Wednesday, April 30, 2014

சித்ராலயா கோபுவின் “ஞாபகம் வருதே”



ஸ்ரீதர். சடகோபன். ரங்கநாதன் என்று செங்கல்பட்டில் மூன்று நண்பர்கள். இன்று வயது எழுபதைக் கடந்துவிட்ட மூவரும் பள்ளிக் காலங்களில் இருந்து நாளது வரை இணைபிரியாத நெருக்கமான நண்பர்க்ள். இவர்களில் ஸ்ரீதர் சினிமாவில் இயக்குனராகப் பரிமளித்து விதவிதமான சப்ஜெக்ட்களில் படங்களை எழுதி இயக்கி, கதை சொல்லும் உத்தி, கேமரா கோணங்கள் ஆகியவற்றால் தமிழ் சினிமாவுக்குப் புத்துயிர் ஊட்டியவர். பல மறக்க முடியாத வெற்றிப் படங்களைத் தந்தவர். சடகோபன் என்பவரை ‘சித்ராலயா கோபு’ என்றால் சுலபமாகப் புரிந்து கொள்வீர்கள். ஸ்ரீதர்-கோபு இணைந்து அளித்த நகைச்சுவைத் திரைப்படங்கள் காலத்தை வென்ற நிற்பவை. மூன்றாமவரை பி.எஸ்.ரங்கநாதன் என்று சொல்வதை விட அகஸ்தியன், கடுகு என்று சொன்னால் சுலபமாகப் புரிந்து கொள்வீர்கள். எண்ணற்ற நகைச்சுவைக் கதைகளையும், நகைச்சுவை அல்லாத கதைகளையும் படைத்து இப்போதைய எழுபது ப்ளஸ் வயதிலும் ப்ளாகில் எழுதிக் கொண்டிருக்கும் உற்சாக இளைஞர்.

கடுகு ஸார் டில்லியில் வேலை கிடைத்துச் சென்று பிஸியான எழுத்தாளராகி இருந்த சமயத்தில் கோபு நண்பருடனேயே திரைப்படப் பணியாற்றினார், ஸ்ரீதரின் படங்கள் தவிர தனியாக பல படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வெற்றி. ஒன்றிரண்டு தோல்விப் படங்களை இயக்கியும் இருக்கிறார் சித்ராலயா கோபு. சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீதர் மறைவிற்குப் பின். தான் ஸ்ரீதருட்ன் இணைந்து பணி புரிந்த அனுபவங்களை ‘இயககுநர் ஸ்ரீத்ர் நினைவலைகள் ஞாபகம் வருதே’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார். ஸ்ரீதரின் திரையுலக வாழ்க்கையுடன் அவரின் சொந்த வாழ்க்கையையும் அருகில் இருந்து கவனித்த இந்த நண்பர் அவற்றை விவரித்திருக்கும் நினைவலைகளைப் படிக்கையில் தெரியாத பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

••• ‘‘சிலோனிலிருந்து ஒரு பையன் வந்திருக்கிறான். திருச்சியைச் சேர்ந்த பையன்தான்” என்று ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பையன்’ யாரென்று தெரியுமா உங்களுக்கு..? ••• தயாரிப்பாளர் கோவை செழியன் கோவையிலிருந்து விமானத்தில வந்தபோது பார்த்த ஒரு அழகான ஏர்ஹோஸ்டஸைப் பற்றி ஸ்ரீதரிடம் கூற... ஸ்ரீதரால் பிரபல நடிகையான அவர் யார் தெரியுமா...? ••• ஒருநாள படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த பத்மினிக்கு ஸ்ரீதர் தந்த தண்டனை என்ன தெரியுமா..? ••• வெண்ணிற ஆடை படத்தில் நிர்மலா நடித்த கேரக்டரில் நடித்திருக்க வேண்டிய ஹேமமாலினி ஏன் நீக்கப்பட்டார்... தெரியுமா உங்களுக்கு..? - இவையும் இன்னும் பல சுவாரஸ்யங்களும் இந்த அனுபவப் புதையலுக்குள் குவிந்து கிடக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று :

