Wednesday, May 14, 2014

சொர்க்கத் தீவு - சுஜாதா

'சொர்க்கத் தீவு', என் மனதைக் கவர்ந்த சுஜாதாவின் சயன்ஸ் பிக்ஷன் நாவல்கள் வரிசையில் 'என் இனிய இயந்திரா'விற்கு பின் நான் இரண்டாவதாக வைப்பது. அதே சமயம் சொர்க்கத் தீவு சுஜாதா எழுதிய முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.


திருக்கடம்பூர் சுந்தரவரதன் சீனிவாச அய்ங்கார் என்னும் அய்ங்கார் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் இருபத்து எட்டு வயதான திருமணம் ஆகாத இளைஞன். அவனது பணி அவன் கம்பெனிக்கு சொந்தமான ஒரு கம்ப்யூட்டரை பராமரிப்பது. அந்த கம்ப்யூட்டரை IBM மைன்ப்ரெம் போன்ற ஒரு நவீன கணினி. அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வது தான் இவன் வேலை. அமெரிக்காவிடம் இருந்து அவன் கம்பனி வாங்கிய அந்தக் கணினியை திறமையாக கையாள்வதில் இவனை விட்டால் வேறு எவரும் இல்லை. அந்தக் கணினியின் செயல்பாடுகளை அக்கு வேறு ஆணி வேராக அறிந்து வைத்திருந்தான். அந்தக் கம்ப்யூட்டரை உருவாக்கிய அமெரிக்கன் கூட இவன் அந்தக் கம்ப்யூட்டரை கையாளும் விதம் கண்டு பல சமயம் வியந்ததுண்டு.

அய்ங்கார் தனது தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த சமயம் லீலா என்னும் பெண் அவளது அண்ணனை தனது தங்கைக்கு பேச இவனை அணுகினாள். லீலாவின் அண்ணன் விமான பைலட்டாக பணி புரிவதாக அவள் சொல்ல, அவரைக் காண இருவரும் விமான நிலையம் செல்கின்றனர். அங்கு அய்ங்கார் தன்னை அறியாமல் ஒரு விமானத்தின் உள் தள்ளப்பட, அந்த விமானம் புறப்படுகிறது. அந்தப் பெண் லீலா தன்னை ஏமாற்றி கடத்திக் கொண்டுவந்ததை அய்ங்கர் அறியும் சமயம், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் எதோ ஒரு தீவில் தரையிறங்குகிறது.

'சொர்க்கத் தீவில்' இறங்கிய அய்ங்கார் முறையாக வரவேற்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து ஊருக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். செல்லும் வழியில் எங்கும் 'சத்யா' என்பவரின் படங்கள் இருப்பதைக் காண்கிறான். மேலும் அந்தத் தீவின் வாசிகள் அனைவரும் ஒரே வகையான புஷ்டியான உடல் கட்டுடன் இருபதைக் கண்டு வியக்கிறான். எதற்காக இங்கு தான் கொண்டுவரப்பட்டோம் என்ற கேள்வி அவனை வாட்டத் தொடங்குகிறது. அவனை சர்வ வசதிகள் பொருந்திய ஒரு அறையில் தங்கவைத்து விட்டு, விரைவில் சத்யா அவனை சந்திப்பார் என்று சொல்லி அவனை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த அதிகாரி விடை பெற்றுச்செல்கின்றார்.

சத்யாதான் அந்தத் தீவை இயக்கும் சர்வாதிகாரி என்றும், அந்தத் தீவில் 58 வயதைக் கடக்கும் பிரஜைகள் கொல்லப் படுகிறார்கள் என்ற செய்தியையும் அவன் அறிந்து கொள்கின்றான். மேலும் அந்தத் தீவில் இருக்கும் '2080' என்னும் கம்ப்யூட்டரை பழுது பார்க்க தான் அவன் கடத்திவரப்பட்டான் என்ற உண்மையும் அவனுக்கு புலப்படுகிறது. அந்தத் தீவின் வினோதங்கள் ஒவ்வொன்றையும் அவன் சத்யாவின் பார்வையில் இருந்து அறிகின்றான்.

