Tuesday, September 30, 2014

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்




சில மாதங்களுக்கு முன் நண்பர்கள் குழாமுடன், டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்க , எஸ். ரா. அவர்கள் நடத்திய ஒரு நாள் இலக்கிய முகாமில் தான் ஜி. நா வை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எஸ். ரா சொன்ன துக்க விசாரணை சிறுகதை பற்றியே அன்றைய நாள் முழுவதும் என் சிந்தனைகள் சுழலத் தொடங்கின என்று சொன்னால் மிகையல்ல! சில வாரங்கள் கழித்து ஒரு மதிய வேளையில், காலச்சுவட்டின் நவீன தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசையான இந்த "டெர்லின் ஷர்ட்டை" வாங்கி வந்தேன்!

பதினேழு குறுங்கதைகளால் நிரம்பிய இப்புத்தகத்தில் அறிந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் பொதிந்துள்ளன. போகிற போக்கில் காட்சிகளை அறிமுகப்படுத்திச் செல்லும் வல்லமை கண்டு வியக்கும் அதே வேளையில் குறுங்கதைகளாக இருந்தாலும் ஒன்றை கூட முன்கூட்டியே யூகித்து விட முடியாத அளவிற்கு கதையும் அதன் திருப்பங்களும், முடிவும் இருப்பது ஆசிரியரின் எழுத்தாளுமையை பறைசாற்றுகிறது! 

பெரும்பாலான கதைகள் பாலியலை மையமாய் வைத்தே துவங்கி முடிகிறது, இருந்தும் அதிலிருக்கும் விரசமற்ற எழுத்து நடை வாசிப்பவர்களை நிச்சயம் முகம் சுழிக்க வைக்காது. பாலியலையும், அதைச் சார்ந்த எளிய மனிதர்களையும் மட்டுமே மையப் படுத்துகிறது இவரின் படைப்பு. அவர்களின் உணர்வுகளை நீங்களும் உணரலாம்!

"தீராக்குறை"யில் மரணப் படுக்கையிலிருக்கும் குடும்பத் தலைவனைப் பற்றிய சிந்தனைகளும், அந்த வீட்டின் சூழல்களையும் மிக கவனமாக பதிவு செய்திருப்பார். சூழலை விவரித்திருக்கும் முறைக்காகவே இரண்டு முறை வாசிக்கத் தோன்றும்!

"நான் புரிந்த நற்செயல்கள்" இந்தக் கதையில் எவ்வித சாயப்பூச்சுமின்றி உள்ளதை உள்ளபடி போட்டு உடைத்திருப்பார். அந்த துணிச்சல் வசிகரீக்க கூடியவை. எதிர்பாராத திருப்பம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்!

"பூர்வாசிரம"த்தில் வரும் ஒரு பெண்ணைப் பற்றிய வர்ணிப்பில் மனம் இலயித்து கிடக்கும். பாலியல் தொழில் புரியும் அம்மா, மகளை சுற்றி சுழலும் கதையில் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தேவையற்ற பீடிகைகளை தவிர்த்து நறுக்கென்று சொல்லியிருப்பார் ஆசிரியர் ஜி. நா. 

"துக்கவிசாரணை" இதுக்காகவே இந்த நூலை வாங்கிய என்னை துளியும் ஏமாற்றவில்லை. இந்த சிந்தனைக்கே ஆசிரியருக்கு பெரிய வணக்கம் வைக்க வேண்டும், என்ன நாம் வாழும் காலத்தில் இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டம். 

இறந்து போன பாலியல் தொழிலாளி வீட்டிற்கு துக்கம் விசாரிக்க செல்வதைப் பற்றி சொல்வது தான் துக்க விசாரணை என்னும் கதை. 

பலமும் - பலவீனமும்.

ஜி. நாகராஜனின் பலமென்று நான் வாசித்து உணர்ந்தது என்னவெனில் 

1) எளிதில் கதையின் முடிவை யூகிக்க முடியாது.

2) எளிய மனிதர்களின் வாழ்வியலை அவர்களின் உணர்வுகளோடு அப்படியே பதிவு செய்திருப்பது.

3) எழுதுவது பாலியல், எந்த இடத்திலும் விரசமில்லை.

4) இலக்கியத் திணிப்பில்லாமல் சாதரணமாக வந்து விழும் வார்த்தைகள்.

பலவீனம்:

1) சில இடங்களில் மறுமுறை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

2)  ஒரு கதைக்குள் பல கிளைக்கதைகளால் பிண்ணியிருப்பது.

3) புதிதாய் வாசிக்க துவங்கியிருக்கும் வாசகர்களை எளிதில் சலிப்படைய செய்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

பதிப்பகம் : காலச்சுவடு 
தொகுப்பாளர்: திரு. சுரேஷ்குமார் இந்திரஜித்.
மொத்த பக்கங்கள்: 152, விலை : 120/-


படித்துச் சொன்னது 
அரசன் 

6 comments:

  1. :) வணக்கம் தலைவரே ! கட்டாயம் வாசிக்க வேண்டும் , என தோன்றுகிறது. :)

    ReplyDelete
  2. அந்த 1 ,2,3,4 க்காக. வாவது

    ReplyDelete
  3. ஆக... பொறுமையாய் வாசித்தால் கிடைப்பது நல்ல முத்து என்கிறீர்கள் அரசன்.... வாசித்துப் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  4. பலம் பலவீனம் எல்லாம் அலசி அசத்துறீங்க... கண்டிப்பா படிக்கிறேன்..

    ReplyDelete
  5. நல்ல அலசல் அரசன்! வாசிக்க வேண்டும் என்று தூண்டுகின்றது தங்கள் விமர்சனம். பார்ப்போம்!

    ReplyDelete
  6. இந்த முறை வரும் போது ஆட்டையை போட்டுட வேண்டியதுதான்! ;)

    ReplyDelete

இது... உங்க ஏரியா!