டுத்த படம் சஸ்பென்ஸ் கதை, அதுவும் கலரில் என்றதும் யூனிடடே பரபரப்பானது. வழக்கம்போல் ஸ்ரீதர் கதையெல்லாம் சொல்லாமலே ஒரு பாடலைப் பதிவு செய்து படத்தைத் துவக்கி விட்டார். வின்சென்ட் - சுந்தரத்துக்கு இது முதல் கலர்ப்படம். கலர் கலர் செலஃபோன் பேப்பர்களை லைட்டுகளுக்கு அலங்காரம் செய்யவே நேரம் போதவில்லை. எம்.எஸ்.வி. கோஷ்டியில் வயலின் வாசித்த ஹென்றி டேனியல் என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்த முடிவு செய்து அவரை வைத்து ஒரு காட்சியையும் எடுத்துவிட்டார் ஸ்ரீதர். திடீரென்ற என்ன தோன்றியதோ... ஸ்ரீதர் என்னை அழைத்து, “இப்பொழுது எடுத்ததை எல்லாம் மறந்து விடுவோம், வேறு கதை எடுப்போம் என்றார். நாங்கள் யாருமே ‘ஏன், என்ன’ என்று கேட்கவில்லை, அதன் பிறகு உருவானதுதான் ‘காதலிக்க நேரமில்லை’.

“ஏன் ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் எடுக்கக் கூடாது?” என்று ஸ்ரீதரிடம் நான் கேட்டேன். “கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள் போன்ற உருக்கமான கதைகளைக் கொடுத்தவன் நகைச்சுவைக் கதை எழுதி டைரக்ட் செய்தால் ரசிகர்கள் விரும்புவார்களா?” என்றார் ஸ்ரீதர், “உன் கைவசம் ரொமான்ஸ் இருக்கிறது, காதல் காட்சி எடுப்பதில் நீ மன்னனாயிற்றே... காதலையும் நகைச்சுவையையும் வைத்து ஒரு கதை செய்தால் போகிறது” என்றேன். ஸ்ரீதர் உடனே மடமடவென்று கதாநாயகன் நாயகி காதல் செய்யும் ஆரம்பக் காட்சிகளை கூறிக் கொண்டு வந்தார், அதில் கதாநாயகியின் தந்தையிடம் வேலை போனவுடன் அவர் வீட்டு எதிரிலேயே கதாநாயகன் போராட்டம் செய்யும் காட்சிகளை விளக்கினார், உடனே நான். “அந்த முதலாளியின் பையனை ஒரு சினிமா பைத்தியமாக நாம் சித்தரித்தால், அவன் தன் பணக்காரத் தந்தையிடம் பணம் கேட்பதைப் போல நிறைய காட்சிகளை வேடிக்கையாக வைக்கலாம்” என்றேன்.

தினமும் சென்னை மெரீனா பீச்சில் டிஸ்கஷன். கதை மளமளவென்று வளர்ந்தது. ஒருநாள் டிஸ்கஷன் முடிந்து வீடு திரும்பும் போது, “என் ஸ்ரீதர்... அப்பா வேடத்தில் நண்பன் நடிக்கும் போது நண்பனின் அப்பாவே அங்கு எதேச்சையாக வந்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன். ஸ்ரீதருக்கு அந்தத் திருப்பம் ரொம்பவும் பிடித்துப் போயிற்று. “திருப்பு காரை” என்றார். மறுபடியும் பீச்சுக்குத் திரும்பினோம், விட்ட இடத்திலிருந்து பேசினோம், வேகம் என்றால் அப்படி ஒரு வேகம், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் முழுக் கதையும் அனறே ரெடி. வீட்டுக்கு வந்து கதையின் காட்சிகளை ஒரு வரியில் வரிசைப்படுத்தி யூனிட் நண்பர்களுக்கு கதையை விவரித்துச் சொன்னபோது அவர்கள் கதையை மிகவும் ரசித்தனர்.


