Wednesday, May 7, 2014

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் (நாவல்)
தனக்கென்று ஒரு நடையை தேர்ந்தெடுத்து அதன்படியே எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவர் திரு. கண்மணி குணசேகரன். விருத்தாசலம், அதனை சுற்றி இருக்கும் கிராமங்களின் மண் மனம் மாறாமல் நிகழ்வுகளை பதிவு செய்து வரும் வலிமையான மனிதர். தான் காணும் நிகழ்வினை அனைவரும் இரசிக்கும் படி, படைப்பாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல, அதை மிக நேர்த்தியாக செய்து வருகிறார் திரு. கண்மணி. இவரின் பெரிய பலமே ஆடம்பரமின்றி இயல்பான மக்களின் மொழியில் எழுதுவது. 

 அரசு போக்குவரத்து கழக தற்காலிக ஊழியர்கள் மூன்று பேரின்  வாழ்வியலை வலியோடு வலிமையாக பேசுகிறது நெடுஞ்சாலை நாவல். பணிமனையில் நடைபெறும் அன்றாட வேலைகளின் அறிமுகத்தோடு தொடங்குகிறது. முதலில் கொஞ்சம் சீரற்ற வேகத்தில் அங்குமிங்கும் அலைபாய்வதாய் தெரியும் பயணம் சில பக்கங்களிலே தனது சீரான நடையை தொட்டு மின்னல் வேகத்தில் நகர்த்த தொடங்கிவிடுகிறார் திரு. கண்மணி குணசேகரன்.

ஏழை முத்து, தமிழரசன், ஐய்யனார் இந்த மூன்று இளைஞர்களை பிரதானப்படுத்தினாலும் படைப்பில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் பதிந்து விடும் அளவுக்கு பாத்திர படைப்பில் நேர்த்தி இருக்கிறது. உதாரணத்துக்கு "ஏழையின் அப்பா", சென்னை பயணத்தில் வரும் இளம்பெண்ணும் அவரின் போதை மிலிட்டரி அப்பாவும். அப்புறம் குட்டி பையனின் சேட்டைகள்! சில நுணுக்கமான விசயங்களையும் கூட அவ்வளவு அழகாக சொல்வது பெரும் வியப்பு!

குடும்பம், காதல், மோகம், நட்பு, பணியிடச் சூழல், கோபம், இயலாமையின் பரிதவிப்பு இப்படி மனிதர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் அதே நேரத்தில் மண்வாசனையையும் சொல்ல தவறவில்லை. அனைத்து இரசனைகளும் கொண்ட கலவையான படைப்பு ... பேருந்து, பேருந்து நிலைய நிகழ்வுகள், பயணிகளின் சேட்டைகள், பேருந்தை பராமரிக்கும் திறமை, ஊழியர்களின் மனநிலை, அவர்களின் குடும்ப பிண்ணனி இவற்றை பேசும் இந்நாவலில் அறிந்து கொள்ள எண்ணற்ற விசயங்கள் பொதிந்து கிடக்கின்றது. எளிய எழுத்தை விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு தரமான நூல் இந்த "நெடுஞ்சாலை"

குண்டு குழி சாலைகளில் கடகடத்து ஓடும் பேருந்துகளை காண்கையில், வேர்வையில் நனைந்து உயிரை பிழிந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வணக்கம் போட வைக்கும் ஆற்றல் மிகுந்த புத்தகம். 

வெளியீடு : தமிழினி பதிப்பகம் 
நூலின் விலை : 290/-
டிஸ்கவரி புக் பேலஸில் வாங்க இங்கு கிளிக்கவும் ...

7 comments:

 1. நான் இவர் நூல்கள் எதுவும் படித்ததில்லை. பாலகுமாரன் ஆரம்பத்தில் இப்படித்தான் தனது நாவல் 'இரும்புக் குதிரைகளை' தன் அனுபவங்களோடு இணைத்து எழுதினார். வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அருமையான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. நல்ல அறிமுகம். இவரது புத்தகங்களில் ஒன்று படித்ததாய் நினைவு.......

  ReplyDelete
 4. படித்து பார்க்கிறேன் "அண்ணே"!

  ReplyDelete
 5. இவரின் சிறுகதைகளைப் படிக்கச் சொல்லி சிபாரிசித்து எனக்கு அன்பளித்தார் பிரதர் கோபால் கண்ணன். பாதி படித்திருக்கிறேன். அருமையான எழுத்து. நெடுங்கதையில் படித்ததில்லை. இப்ப... படிக்கணும்கற ஆசையக் கிளப்பிட்டியே அரசா...

  ReplyDelete
 6. நல்லதொரு விமர்சனப் பகிர்வு! இவரது நூல்கள் வாசித்ததில்லை! நலதொரு அறிமுகம்! மிக்க நன்றி!

  ReplyDelete
 7. நல்லதொரு பகிர்வு! நலதொரு அறிமுகம்! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!