கனகம், அதனையறிந்து வடிவேல் கண்டித்ததும், கள்ளக் காதலனோடு ஓடியும் விடுகிறாள். வேறுவழி தெரியாமல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான் வடிவேல். அவமானம் அவனை துரத்துகிறது. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து தான், பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான், அப்படி வைராக்கியத்தோடு இருந்த வடிவேல் போட்டியில் ஜெயித்தானா ? என்பது தான் முதன்மை கதை. இதனிடையே சில கிளைக் கதைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தாலும் முதன்மை கதை நகர்வை துளியும் தடுக்கவில்லை.
இவரின் பலமே, எத்தனை கிளைக்கதைகளை புகுத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருப்பதாய் நகர்த்துவது தான். மற்றொன்று கபடி போட்டிகளின் போது நட்சத்திர வீரர், சக வீரன் கண்முன்னே வளருவதை கண்டு பொருமும் மன நிலையை அவ்வளவு நெருக்கமாய் பதிவு செய்திருப்பது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன், மனைவியும் இன்னொருவனோடு ஓடிப் போய்விடுகிறாள், தனது இரு விபரம் தெரியாத பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் படும் இன்னல்களை. மனக் குழப்பங்களை, அவமானம் தரும் வலிகளை முடிந்தளவிற்கு பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இறுதியாக ஒரு திருப்பத்தை தந்து முடித்திருப்பது விறுவிறுப்பு!
ஆசிரியருக்கு இந்த சித்திகளின் மீது என்ன தீரா வன்மமோ தெரியவில்லை, திசையெல்லாம் நெருஞ்சியில் சித்தி காடில்யா, வரம்பு மீறி உறவு கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார், அதே மாதிரி இந்த நாவலிலும் சித்தி நாகமணி என்பவள் மகன் உறவு வரும் காளையனிடம் உறவு கொள்வதாய் சித்தரித்திருக்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் அவரிடம் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே வாங்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது, அந்த ஆவலை முழுமையாய் தீர்த்து வைக்கிறது உள்ளிருக்கும் எழுத்தும்.
திசையெல்லாம் நெருஞ்சி பற்றிய எனது பார்வைகளை படிக்க இங்கு செல்லுங்கள் : திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்
=====================================================================
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
வருடம் : 2013 திசம்பர்
மொ . பக்கங்கள்: 120
விலை : 90/-
======================================================================
Sunday, July 5, 2015
சென்ற புத்தக சந்தையில் சந்தியா பதிப்பகத்தின் ஸ்டாலில் நுழைந்து மேய்ந்து கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது இந்த கால் புழுதி. தலைப்பின் வசீகரம் தான் வாங்க தூண்டியது, இருந்தும் ரெண்டொரு பக்கம் புரட்டுகையில் மனதுக்கு நிறைவாக இருந்தமையால் வாங்கினேன்! விறு விறுவென நகர்த்திச் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி இருக்கிறார் கனகதூரிகா. ஆணை விட பெண்ணின் பார்வையில் ஒரு அழுத்தமும் அதனுள் விவரிக்க முடியாத நேசமும் பொதிந்திருக்கும் என்பதை தீவிரவாக நம்புகிறவன், ஆனால் நானறிந்தவரை சமகாலத்திய பெண் படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால் அவர்களின் எழுத்து கடும் மூர்க்கத் தனமாக இருக்கிறது. சில கவிதாயினிகளை படித்து, வாழ்வினை நொந்த காலமெல்லாம் உண்டு. கடுமையான சொற்களின் குவியலாகவே இருக்கும் அவர்களின் கவிதைகளும், கதைகளும், எங்கு தேடி பிடிப்பார்களோ தெரியவில்லை வார்த்தைகளில் அவ்வளவு உக்கிரம் இருக்கும், துவேசம் இருக்கும். இப்படியான பலருக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் தனது எண்ணங்களை எளிதான வார்த்தைகளின் மூலம் மிகவும் நேர்த்தியாக பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறான விதிவிலக்குகளின் வரிசையில் திருமதி. கனக தூரிகாவும் வருகிறார் என்பதே நிம்மதி!