ப்படித் துவங்கி ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் சுவாரஸ்யங்களை அவர் விவரிப்பதைப் படிக்கையில் மனதில் மகிழ்வு நிறைகிறது. ஸ்ரீதருடன் பணியாற்றிய ஒவ்வொரு படங்களைப் பற்றியும்,. தானே எழுதி இயக்கிய படங்களைப் பற்றியும் சித்ராலயா கோபு சொல்லிக் கொண்டே வர...  மொத்தப் பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க முடிந்தது. எத்தனையெத்தனை சுவாரஸ்யங்கள்..! உங்களுக்கு (பழைய) தமிழ் சினிமா பிடிக்கும் என்றாலும் ஸ்ரீதரை ரசிப்பீர்கள் என்றாலும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தில் எனக்குப் பெரிய குறை என்னவென்றால்... லேமினேட்கூட செய்யாத சாதாரண அட்டைப்படம், நல்ல பேப்பர் இல்லாமல் நியூஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்டுள்ள 192 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்திற்கு 150 ரூபாய் விலை வைத்திருப்பது மிகமிக அநியாயமாகப் பட்டது. (நான் இதை ஒரு பழைய புத்தகக் கடையில் பாதி விலைக்குத்தான் வாங்கினேன் என்ற ரகசியம் நமக்குள் இருக்கட்டும்!) வெளியிட்டிருப்பவர்கள் : ப.எண்.151, பு.எண்.306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-10ல் இருக்கும் குமுதம் பு(து)த்தகம் பதிப்பகத்தினர். (போன் : 26426124/45919141 / puduthagam#kumudam.com) இங்கே வாங்கிப் படித்தாலும் சரி... இல்லை என்போல் வாங்கிப் படித்தாலும் சரி... சுவாரஸ்யமான இந்தப் புத்தகம் தவறவிடக் கூடாத புத்தகம்தான்.

28 comments:

  1. ••• ‘‘சிலோனிலிருந்து ஒரு பையன் வந்திருக்கிறான். திருச்சியைச் சேர்ந்த பையன்தான்” என்று ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பையன்’ யாரென்று தெரியுமா உங்களுக்கு..? •••

    ஹிஹிஹி ரவிச்சந்திரன்.


    தயாரிப்பாளர் கோவை செழியன் கோவையிலிருந்து விமானத்தில வந்தபோது பார்த்த ஒரு அழகான ஏர்ஹோஸ்டஸைப் பற்றி ஸ்ரீதரிடம் கூற... ஸ்ரீதரால் பிரபல நடிகையான அவர் யார் தெரியுமா...? ••• //

    வசுந்தரா என்ற சொந்தப் பெயர் கொண்ட காஞ்சனா

    ஒருநாள படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த பத்மினிக்கு ஸ்ரீதர் தந்த தண்டனை என்ன தெரியுமா..? ••• //

    பத்மினி நடிச்ச ஶ்ரீதர் படம்னா பழைய படமோ?? என்ன படம் அது?

    வெண்ணிற ஆடை படத்தில் நிர்மலா நடித்த கேரக்டரில் நடித்திருக்க வேண்டிய ஹேமமாலினி ஏன் நீக்கப்பட்டார்... தெரியுமா உங்களுக்கு..? // ஹேமமாலினி ஒல்லியாக இருந்தார் என்றும் காமிராவுக்கு ஏற்ற முகம் இல்லைனும் சொன்னதாய்க் கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்! புத்தகத்துல படிக்க வேண்டிய எல்லா கேள்விகளுக்கும் இங்கயே விடை சொல்லிட்டிஙகளே... பத்மினி நடிச்ச ஸ்ரீதர் படம் அமரதீபம். ஹேமமாலினி மேட்டர் இன்னும் விரிவா சுவாரஸ்யமா சொல்லிருக்கார் கோபு.

