Sunday, May 11, 2014

இரண்டு வரிக் காவியம்

படைப்பாக்கம் : ஸ்ரீனிவாஸ் பிரபு

லகிலேயே பைபிளுக்கு அடுத்து மிக அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதும், உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுவதும், மனிதனால் மனிதனுக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை வழிகாட்டியுமான திருக்குறளிற்கு சமீபத்தில் தமிழில் வந்திருக்கும் தெளிவுரை நூல் தான்... ‘இரண்டு வரி காவியம். ’

பிரபல நாவலாசிரியர்கள் திருக்குறளிற்கு தெளிவுரை எழுதுவது புதிதில்லை, இருபதாண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதியிருந்தார், இப்போது தன் வசீகர எழுத்து நடையால் படிப்பவர் மனதை கொள்ளை கொள்ளுகிற பட்டுக்கோட்டை பிரபாகர் தன் தெளிவுரையை தந்திருக்கிறார்.  எத்தனையோ பேர் திருக்குறளுக்கு இதற்கு முன் உரை எழுதியிருக்க... இந்த ‘இரண்டு வரிக் காவிய’த்தில் அப்படி என்ன சிறப்பு? என்று பார்த்தால் ஒன்றல்ல... பல சிறப்புகள் இருக்கின்றன.

முதலாவது... உரையாசிரியர் பி.கே.பி. மிகவும் சுருக்கமாக  எளிமையாக வள்ளுவரின் வரிகளுக்கு தெளிவுரை தந்திருப்பது!

இரண்டாவது.... இரண்டு வரிகளில் வள்ளுவர் எழுதிய திருக்குறள் அனைத்திற்கும் அளவெடுத்தது போல் அதே இரண்டே வரிகளில் பளிச் பளிச்சென தெளிவுரையை எளிமையாகவும், இயல்பான வார்த்தைகளாலும் தந்திருப்பது அழகாக அர்த்தப்படுத்துகிறது.

மூன்றாவது... ஒவ்வொரு குறளிற்கும் இரண்டு வரிகளில் அர்த்தம் தந்ததோடு, ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் அந்த அதிகாரம் குறித்தான ‘தொகுப்பு‘ (நாலே வரிகளில்),

நான்காவது... அதிகாரத்தின் சுருக்கம் (இரண்டே வரிகளில்,

ஐந்தாவது... வள்ளுவன் நீதி என்று இரண்டே வார்த்தைகளில் வள்ளுவர் அந்த அதிகாரத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை சிறு தலைப்புகளில் அடுக்கியிருப்பது. இத்தனை சிறப்புகளுடன் கூடிய இந்த உரை நூல் ஆசிரியரின் அரிய முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. 

உதாரணமாக இல்வாழ்க்கை  - அதிகாரத்தில் வரும் குறளான...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது          குறள் 45

தெளிவுரை : பண்பான இல்வாழ்க்கை என்றால் அதில் அன்பும், நல்ல செயல்களும் இருக்க வேண்டும்.  

தொகுப்பு : அறநெறிகளுடன் கூடிய இல்லற வாழ்க்கை நடத்துபவர் அன்பு கொண்டும், பெற்றோர், வாழ்க்கைத்துணை, மக்கள், உறவினர், துறவிகள், பசியால் வாடுவோர் இவர்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும். செல்வத்தை பிறருடன் பகிர்ந்துண்டு, பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் வாழ்ந்தால் அவர்கள் தெய்வமாக மதிக்கப் படுவார்கள்

அதிகாரச் சுருக்கம் :  இல்வாழ்க்கை சிறக்க அன்பும் அறநெறியும் தேவை,

வள்ளுவன் நீதி :  அன்பு செய்!

ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பொருத்தமான கோட்டு ஓவியங்களும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது, (ஓவியம் : தமிழ்). திருக்குறளை புரிந்து கொள்ள ஒரு எளிமையான தெளிவுரை.