கதைச் சுருக்கம்:
பூப்பெய்துமுன்னே கோமளவேணியை வயதில் மூத்த சென்னப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள் அந்த கொடூரனின் அம்மா. அவனோ இரவில் வேறொருத்தியை அழைத்துக் கொண்டு வந்து திரை மறைவில் சுகம் அனுபவிப்பதும், விடிந்ததும் அவளை அனுப்பி வைத்துவிடுவது தான் அவனின் தினசரி வாடிக்கை, இப்படியிருக்க ஒருநாள் கோமளம் சமைந்து விடுகிறாள், அவனோ வேறொருத்தியை அழைத்து வருவதை நிறுத்தி விட்டு கோமளத்துடன் குடும்பத்தை செலுத்துகிறான். திடிரென ஒருநாள் இவனின் அம்மாவும் இறந்து போக, இவர்கள் இருவருமாக குடும்பம் நகர்கிறது. அடுத்த தெருவிலிருக்கும் ஒரு திருட்டு சாமியாரின் சகவாசம் இவனுக்கு கிட்ட வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாமியாரே கதியென்று கிடக்க, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கீரை அறுத்து விற்கும் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் கோமளவேணி.
கோமளத்தின் சம்பாத்தியத்தில் கணவனை உட்கார வைத்து சோறு போடுவதில்லாமல், மூன்று பிள்ளைகளையும் பெற்று விடுகிறாள். முதல் குழந்தை பிறக்கும் நிலை, கொடுமையிலும் கொடுமை! இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை! இரண்டாவது பிள்ளை ரங்கன் காதல் தோல்வியில் இறந்து விட, மூன்றாவது பையனான கண்ணனை படிக்க வைத்து, தன்னோட முதலாளி சந்திரண்ணா விடமே சம்பந்தம் பண்ணுகிறாள். அதன் பிறகு கோவை குண்டு வெடிப்பினால் கண்ணனின் பட்டறை பிழைப்பில் மண் விழ, மகனையும், மருமகளையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் கீரைக் கூடையை தலையில் சுமக்க துவங்குகிறாள் கோமளவேணி. பேத்தி புவனாவிற்கு வேலை கிடைத்து அவள் குடும்பத்தை நிமிர்த்தி திருமணம் செய்து கொள்வது போல் முடிகிறது.
நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கம் தான்! கதையின் நகர்வு அவ்வளவு அழகாக இருக்கிறது, குண்டு வெடிப்பு வரை கதை நகர்வதில் தொய்வில்லை, குண்டு வெடிப்பை வலிந்து திணித்த உணர்வை தந்தாலும் அதில்லாமலும் இந்த கதை நகர்வை யோசித்து பார்க்க முடியவில்லை. கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி தனியொரு நாவலாகவே எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்தது சிற்சிறு விசயங்களை சொல்லி சென்றபோது. எவ்வளவு பெரிய வலி, அதனால் பலரின் வாழ்வியலின் திசை பிறழ்வு இப்படி சொல்ல ஏராளம் இருந்தும் சொல்லாமல் சென்றது ஏமாற்றத்தை தருகிறது. சில விசயங்களை புறந்தள்ளி விட்டு, ஒட்டு மொத்தமாக "கால் புழுதி" நல்லதொரு உணர்வை தரக் கூடிய நூல் என்று சொல்லலாம்!
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதை சொல்லப் பட்டிருக்கிறது, ஒருவகையில் வாசிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வாசிக்கிற நமக்கு கதையோடு பயணிக்கிற உணர்வை ஏனோ தரவில்லை. இன்னொன்று எல்லா கதாப்பாத்திரங்களும் முடிந்த வரை தங்களை நியாயப்படுத்த பார்க்கின்றன! கோமளவேணி தந்த அழுத்தம் வேறு எந்த கதாப்பாத்திரமும் தரவில்லை, ஒருவேளை கோமளத்தை மனதில் வைத்து தான் மற்றவைகளை உருவாக்கினாரோ என்னவோ?
சட சடவென்று நகர்கிறது, உணர்வுகளிலும் குறைவின்றி சொல்லப் பட்டிருக்கும் இந்நாவலை வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து விடுங்கள்!
