Sunday, March 9, 2014

தம்பதிகள் படிக்க தரமான நூல்!

ஆண்கள் செவ்வாய்; பெண்கள் வெள்ளி!
- ரா.கி.ரங்கராஜன் -


புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்ற இரண்டு மந்திரச் சொற்கள் மனதில் நுழையாதபட்சத்தில் உறவுகளில் சிக்கல் வருகிறது. புரிந்து கொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக் கூடிய உரசல்கள் ஒழிந்து விடும். தனக்கு அடங்கியவளாக மனைவி இருக்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பதும், தன் பேச்சைக் கேட்டு நடப்பவனாக கணவன் இருக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பதும் மிகத் தவறான போக்கு என்பதை சுமார் 282 பக்கங்களில் விரிவாக எடுத்துக் கூறிய ஆங்கில நூல் Men Are from Mars, Women Are from Venus என்பது. இதை எழுதியவர் ஜான் க்ரே (John Gray) என்கிற அமெரிக்க எழுத்தாளர். 50 மில்லியன் காப்பிகளுக்கும் மேலாக விற்ற சாதனைப் புத்தகம் அது.


அந்த நூலின் முக்கிய அம்சங்களை மூலத்தின் ஜீவன் கெடாமல் தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாக 88 பக்கங்களில் ‘ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி' என்கிற நூலாக வழங்கியிருக்கிறார் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்! பிரபல ‘குமுதம்' வாரஇதழின் முக்கியத் தூணாக பல்லாண்டுகள் ஜொலித்த ரா.கி.ர.வுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆங்கில நூல்களைத் தமிழில் அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் தமிழுக்கு ஏற்ப அழகுற மொழிபெயர்ப்பதில் வல்லவர் அவர் என்பதால் இந்த நூலைப் படித்தாலும் வேற்றுமொழி புத்தகம் படிக்கும் உணர்வே உங்களிடம் எழாது.


செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப் வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள். அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக் கிரகத்தை அடைந்தார்கள். அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது; அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப் பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது. செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும் சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்துவிட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும், வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.

இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம் கணவன் மனைவி உறவின் கூறுகளை விரிவாக அலசுகிறது. சண்டை ஏன் வருகிறது என்பதற்கான காரணங்கள், மன்னிப்புக் கேட்டலின் மகத்துவம், மனைவியின் பிரியத்தைக் கணவன் சம்பாதித்துக் கொள்ள சுலபமான 40 வழிமுறைகள், மனைவி கோபமாக இருந்தால் (என்ன காரணத்துக்காக கோபம் வருகிறது என்கிற அலசலுடன்) எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்கிற அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை விரிவாக அலசும் இந்நூல் இறுதியில் கணவன் மனைவி இருவருக்குமான அறிவுரைகளைத் தந்து, புரிந்து கொள்ளும் வாழ்வின் தத்துவத்தை படிப்பவருக்குள் ஆழமாக இறக்குகிறது. (எவ்ளோ பெரிய வாக்கியம்டா சாமீ!)


அவள் கோபப்படுகிறாள் என்பதால் நானும கோபப்படுவது என்ற பழக்கத்தை மாற்றிக் கொண்டேன். மாறாக, எதனால் அவளுக்குக் கோபம் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றேன். எனக்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை வெளிப்படுத்தினேன். அவள் என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டு கோபப்பட்டிருந்தால்கூட ‘ஸாரி’ சொன்னேன். ஆண்களைப் பொறுத்தமட்டில் ‘ஸாரி’ என்று சொன்னால் ஏதோ தவறு செய்து விட்டதை ஒப்புக் கொள்வது போலவும், அதற்காக மன்னிப்புக் கேட்பது போலவும் எண்ணுகிறார்கள். பெண்கள் அப்படி அல்ல. ‘ஸாரி’ என்று சொன்னால் உங்கள் மீது எனக்கு கொள்ளைப் பிரியம் என்பதை அப்படி மனப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார்கள். தப்புப் பண்ணிவிட்டு மன்னிப்புக் கேட்பதாக நினைப்பதில்லை. இதைப் படிக்கும் ஆண்கள் அடுத்த முறை வாக்குவாதம் ஏற்படும் போது ‘ஸாரி’ என்று சொல்லிப் பாருங்கள். அற்புதங்கள் விளையும்!

இது ஒரு ஸாம்பிள்தான்! புத்தகம் முழுவதும் கோர்வையாக கொட்டிக் கிடக்கும் கருத்துக்கள் ஒவ்வொரு கணவனும், ஒவ்வொரு மனைவியும் படித்தறிய வேண்டியவை. புதுமணத் தம்பதிகளுக்கு பரிசாக புத்தகங்களைத் தரும பழக்கம் உங்களுக்கு உண்டு எனில் சென்னை தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெருவான நானா தெருவில் 10ம் இலக்கத்தில் இருக்கும் நர்மதா பதிப்பகம் 35 ரூபாய்க்கு வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்பது என் பலமான சிபாரிசு!

15 comments:

  1. இன்றைய புதுமணத் தம்பதிகளுக்கு தேவையான புத்தகம் தான்...

    ReplyDelete
  2. மொழிபெயர்ப்பு நூலின் சுவையை சிறிதும் குறைக்கவில்லை..அருமையான புத்தகம்.. ஆனா இடையில் ரொம்ப அட்வைஸ் பண்ற மாதிரி போறது இந்த ஜெனரேஷனுக்கு ஒத்து வருமான்னு தெரியல..

    ReplyDelete
  3. கலக்கல் கிராபிக்ஸ் வாத்தியாரே!!

    ReplyDelete
  4. அசல் புத்தகத்தையும் படித்திருக்கிறேன். ராகிர -வின் புத்தகத்தையும் படித்தேன் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம் இது. அசல் புத்தகத்தின் சுவாரஸ்யம் துளிக்கூட குறையாமல் மொழி பெயர்த்திருப்பார், ராகிர.
    இவரது பட்டாம்பூச்சியும் அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  5. ஆண்களின் sorryக்கு புது அர்த்தம்

    ReplyDelete
  6. அருமையான விமரிசனம். ரா.கி.ர. வின் பல புத்தகங்களைப் பற்றித் தெரிந்திருந்தும் இது குறித்து இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. குறைந்த விலையில் நிறைந்த அறிவுரை. பரவாயில்லையே...

    ReplyDelete
  8. புத்தக அறிமுகம் நன்று! புத்தகச்சந்தையில் மிஸ் செய்துட்டேனே! சென்னை வரும் போது பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்..

    ReplyDelete
  10. *
    வருங்கால கணவன் + மனைவியும்
    இக்கால தம்பதிகளும் படிக்க வேண்டும் அவசியம்!
    சிறந்த அறிமுகம்!!!

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம் வாத்தியாரே......

    ReplyDelete
  12. இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கும் போலையே ... குறித்துக் கொள்கிறேன் வாத்தியார் அவர்களே ...

    ReplyDelete
  13. மலேசியாவில் வசிக்கும் நான் இப்புதகத்தைப் பெறுவது எப்படி?

    ReplyDelete
  14. பூமியிலுள்ள ஆண்களும், பெண்களும் செவ்வாயிலிருந்தும் வெள்ளியிலிருந்தும் வந்தவர்கள் என்கிற உண்மையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ... ஹஹா ..ஹஹா ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!