      Delete
  2. அநேகமா "சித்ராலயா" பானரில் வந்த எல்லாப் படங்களும் பார்த்திருப்பேன். மதுரையில் மேலாவணி மூல வீதியில் நாங்க இருந்த ஏழாம் நம்பர் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டில் கீழ்ப்பகுதியில் தான் சித்ராலயா படக்கம்பெனியின் மதுரைக் கிளை இருந்தது. ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ஜெயலலிதா, வெ.ஆ.நிர்மலா, வி.எஸ். ராகவன், ஶ்ரீதர்-தேவசேனா என எல்லாரையும் பார்த்திருக்கேன். ரவிச்சந்திரனிடம் ஆட்டோகிராஃப் கூட வாங்கி இருக்கேன். காஞ்சனாவுக்கு மாவடு ஊறுகாய் எங்க வீட்டில் இருந்து போடப்பட்டு சென்னைக்குக் காரில் எடுத்துச் செல்வாங்க. :)))))

    ReplyDelete
    Replies
    1. இத்தனை ஸ்டாரை பாத்திருக்கீங்கன்னா... பெருமூச்சுதான் என்னிடம். நானும் ஸ்ரீதரின் படங்களுக்கு ரசிகன்றதால சித்ராலயா பேனரின் எல்லாப் படங்களும் பாத்திருக்கேன். அதுசரி... நீங்களும் மதுரைதானா...? வெரி க்ளாட்...!

      Delete
    2. ஹிஹிஹி, சிவந்த மண் படப்பிடிப்பின் போது சிவாஜி, விகேராமசாமி, நம்பியார் ஆகியோரையும் பார்த்திருக்கேனே!

      Delete
  3. எனக்கு உங்கள்போல் வாங்கிப் படிக்க ஆசை! கட்டாயம் படிக்க வேண்டும்! ஏற்ஹோஸ்டஸ் காஞ்சனா என்று தெரியும்! சிலோனிலிருந்து ஒரு பையன்... ரவிச்சந்திரன்? ஹேமாமாலினிக்கு முகவெட்டு சரியில்லை என்று சொன்னதாக நினைவு! அப்புறம் இவரே வைரநெஞ்சம் படத்துக்காகவோ வேறு எதற்காகவோ கேட்டபோது அவரிடம் டேட்ஸ் இல்லை என்றும் நினைவு!

    ReplyDelete
    Replies
    1. அந்த ப.பு.கடையில இன்னொரு காப்பி இருந்ததாக நினைவு. உங்களுக்காக வாங்கிடறேன்.

      Delete
  4. கீதா மேடம்... ஏகப்பட்ட விவரங்கள் கொடுத்திருக்கிறீர்களே... ரவிச்சந்த்ரனிடம் ஆட்டோக்ராப்பா? வீட்டுக்கு எதிர்லதான் சித்ராலயா ஆபீஸா? அட...!

    ரவிச்சந்திரன் எங்கள் மாமாவின் வகுப்புத் தோழரின் வகுப்புத் தோழர் என்பதால், மாமாவுக்கும் நண்பர். ஒரு காலத்தில் நாகப்பட்டினத்தில் மாமாவுடன் கபடி விளையாடியிருக்கிறார் என்று முன்னர் சொல்லியிருக்கிறார். (அதுவும் நடிகரான பிறகு)

    ReplyDelete
    Replies
    1. திரையில் கூட நிறைய நடிகைகளுடன் டூயட் என்கிற பேரில் அதை விளையாடி இருக்கிறார். ஹி... ஹி.... அப்புறம்... அந்த வைரநெஞ்சம் பட ஹேமமாலினி கால்ஷீட் விவகாரம்... கரெக்ட்! நல்ல ஞாபகசக்தி ஸ்ரீ உமக்கு.

      Delete
  5. பல தகவல்கள் கிடைக்கும்போல....

    புத்தக அறிமுகத்திற்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  6. Ravichanthiran came from Maleya sorry malasia. This must be some other person.

    ReplyDelete
    Replies
    1. இல்லை வல்லி, இந்த சினிமாவில் நடிக்க வரச்சே ஶ்ரீலங்காவில் தான் இருந்தார். அங்கிருந்து திருச்சிக்கு வந்திருந்தார் சட்டம் படிக்கனு நினைக்கிறேன். எதுக்கும் புத்தகம் படிச்ச கணேஷ் சொல்லட்டுமே! :)

      Delete
    2. அவர் சிலோனிலிருந்து வந்து வாய்ப்புக் கேட்ட திருச்சிப் பையன் என்றுதான் புத்தகம் சொல்கிறது. ஒருவேளை மலேசியாவில் இருந்திருப்பாரோ என்னவோ... தெரியலை வல்லிம்மா.