==============================================================
மொத்த பக்கங்கள்- 120
விலை: Rs. 75/-
===============================================================
படித்துச் சொன்னது
அரசன்
karaiseraaalai.com
கதைச் சுருக்கம்:
பூப்பெய்துமுன்னே கோமளவேணியை வயதில் மூத்த சென்னப்பாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறாள் அந்த கொடூரனின் அம்மா. அவனோ இரவில் வேறொருத்தியை அழைத்துக் கொண்டு வந்து திரை மறைவில் சுகம் அனுபவிப்பதும், விடிந்ததும் அவளை அனுப்பி வைத்துவிடுவது தான் அவனின் தினசரி வாடிக்கை, இப்படியிருக்க ஒருநாள் கோமளம் சமைந்து விடுகிறாள், அவனோ வேறொருத்தியை அழைத்து வருவதை நிறுத்தி விட்டு கோமளத்துடன் குடும்பத்தை செலுத்துகிறான். திடிரென ஒருநாள் இவனின் அம்மாவும் இறந்து போக, இவர்கள் இருவருமாக குடும்பம் நகர்கிறது. அடுத்த தெருவிலிருக்கும் ஒரு திருட்டு சாமியாரின் சகவாசம் இவனுக்கு கிட்ட வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாமியாரே கதியென்று கிடக்க, பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு கீரை அறுத்து விற்கும் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள் கோமளவேணி.
கோமளத்தின் சம்பாத்தியத்தில் கணவனை உட்கார வைத்து சோறு போடுவதில்லாமல், மூன்று பிள்ளைகளையும் பெற்று விடுகிறாள். முதல் குழந்தை பிறக்கும் நிலை, கொடுமையிலும் கொடுமை! இப்படியொரு அவலம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று மனது வேண்டுவதை தவிர்க்க முடியவில்லை! இரண்டாவது பிள்ளை ரங்கன் காதல் தோல்வியில் இறந்து விட, மூன்றாவது பையனான கண்ணனை படிக்க வைத்து, தன்னோட முதலாளி சந்திரண்ணா விடமே சம்பந்தம் பண்ணுகிறாள். அதன் பிறகு கோவை குண்டு வெடிப்பினால் கண்ணனின் பட்டறை பிழைப்பில் மண் விழ, மகனையும், மருமகளையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு மீண்டும் கீரைக் கூடையை தலையில் சுமக்க துவங்குகிறாள் கோமளவேணி. பேத்தி புவனாவிற்கு வேலை கிடைத்து அவள் குடும்பத்தை நிமிர்த்தி திருமணம் செய்து கொள்வது போல் முடிகிறது.
நான் சொன்னது சுருக்கத்திலும் சுருக்கம் தான்! கதையின் நகர்வு அவ்வளவு அழகாக இருக்கிறது, குண்டு வெடிப்பு வரை கதை நகர்வதில் தொய்வில்லை, குண்டு வெடிப்பை வலிந்து திணித்த உணர்வை தந்தாலும் அதில்லாமலும் இந்த கதை நகர்வை யோசித்து பார்க்க முடியவில்லை. கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி தனியொரு நாவலாகவே எழுதி இருக்கலாம் என்ற உணர்வை தந்தது சிற்சிறு விசயங்களை சொல்லி சென்றபோது. எவ்வளவு பெரிய வலி, அதனால் பலரின் வாழ்வியலின் திசை பிறழ்வு இப்படி சொல்ல ஏராளம் இருந்தும் சொல்லாமல் சென்றது ஏமாற்றத்தை தருகிறது. சில விசயங்களை புறந்தள்ளி விட்டு, ஒட்டு மொத்தமாக "கால் புழுதி" நல்லதொரு உணர்வை தரக் கூடிய நூல் என்று சொல்லலாம்!
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பார்வையில் இந்தக் கதை சொல்லப் பட்டிருக்கிறது, ஒருவகையில் வாசிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் வாசிக்கிற நமக்கு கதையோடு பயணிக்கிற உணர்வை ஏனோ தரவில்லை. இன்னொன்று எல்லா கதாப்பாத்திரங்களும் முடிந்த வரை தங்களை நியாயப்படுத்த பார்க்கின்றன! கோமளவேணி தந்த அழுத்தம் வேறு எந்த கதாப்பாத்திரமும் தரவில்லை, ஒருவேளை கோமளத்தை மனதில் வைத்து தான் மற்றவைகளை உருவாக்கினாரோ என்னவோ?
சட சடவென்று நகர்கிறது, உணர்வுகளிலும் குறைவின்றி சொல்லப் பட்டிருக்கும் இந்நாவலை வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து விடுங்கள்!