அந்தத் தீவில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரு வகையான இயந்திரக் கட்டுப்பாட்டில் தான் வளர்க்கப் படுகின்றனர் என்றும் அவர்களுக்கு சில மருந்துகள் கொடுக்கப் பட்டு அவர்களது அடிப்படை மனித உணர்சிகள் கட்டுப்படுத்தப் பட்டு ஒரு வகையான அடிமைத்துவம் வாய்ந்த பிரஜைகளை உருவாக்கு கின்றனர். இவர்களுக்கு உணவு என்பது மாத்திரைகள் தான். அந்தத் தீவில் இருப்பவர்களுக்கு அம்மா, அப்பா, என்னுடையது, உன்னுடையது, காதல், காமம், வெறி, சமூக ஜாதி, கதை, கட்டுரை, நிஜம், பொய், போன்ற ஒன்றும் தெரியாது. அந்தத் தீவில் இருக்கும் மக்கள் அமைதி, சந்தோஷம், ஆண், பெண், விஞ்ஞானம், மனதில் மற்றும் உடலில் வலிமை கொண்ட பொம்மைகள் போல் இயக்கப் பட்டனர். ​

அந்தக் கம்ப்யூட்டரை அவன் சரி செய்து விட்டால் அவனை திருப்பி அனுப்பி விடுவதாக சத்யா வாக்களிக்க, இரவு பகல் பாராமல் அந்தக் கம்ப்யூட்டரை பழுது பார்க்கும் பணியில் அய்ங்கார் ஈடுபடுகிறான். இந்நிலையில் அவனை நந்தினி என்னும் பெண் சுய உணர்சிகளுடன் அணுகி அவனது காதலனை சந்திக்க அய்ங்காரை பணியும் பொழுது அவன் அதிர்ந்து போகின்றான். அந்தத் தீவின் சட்ட திட்டங்களை மீறி அவளது காதலன் 'கௌதமை' தனிமையில் சந்திப்பதில் இருந்து கதை வேகம் கொள்கின்றது. கௌதம் நந்தினி இருவரும் அந்தக் கம்ப்யூட்டர் பிழையால் தங்கள் தினசரி மருந்தை உண்ணமால் இருக்க அவர்களுக்கு மனித உணர்சிகள் தோன்றியிருப்பதை கௌதம் வாயிலாக அறிகின்றான்.

சத்யாவின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய அய்ங்காரை தன் பக்கம் சேர்ந்துகொண்டு, இந்தத் தீவை கட்டுபடுத்தும் 2080 கம்ப்யூட்டரை அழிக்குமாறு வேண்டுகிறான். நவீனத்துவம் கொண்டு தீவை கட்டுபடுத்தும் சத்யாவின் கண்ணில் மண்ணைத் தூவி அந்த கம்ப்யூட்டரை அழித்து அந்தத் தீவின் மக்களை அய்ங்கார் எப்படிக் காப்பாத்துகின்றான என்பது தான் மீதி கதை.

சுஜாதாவின் மற்ற நாவல்கள் போல் இல்லாமல் இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

காரணம் ஒன்று:

இந்தக் கதையின் மையம் 2080 என்னும் ஒரு கம்ப்யூட்டர்.

நான் எனது அலுவலகத்தில் இந்தக் கதையைப் பற்றி சொன்ன பொழுது எனக்கு கிடைத்த பதில் 'என்ன டமில் புக்ல மைன்ப்ரெமா 1!'.

ஆம் இன்று நான் வேலை செய்து கொண்டிருக்கும் மைன்ப்ரெம் கம்ப்யூட்டரை போன்ற ஆனால் அதை விடவும் நவீனத்துவும் வாய்ந்த ஒரு கம்ப்யூட்டரை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கற்பனை செய்த சுஜாதாவின் படைப்பாற்றலைப் பற்றி யாரால் வியக்காமல் இருக்க முடியும்.