=====================================================
வடிவமைத்தவன் (பாலகணேஷ்) தரும் சிறுகுறிப்பு : “நம்மில் பெரும்பாலானவர்கள் பள்ளிப் பாடங்களில் வரும் திருக்குறள்களை மட்டுமே மனப்பாடம் செய்து பொருள் அறிந்திருக்கிறோம். எல்லாக் குறள்களையும் படிச்சு ரசிக்கணும்கறது என் ஆசை. அதை முன்னிட்டே குறளுக்கு உரை எழுதும் பணியை நான் மேற்கொண்டேன். ஒரு உழவனாக, விஞ்ஞானியாக,. ஆசிரியராக. இன்னும் இன்னும் பல பரிமாணங்களில் வள்ளுவர் வியக்க வைக்கிறார். மிகுந்த சிரத்தையுடன், மனநிறைவுடன் இந்தப் பணியைச் செய்திருக்கிறேன். இது எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும நிச்சயம்” என்று குறிப்பிட்டார் திரு.பி.கே.பி. இந்தப் பணியை என்னிடம் தரும்போது! அது  எத்தனை நிஜம் என்பதைப் படிக்கையில் உணர்வீர்கள். எழுத்துப் பிழை நெருடலாக இருக்கக் கூடாது என்பதற்காக நான்கு முறை படித்து பிழை திருத்தம் செய்யப்பட்டது என்றால் புத்தகத் தயாரிப்பில் அவரது அக்கறையை என்ன சொல்ல? இரண்டே பக்கங்களில் குறள் விளக்கம். அதிகாரச் சுருக்கம். வள்ளுவரின் நீதி, தவிர படமும் இடம்பெற வேண்டும் என்கிற சவாலான பணியை மேற்கொண்டு நிறைவாக முடித்த திருப்தி நூலைப் பார்க்கையில் எல்லாம் என்னுள்.
=====================================================


ஆசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியீடு : ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், 37/1, கெனால் போங்க் ரோடு, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020. போன்  : 044- 24415709 விலை : ரூ.150/- பக்கங்கள் : 280

13 comments:

 1. சமீபத்தில்தான் எதோ ஒரு புத்தகத்தில், அல்லது நாளிதழில் நூல் விமர்சனம் படித்தேன். இதே பாயிண்டுகள் அவர்களும் தந்திருந்தார்கள்.

  //எழுத்துப் பிழை நெருடலாக இருக்கக் கூடாது என்பதற்காக நான்கு முறை ப்டித்து பிழை திருத்தம் செய்யப்பட்டது என்றால் புத்தகத் தயாரிப்பில் அவரது அக்கறையை என்ன செர்ல்ல?//

  பிழை பற்றிச் சொல்லும் இந்த வரிகளில் நிரடும் பிழைகள்!

  வாங்கலாம் என்றுதான் தோன்றுகிறது!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் படித்த அந்த நூல் விமர்சனத்தை எழுதியிருந்தவரும் இக்கட்டுரையின் ஆசிரியர் தாங்க. அவர் விரிவா எழுதியிருந்ததை சுருக்கிட்டாங்கன்றதால இங்க முழுமையா வெளியிட்டிருக்கோம். அப்புறம்... புத்தகத்தை தான் ப்ரூப் பார்த்தாங்கன்னு சொன்னேன். பதிவையா? ஹி... ஹி... ஹி... அவசியம் வாங்கிப் படியுங்க ஐயா.

   Delete
  2. //நீங்கள் படித்த அந்த நூல் விமர்சனத்தை எழுதியிருந்தவரும் இக்கட்டுரையின் ஆசிரியர் தாங்க.//

   அதுசரி... எதில் வந்தது?

   Delete
 2. எ.பி. புத்தகத்தில் தான் இருக்காது. பதிவில் இருக்குமா? ஶ்ரீராம் சொல்லி இருக்கும் பிழையைத் திருத்துங்க. இல்லைனா இம்பொசிஷன்! :))))

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. திருத்திட்டோம்..

   Delete
 3. அவசியம் விரைவில் வாங்கிப் படிக்க வேண்டும்... நன்றி வாத்தியாரே... உங்கள் கைவண்ணத்தையும் ரசிக்க வேண்டும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. குறளைப் போலவே சுருக்கமான சிறப்பான விமர்சனம். என்றைக்கும் வாழ்க்கையோடு தொடர்புடைய அற்புதமான குறள்களை அவற்றின் பொருள் புரிந்து வாசித்து அறிகையில் உண்டாகும் மகிழ்வுக்கு அளவே இல்லை. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களது முயற்சி பாராட்டுக்குரியது. ஆசிரியரின் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்து வழங்கிய தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் கணேஷ்.

  ReplyDelete
 5. அவசியம் வாங்கனும் போல இருக்கு. கணேஷ் அண்ணா! எனக்கொரு புத்தகம் பார்சல்

  ReplyDelete
 6. கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டும்! இரு வரிக் காவியத்தை அதுவும் தங்கள் கை வண்ணத்துடன் வெளிவந்த புத்தகத்தை ரசித்திட வேண்டும்!

  ReplyDelete
 7. கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகம் என்று புரிகிறது. கணேஷ் முடிந்தால் வாங்கி வையுங்கள். சென்னை வரும்போது உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்.....

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. ஆஹா ... திருக்குறளுக்கு இன்னொரு பெயர் ‘இரண்டு வரிக் காவியமா’ சபாஷ் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete

இது... உங்க ஏரியா!