      Delete
    3. சிலோன் என்று தான் நானும் கேள்விப் பட்டிருக்கேன். :))))

      Delete
    4. திருச்சி சொந்த ஊர் என்பதால்தான் நானும் ரவிச்சந்திரன் என்று யூகித்தேன். மேலும் அவர் அறிமுகங்களில் அவர் ஒருத்தர் தான் வெளியூர்! ஸ்ரீக்காந்த் சென்னைதான். அமெரிக்க தூதரகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சிலோனிலிருந்து வந்தவர் தூத்துக்குடி சொந்த ஊர் ஜோசப் எனப்படும் சந்திரபாபு!

      Delete
  7. சுவாரஸ்யமான புத்தகமாத்தான் இருக்கு! ஆனா விலை பயமுறுத்துது! நானும் பழைய புக்ஸ்டால்களை தேடிப்பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. அந்த கால படங்களில் ஸ்டைலிஷா டிரஸ் பண்ணி வந்தாலே ஸ்ரீதர் படமா ன்னு கேட்பேன். பெரும்பாலும் கரெக்டா இருக்கும்.. இவரோட இந்த புத்தகம் ரொம்ப சுவாரஸ்யமான தகவல்களை கொண்டிருக்கும் போலேயே.. படிக்கணும் படிக்கணும்..

    ReplyDelete
    Replies
    1. கோவை ஆவி, அம்புட்டு வயசாச்சு உங்களுக்கு? :))))

      Delete
    2. ஐயயோ, இல்ல.. அந்த படமெல்லாம் இப்போ தான் பார்த்தேன்..

      Delete
  9. பத்மினிக்கு தண்டனை.. சிவாஜியை டேன்ஸ் ஆடச் சொல்லி பார்க்க வைத்தது..?

    ReplyDelete
    Replies
    1. ‘ஹா... ஹா... ஹா... இப்போ யோசிச்சா நீங்க சொல்றதை விட பெரிய தண்டனை எதும் இருக்க முடியாதுன்னு தோணுது அப்பா ஸார். ஆனா ‘மீண்ட சொர்க்கம்’ ஷூட்டிங்குக்கு லேட்டா வ்ந்த பத்மினிக்கு முன்னால அவரை வெச்சு ஷாட் எதுவும் எடுக்காம தன் சகாக்களோட சேர்ந்து கோலி விளையாடினாராம் ஸ்ரீதர்.

      Delete
    2. முக்கியமானது மறந்து போச்சே. இந்த கோபுவோட பிள்ளை தான் "காலச்சக்கரம் நரசிம்மா" என்று கேள்விப் பட்டேனே! உண்மையா????? இன்னமும் ஒரு புத்தகம் கூடப் படிக்கவில்லை. ஆனால் என் தம்பி சொன்னார். அவர் எல்லாமும் படிச்சதோட எல்லாத்தோட சஸ்பென்ஸையும் என் கிட்டே வேணும்னே சொன்னார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அ.லெ.

      Delete
    3. ஆமாம். இது தெரியாதா... இன்னொரு விஷயமும் சொல்றேன். இவர் மனைவி கமலா சடகோபன் கூட எழுத்தாளர்தான். :))))

      Delete
    4. "கதவு" புகழ் கமலா சடகோபன் தானே! நல்லாவே தெரியும். ஆனால் கமலா சடகோபன் நரசிம்மாவின் அம்மா இல்லையோ? :))))))

      Delete
    5. ஐயோ... நான்தான் சொல்றதைச் சரியாச் சொல்லலையா... சித்ராலயா கோபுவின் மனைவி என்று படிக்கவும்! :)))

      Delete
  10. புத்தக அறிமுகத்திற்கு நன்றி ! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!