காரணம் இரண்டு:

விறுவிறுப்பாக சென்ற கதையின் இறுதி பக்கங்களை படித்து விட்டு நான் எதிர்பார்த்த முடிவு ஏற்படாத விரக்தியில் இருந்த பொழுது, கடைசி சில வரிகள் என்னை மெய்சிலிர்க்கச் செய்தன. சுஜாதாவின் நுண்ணறிவிற்கு சிறந்த சான்றாக இந்தக் கதையின் முடிவு இருப்பதை கண்டு மகிழ்ந்தேன். சுவாரசியத்தை இழக்காமல் இருக்க வாசகர்கள் அந்தக் கடைசி பக்கங்களை காத்திருந்து படிப்பதே நலம்.

******************************************************************************************************
வெளியீடு : வீசா பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள் : 168

விலை : ரூ.  58     
******************************************************************************************************
காதலுடன் 
ரூபக்

10 comments:

 1. நீங்கள் கூட கடைசி வரிகளை இந்தப் பதிவில் சேர்க்காமல் இருந்திருக்கலாம்! படித்திருக்கிறேன். வைத்திருக்கிறேன்!!! சுவையான விமர்சனம்.

  ReplyDelete
 2. சுவாரசியம் குறையாத சுஜாதாவின் முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் விமர்சனம்.. விரைவில் வாங்கி படிக்கிறேன்..

  ReplyDelete
 3. அப்போதெல்லாம் தமிழில் விஞ்ஞானச் சிறுகதைகள் வந்ததுண்டு. நாவல் (சயன்ஸ் ஃபிக்ஷன்) என்ற வகையில் இதுதான் முதல் முயற்சி என்று நினைக்கிறேன். மிக வித்தியாசமான கதைக்களப் பின்னணியில் ஜெ. வரைந்த ஓவியங்களுடன் விறுவிறுப்பாகச் சென்ற கதை. தினமணி கதிரில் இதுவந்தபோது வாசகர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொண்டு விளக்கங்கள்கூடத் தந்தார் சுஜாதா. நுட்பமான கதையின் முடிவுதான் அதன் பலம். என்னிடமும் இருக்கிறது இது.

  ReplyDelete
 4. அந்த கம்ப்யூட்டரை IBM மைன்ப்ரெம் போன்ற ஒரு நவீன கணினி
  //அந்த காரெக்டருக்கும் உங்களுக்கும் எதோ ஒற்றுமை தெரியுதே??

  ReplyDelete
 5. இது போன்ற ஒரு கற்பனையான உலகம் அவரது பல சைன்ஸ் ஃப்க்‌ஷன்(??) கதைகளின் அடிப்படை. அய்ங்கார் என்ன ரஜினியா, விஜயா சண்டை போட்டு எல்லாரையும் காப்பாற்ற. சாஃப்ட்வேர் ஆசாமி, மூளையை பயன்படுத்திவிட்டான்.

  ReplyDelete
 6. முழு கதையும் சொல்லிருக்கலாம்ல ...இன்ட்ரஸ்ட்டாதான் இருக்கு நீங்க சொன்னத வைச்சி பார்க்கும் போது..

  ஆபிஸ்ல வேற கத சொல்லி .....சரிதான் .

  ReplyDelete
 7. படிக்கத்தூண்டும் விமர்சனம்! புத்தகவிலையும் கிடைக்குமிடத்தையும் சேர்த்து போட்டிருக்கலாமே! நன்றி!

  ReplyDelete
 8. நல்ல விமர்சனம் ரூபக். வாழ்த்துகள். முன்பே படித்திருக்கிறேன்.....

  ReplyDelete
 9. இன்னும் சுஜாதாவின் இந்த நாவலை படிக்கவில்லை. உங்களின் புத்தகவிமர்சனம் ,படிக்கும் ஆர்வத்தை என்னுள் விழைத்துள்ளது. சயின்ஸ்-பிக்ஷன் ஆர்வம் தரைகெட்டு ஓடும் ஆர்வக்கோளாறு என்னுள் அதிகம் இருப்பதால் , கண்டிப்பாக எனக்கு சரியான தீனியாய் இருக்கும் என்பதை உங்கள் விமர்சனம் உணர்த்தியுள்ளது . நன்றி அண்ணா , அறிமுகப்படுத்தியமைக்கு !!!

  ReplyDelete
 10. அந்த கடைசி பக்கத்தை காத்திருந்து படிக்கவேண்டுமா? சரி, அப்படியே செய்திடலாம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!