==============================================================
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53 வது தெரு
9 வது அவென்யு, அசோக் நகர்
சென்னை 600 083
044.24896979
மொத்த பக்கங்கள்- 120
விலை: Rs. 75/-
===============================================================
படித்துச் சொன்னது
அரசன்
karaiseraaalai.com
Wednesday, June 24, 2015
நீங்கள் நான் மற்றும் நம் நண்பர்கள் நால்வருமாக ஆந்திராவில் ஒரு பிளாட்பார்மில் வசிக்கிறோம். உங்களுக்கும் எனக்கும் சுத்தமாக தெலுங்கு தெரியாது. புரியும். மற்ற இருவரும் ஓரளவிற்கு தெலுங்கில் கெட்டி. பகல் முழுவதும் கிடைக்கின்ற வேலை. இரவில் அலுப்பு தீர கொஞ்சம் கட்டிங். ரொம்பவே போரடித்தால் சினிமா. இதில் நம் நண்பர் நெல்சன் மட்டும் தீவிர சினிமா பைத்தியம். தினம் ஒரு சினிமா பார்த்தே ஆக வேண்டும். அப்படியொரு இரவில் சினிமா பார்க்கச் சென்ற நெல்சன் திரும்பி வராமல்போக எதிர்பாராத விதமாக அடுத்தநாள் உங்களைத் தேடி போலீஸ் வருகிறது. தெரியாத ஊர். தெரியாத பாசை. தெரியாத நபர்கள். கைது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் வரும் போலீசார். எப்படிப் புரிய வைப்பீர்கள் நீங்கள் குற்றவாளி இல்லை என்று.
ஒருநிமிஷம்! நீங்கள் குற்றவாளி இல்லையென நிருபிக்கும் முன் 'நீங்கள் செய்த குற்றம் என்ன எனத் தெரிந்து கொள்வது அவசியமில்லையா?' அந்த உரிமைகூட மறுக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். சிறிய பத்துக்குப் பத்து அறையில் அடைக்கப்டுகிறீர்கள். ஏற்கனவே அங்கே அனுபவஸ்தர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பமாகிறது லாக்கப் நாவல்.
குமார், ரவி, மொய்தீன், நெல்சன் - இவர்கள்தான் அந்த நால்வர்கள். இரவுக் காட்சி முடிந்து திரும்பிக்கொண்டிருந்த நெல்சனை சந்தேகத்தின் பேரில் விசாரிக்கும் ஆந்திரப் போலீஸிடம் மொழி புரியாமல் தடுமாறுகிறான் நெல்சன். மேலும் அவர்கள் எதையோ கேட்க இவன் வேறு எதையோ அரைகுறையாகப் புரிந்துகொண்டு மண்டையை ஆட்டுகிறான். நெல்சனிடம் இருந்து வரும் முன்னுக்குப் பின்னான பதில்களால் விசாரணைக்கு இழுத்துச் செல்கிறது போலீஸ். பயத்தில் தன் நண்பர்கள் என குமார் ரவி மொய்தீனை அடையாளம் காட்ட போலீஸ் அவர்களையும் விசாரணைக்கு இழுத்து வருகிறது. எலக்ட்ரிகல் கடை ஒன்றில் நடைபெற்ற திருட்டுக்கு இவர்களை பலியாடாக்குகிறது. செய்யாத குற்றத்தை எப்படி ஒப்புகொள்வது. இவர்கள் நால்வரும் மாறுகிறார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான விசாரணை தொடங்குகிறது.
இங்கிருந்து நாவல் முழுவதுமே கொஞ்சம் அழுத்தமாக நகரக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக உள்ளது. பத்துக்குப் பத்து அறையில் இவர்கள் படும் அவஸ்தைகள், ஒரேயொரு வேளை மட்டுமே கிடைக்கக்கூடிய கேவலமான உணவு, ஏற்கனவே அங்கு தங்கியிருக்கும் அனுபவஸ்தர்கள் பட்ட, பட்டுகொண்டிருக்கும் அவஸ்தை, அவர்கள் உதிர்க்கும் அனுபவ மொழிகள் என நாம் அறிந்திராத ஒரு இருட்டு உலகம் நம்முன் விரிகிறது. இவர்களுக்காக பேசி அழைத்துச் செல்லவும் யாருமற்ற நரகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் இந்த நால்வரும். தங்கள் நிலைமை இப்படி ஆனதற்காக நெல்சன் மெது கொலைவெறி கொள்கிறான் ரவி. வெளியில் வந்தால் கொல்லாமல் விடபோவதில்லை என சபதம் எடுக்கிறான். அதற்கு முதலில் வெளியில் செல்ல வேண்டுமே?
