Wednesday, May 28, 2014

புரட்சியின் உச்சகட்டம் - வே.பத்மாவதி

இந்த நாவல் பற்றி ஆசிரியர் வே.பத்மாவதி ஒரு இடத்தில் சொல்கிறார், "ஒரு பெண் வளரும்போது அண்ணனையும் திருமணம் முடிந்தவுடன் கணவனையும் சார்ந்து வாழ்ந்தவள், ஆனால் இன்றைய சூழலில் யாரையும் சார்ந்து வாழாமல் தனியே வாழப் பழகிக்கொண்டாள். அந்த தனிமை எத்தனை ஆண்டுகள் தொடரலாம், பெண் புரட்சி என்று எதைப் புரிந்துகொண்டால் டைவர்ஸ் செய்வதையா, ஆணுக்குச் சரிசமமாக புகைபிடிப்பதையா, "Boyfriend Out of Town" என்று டி-ஷர்ட்டில் எழுதி உடை அணிவதையா? இன்னும் பல அலசல்கள். இது புரட்சியின் உச்சகட்டமா அல்லது விரக்தியின் உச்சகட்டமா என்பதற்கான விடைதான் இந்நாவல்".அர்ச்சிதா! டெல்லியில் தனியாக வாழும் ஒரு பணக்காரப்பெண். இன்னும் திருமணமாகவில்லை. அவளுக்கு திருமணத்தில் நம்பிக்கையும் இல்லை. காரணம், அவளது அம்மா, அப்பா. அர்ச்சிதாவைப் பெற்ற சில வருடங்களிலேயே விவாகரத்து செய்துகொண்டு தனித்தனியாக வேறு திருமணங்களும் செய்துவிட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள். இவளுடைய நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, மாதாமாதம் பணம் மட்டும் தவறாமல் அனுப்பிவிடுவார்கள். அர்ச்சிதாவும் வீட்டிலேயே இருக்கப் பிடிக்காமல் டெல்லியிலேயே ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். கை நிறைய பணம், நிறைய நண்பர்கள் என்று செல்லும் அந்த அல்ட்ரா மாடர்ன் பெண்ணுடைய வாழ்வில் வருகிறான் ஸ்ரீதர் என்னும் சென்னைப் பையன்.

தாய் தந்தையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும், தங்கைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பதற்காக சேரிப்பகுதியில் தனியாக வசிக்கிறான் ஸ்ரீதர். அவனுடைய சொந்தக் கதையைக் கேட்ட அர்ச்சிதா தன்னுடைய நான்கு படுக்கையறை கொண்ட வீட்டிலேயே அவனைத் தங்கவைத்துக்கொள்கிறாள். இந்த லிவிங் டுகதர் வாழ்க்கை அவனுக்குப் புதிதாக இருந்தாலும் போகப்போக பழகிவிடுகிறது. கூடவே அவனுக்கு அவள்மேல் காதலும் வருகிறது. அதற்கான காரணங்களை அழகாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.

திருமணத்தில் கொஞ்சம்கூட நாட்டமே இல்லாத அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தி அர்ச்சிதாவின் கோபத்துக்கு ஆளாகிறான். வீட்டை விட்டும் வெளியேறுகிறான். அதன்பின் தனியாக வாழும் அர்ச்சிதாவுக்கு நிகழும் சில சம்பவங்கள் உறவுகள் எவ்வளவு பலம் வாய்ந்தவை என்று உணர்த்துகின்றன. இதையடுத்து அவள் ஸ்ரீதரைத் தேடிச் செல்கிறாள். பின் என்ன நடக்கிறது என்பதைப் படிக்கையில் கண்ணீர் வருகிறது.

கதையின் பெரும்பகுதி இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடலாகத்தான் செல்கிறது. நூலாசிரியர் அதிக அளவில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல் கதைக்குத் தேவையான அளவில் வைத்திருப்பது கதை ஓட்டத்தை, சூழலைப் புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. அர்ச்சிதா பணக்காரி, அவளது வாழ்க்கை ஆடம்பரங்கள் நிறைந்தது என்பதற்காக ஆசிரியர் கொடுக்கும் வர்ணனைகள் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் முதல் மூன்று அத்தியாங்கள் கடந்ததும் இவை காணாமல் போய்விடுகிறது.