கையில் லத்தி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வருகிறவர்கள் போறவர்கள் எல்லாம் அடிக்கிறார்கள். நாளாக நாளாக சிதரவதையின் வீரியம் கூடுகிறது. குற்றத்தைக் ஒப்புக்கொள்ளும்படி தினமும் சித்தரவதை நடக்கிறது. கயிற்றில் கால்களைக் காட்டி சிலமணி நேரங்களுக்கு பாதத்தில் மட்டும் அடிக்கிறார்கள். அதன்மூலம் இவர்கள் அடையும் வலி, வேதனை, அவஸ்தை என இவை அனைத்தையும் நாம் உணரத் தொடங்கம்போது உடல் நடுங்குகிறது. கனவிலும் இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என மனம் தன் போக்கில் பிராத்திக்கத் தொடங்குகிறது.
முடிவே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகு முடிவு காண்பதற்காக லாக்கபினுள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கிறார்கள். உடன் இருக்கும் அனுபவஸ்தர்கள் வேண்டாமென எச்சரித்த போதும் குமாரின் உந்துதலில் நால்வரும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க, இதில் கடுப்பான காவல் குமாரை மட்டும் அதே லாக்கப்பில் வைத்துவிட்டு மற்ற மூவரையும் வேறொரு காவல் நிலையத்திற்கு மாற்றுகிறது. மேலும் இதற்கெல்லாம் காரணியான குமாருக்குக் கொடுக்ககூடிய சித்ரவதைகளின் அளவு எல்லை மீறுகிறது.
உடலின் ஒரே பகுதியில் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தால், ரத்தம் கட்டி, சீழ் பிடித்து, அப்பகுதி மட்டும் அழுகி கேட்டுப் போய்விடுமாம். இது போக உள்ளுக்குள் ஆங்காங்கு உடைந்து போகும் எலும்புகள் ஏற்படுத்தக்கூடிய வலி தனி. எவ்வளவு அடி வாங்கினாலும், ஏன் அடி வாங்கி செத்தே போனாலும் செய்யாத குற்றத்தை மட்டும் செய்தேன் என ஒத்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறான் குமார். இப்படியே சென்று கொண்டிருக்கும் இவர்களின் நிலை கடைசியில் என்னதான் ஆனது என்பதுதான் மீதி கதை.
இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம், கதைசொல்லியான குமார்தான் நாவலாசிரியர் சந்திரகுமார் என நாவலின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் பின்குறிப்பு மூலம் தெரியவரும்போது மேலும் அதிர்ச்சியாக இருக்கிறது. மனிதாபினம் என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் இந்த லாக்கப் பல அதிர்ச்சிகரமான உணமைகளை உரக்கப் பேசுகிறது.
வெற்றிமாறன் விசாரணை என்னும் திரைப்படத்தை இயக்காமல் இருந்திருந்தால் இந்த நாவல் குறித்து நான் பேசியிருப்பேனா தெரியவில்லை. ஏன் அறிந்திருப்பேனா என்பது கூட சந்தேகமே. பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள் யாருமே இலக்கியத்தில் சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் வெற்றிமாறனின் இலக்கிய ரசனை என்பது பிரமிக்கத்தக்கது. உலகபுகழ் பெற்ற நாவலான ஓநாயின் குலச்சின்னம் நாவலை தமிழ்மொழி பெயர்ப்பதர்காகவே அதிர்வு என்னும் பதிப்பகம் ஆரம்பித்தவர். தற்கால கலைச்சூழலில் 'மொக்கையா கதை எழுதி படம் எடுத்தாலும் எடுப்பனே தவிர, நல்லதொரு நாவலை, படைப்பை படம் ஆக்குவதற்கு இம்மியும் முனைய மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வலம்வருகிறார்கள் திருவாளர் இயக்குனர்கள். இவர்களுக்கு மத்தியில் வெற்றிமாறனும், சமுத்திரக்கனியும் இலக்கிய நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னணியில் கதைகளம் அமைத்துக் கொண்டிருப்பது வரவேற்கப்பட விஷயம்.
Subscribe to:
Posts (Atom)