இந்த நாவலின் மற்றுமோர் முக்கிய சிறப்பு ஸ்ரீதரின் பாத்திரப்படைப்பு. தன் காதலை அர்ச்சிதாவிடன் எப்படிச் சொல்வது என்று தவிக்கும் வேளையும் அவளது கழுத்தில் தங்கச் செயின் ஒன்றைக் கட்டிவிடும் சமயம் தாலியே கட்டிய பிரமிப்பில் இருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று - "எண்பது வயசுல கணவன் மனைவி ஒண்ணா சேர்ந்து வாக்கிங் போவாங்களே, அந்த டேட்டிங் எவ்ளோ அழகு தெரியுமா? தொண்ணூறு வயசுல பொண்டாட்டி செத்துப் போயிட்டான்னு தெரியும்போது மகன், மருமகப் பேரன்னு யாரையுமே மதிக்காம, கையில் குச்சியப் பிடிச்சுக்கிட்டே தள்ளாடித் தள்ளாடி நடந்துபோய் சீக்கிரமே அவ போன இடத்துக்கு நான் போகமாட்டேனான்னு தனியா அழுகற காதல்"

இக்காலத்து நவநாகரீக நங்கையர் இந்த நாவலைப் படிப்பார்களாயின் கண்டிப்பாக தாம் எந்த ரீதியில் போய்க்கொண்டிருக்கிறோம் உணர்வார்கள்.

******************************************************************************************************
வெளியீடு: மதுரா பதிப்பகம், திருச்சி

பக்கங்கள்: 181

விலை: ரூ.100

தினமலரில் தொடராக வெளிவந்தது.

ஆசிரியரின் வலைப்பூ: http://kavingarpadmavathy.blogspot.com/
******************************************************************************************************

11 comments:

 1. டிஸ்கவரில ஒரு தபா இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது கம்யூனிஸ்ட்டு, சோஷலிச்ப் புரட்சின்னு ஏதோ சொல்ல போரடிக்கப் போவுதோன்னு நினைச்சு கீழ வெச்சுட்டு அப்பால நகந்துட்டேன் ஸ்,பை. வாங்கிருக்கலாம்னு இப்பத் தோணுது.

  ReplyDelete
 2. ஸ்பை, தலைப்பை பார்த்ததும் நானும் அப்படித்தான் நினைச்சேன்.. நீங்க எழுதின விமர்சனத்த படிச்சதும் அந்த புத்தகத்தை படிக்கும் ஆவல் வந்திட்டுது.. சூப்பரா எழுதறீங்க ஸ். பை

  ReplyDelete
 3. ஸ்பை விமர்சித்த விதம் அருமை.. ரொம்பவே தேர்ந்த பக்குவப்பட்ட எழுத்து நடை...

  விமர்சனமும் அருமை... புக்க நான் புக் பண்ணிக்கிறேன் :-)

  ReplyDelete
 4. சூப்பர் விமர்சனம்...!

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம். எங்கள் ஊர் தான் கதைக்களமா..... படிக்கிறேன் ஸ்.பை.

  ReplyDelete
 6. ஒரு புத்தகத்தை வாங்கத்தூண்டும் வகையான சிறப்பான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. தற்காலப் பெண்கள் இப்படி இருக்கிறார்களா என்று அதிசயப் பட வைக்கிறது. நல்ல விமர்சனம்.ஸ்.பை.

  ReplyDelete
 8. தங்கள் விமர்சனத்திற்கு நன்றிகள் ... ஏதேர்சியாக படிக்க நேர்ந்தது ..பத்மாவதி

  ReplyDelete
 9. சிறப்பான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி! ஆசிரியர் வே.பத்மாவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 10. உறவுகள் எவ்வளவு பலம் வாய்ந்தவை என்று உணர்த்துகின்றன ... நிதர்சன உண்மை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!